Published:Updated:

விஜய் Vs எஸ்.ஏ.சி: சமரசப் பேச்சுவார்த்தையில் இழுபறி... வீட்டில் கட்சி அலுவலகம்!

எஸ்.ஏ.சி - விஜய்
எஸ்.ஏ.சி - விஜய்

சென்னை சாலிகிராமத்திலுள்ள எஸ்.ஏ.சி வீட்டின் ஒரு பகுதியைக் கட்சி அலுவலகமாக மாற்றும் பணி இரவு, பகலாக நடந்துவருகிறது. அதேநேரம், ரசிகர் மன்ற அலுவலகத்துக்கு நடிகர் விஜய் வரும் புதன்கிழமை வரவிருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்க்கும், அவரின் தந்தை எஸ்.ஏ.சி-க்கும் இடையே பனிப்போர் நடந்துவருகிறது. விஜய் பெயரில் புதிய அரசியல் கட்சியைப் பதிவுசெய்ய எஸ்.ஏ.சி விண்ணப்பித்த விவகாரத்தில் மோதல் வெடித்திருக்கிறது. எஸ்.ஏ.சி இயக்கிவரும் க்ரைம் த்ரில்லர் ஒன்றின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. அதற்காக இன்று (நவம்பர் 9) முதல் சில நாள்கள் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கிறாராம். அவர் செல்வதற்கு முன்னர், விஜய் குடும்பத்துக்கு நெருக்கமான சிலர், சூழ்நிலையை அமைதிப்படுத்தும் வகையில் இருவரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 8-ம் தேதி வீடியோ காலில் விஜய்யும், எஸ்.ஏ.சி-யும் பேசியதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இது பற்றி விஜய் தரப்பினரிடம் நாம் கேட்டபோது, ``டெல்லியில் புதுக்கட்சியை பதிவுசெய்யக் கொடுத்த விண்ணப்பத்தை முதலில் எஸ்.ஏ