Published:Updated:

விஜய் Vs எஸ்.ஏ.சி மோதல்: குடும்பச் சண்டையா... அரசியல் வருகைக்கான முன்னோட்டமா?

எஸ்.ஏ.சி - விஜய்
எஸ்.ஏ.சி - விஜய்

நடிகர் விஜய், அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விவகாரத்தில், `தந்தைக்கும் மகனுக்கும் இடையே விரிசல்... இல்லை, தந்தையும் மகனும் சேர்ந்துகொண்டு அரசியலுக்காக ஆழம் பார்க்கிறார்கள்' என மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், `அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நவம்பர் 5-ம் தேதியன்று புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்தப் புதிய கட்சிக்கு பொதுச்செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், தலைவராக பத்மநாபன், பொருளாளராக ஷோபா சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்திருக்கிறார். இதையடுத்து, `அரசியலில் முதல் அடியை எடுத்துவைத்தார் விஜய்’ எனச் செய்திகள் பரவ ஆரம்பித்தன. ஆனால், எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய இயக்கத்துக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென அதிர்ச்சியைக் கிளப்பினார் நடிகர் விஜய். `தந்தைக்கும் மகனுக்கும் இடையே விரிசல்... இல்லை, தந்தையும் மகனும் சேர்ந்துகொண்டு அரசியலுக்காக ஆழம் பார்க்கிறார்கள்’ என மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர்
வி.ஸ்ரீனிவாசுலு

இது தொடர்பாக பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்,``1993-ல் விஜய்க்காக ரசிகர் மன்றம் தொடங்கினேன். சில ஆண்டுகள் கழித்து அதை நற்பணி மன்றமாக மாற்றினேன். பின்னர், விஜய் மக்கள் இயக்கமாக உருவாக்கினேன். 25 வருடங்களாக நான் இந்த அமைப்பை நடத்திவருகிறேன். என்னுடன் விஜய் ரசிகர்கள் பலர் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு ஓர் அங்கீகாரம் வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இது முழுவதும் நான் எடுத்த முடிவு மட்டுமே. விஜய்க்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை '' என்று கருத்து தெரிவித்தார்.

நடிகர் விஜய் மற்றும் அவர் தந்தை எஸ்.ஏ.சி-யின் மாறுபட்ட செயல்பாடுகள் குறித்து, சீனியர் அரசியல் பிரமுகர் ஒருவர் கூறும்போது, ``அப்பாவும் மகனும் சேர்ந்து அரசியல் நாடகம் போடுகிறார்கள். தற்போது சினிமாவில் உச்சத்தில் விஜய் இருப்பதால், தொழிலில் எந்தப் பிரச்னையும் வரக் கூடாது என்பதால் விஜய்க்கு சம்பந்தமில்லாத மாதிரி சீன் போடுகிறார்கள். அவருடைய அப்பா கட்சி ஆரம்பித்து அதைச் செயலாக்கத்துக்குக் கொண்டுவர சில காலம் ஆகும். 2026 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் நடிகர் விஜய், அப்பா ஆரம்பித்த கட்சியில் இணைவார். அதற்காகத்தான், தலைவர் பதவியில் திருச்சி பத்மநாபன் என்பவரை டம்மியாக நியமித்திருக்கிறார்கள். இது ஓர் அரசியல் கேம். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தேர்தலைச் சந்திக்க ஏதுவாக பூத் கமிட்டிகளை நியமித்துவந்தார்கள். இந்த விஷயம் நடிகர் விஜய்க்கு தெரிந்தேதான் நடந்தது. அதெல்லாம் நடக்காததுபோல, இப்போது அப்பாவும் மகனும் எங்கள் காதில் பூ சுற்றப்பார்க்கிறார்கள்'' என்கிறார் காட்டமாக.

பத்மநாபன்
பத்மநாபன்

இது ஒருபுறமிருக்க, விஜய் மக்கள் மன்றத்தினர் மத்தியில் புதுக் குழப்பம் ஆரம்பித்துவிட்டது. விஜய் தரப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தாலும், ரசிகர்கள் எஸ்.ஏ.சி கோஷ்டி, விஜய் கோஷ்டி என்று இரு வேறாகப் பிரிந்து நிற்பதாகப் புலம்புகிறார்கள் சில மக்கள் இயக்க நிர்வாகிகள். கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் பத்மநாபன், ஏற்கெனவே இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டவர். அவரை அழைத்து தலைவர் பதவியில் உட்காரவைத்திருக்கிறார் எஸ்.ஏ.சி. இவரைப்போலவே, மன்றத்திலிருந்து ஆங்காங்கே நீக்கப்பட்ட சிலர் எஸ்.ஏ.சி கோஷ்டியில் இருக்கிறார்கள். இவர்கள் ஒத்துழைப்புடன்தான் கட்சியை எஸ்.ஏ.சி நடத்தப்போகிறார். ஆனால், விஜய் கோஷ்டியினர், எஸ்.ஏ.சி மீது கடும் கோபத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

`என் பெயரையோ, இயக்கத்தின் பெயரையோ பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை!’ - நடிகர் விஜய்

திருச்சி பத்மநாபனைத் தொடர்புகொண்டு அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``நீங்கள் தற்போது விஜய் ரசிகர் மன்றத்தில்தான் இருக்கிறீர்களா... கடந்த ஜூன் மாதம் உங்களை மன்றத்திலிருந்து அதிகாரபூர்வமாகத் தலைமை நீக்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியானதே..?’’

``மாநில மன்றத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி என்.ஆனந்து என்னை நீக்கினார். எவ்வித விளக்கமும் கேட்கவில்லை. அப்பா (விஜய் அப்பா எஸ்.ஏ.சி) `என்னை நீக்கவில்லை’ என்றார். மறுபடியும் எனக்கு அப்பா பதவி கொடுத்தார்.’’

``திருச்சி மாவட்ட மன்றத்தில் எதிர்ப்பு கோஷ்டியினர் இருக்கிறார்களா?’’

``ஆமாம்.’’

``புதுக் கட்சியின் தலைவர் நீங்கள். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் முன்பு, 100 பேரிடம் கையெழுத்து, வீடியோ என்று நிறைய சட்ட சம்பிரதாயங்களைச் செய்திருக்க வேண்டுமே... தலைவர் பதவிக்கான இடத்தில் நீங்கள் கையெழுத்துப்போட்டீர்களா?’’

``அதெல்லாம் அப்பாவுக்குத்தான் தெரியும். எனக்குத் தெரியாது. அவர் பார்த்துக்கொள்வார். தலைவர் பதவிக்கான இடத்தில் நான் கையெழுத்துப்போட்டேன்.’’

நடிகர் விஜய்யுடன் குடமுருட்டி கரிகாலன்
நடிகர் விஜய்யுடன் குடமுருட்டி கரிகாலன்

பத்மநாபனை நீக்கிவிட்டு, திருச்சி மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து மாவட்டத் தலைவர்களை நடிகர் விஜய் நியமித்திருக்கிறார். அவர்களில் ஒருவர், திருச்சி (தெற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த குடமுருட்டி கரிகாலன். அவரிடம் புதிய கட்சி சர்ச்சை குறித்துப் பேசினோம்.

``கட்சிக்குத் தலைவராக பத்மநாபனை நியமித்திருக்கிறாரே எஸ்.ஏ.சி... நீங்கள் ரசிகர்மன்ற மாவட்டத் தலைவர். இரு வேறு கோஷ்டிகளாகப் பிரிந்து நிற்பதாக ரசிகர்கள் நினைக்கிறார்களே?'' என்று அவரிடம் கேள்வியை முன்வைத்தோம்.

அதற்கு பதிலளித்த குடமுருட்டி கரிகாலன், ``பத்மநாபனை 2004-ல் எஸ்.ஏ.சி சார் மன்றத்தைவிட்டு நீக்கினார். பிறகு, அவர் மன்னிப்புக் கடிதம் கொடுத்துச் சேர்ந்தார். இந்த வருடம் ஜூன் மாதம், மன்றத் தலைமை மீண்டும் அவரை நீக்கியது. இப்போது திடீரென எஸ்.ஏ.சி சார் பத்மநாபனைக் கட்சியில் சேர்த்திருக்கிறார். நாங்கள், இளைய தளபதி சொல்கிறபடி செயல்படுகிறோம். எங்கள் பின்னால்தான் அனைத்து மன்ற நிர்வாகிகளும் இருக்கிறார்கள். பத்மநாபன் பின்னால் யாரும் இல்லை'' என்றார்.

ஆக, மன்றத்தில் குழப்பங்கள் அரங்கேற ஆரம்பித்துவிட்டன. இன்று எஸ்.ஏ.சி செய்தியாளகர்ளைச் சந்தித்தபோது, பல்வேறு கேள்விகளுக்கு மழுப்பான பதிலை சொல்லிவிட்டு நழுவினார்.

நடிகர் விஜய்யைச் சுற்றிலும் என்னவோ நடக்கிறது... மர்மமாய் இருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு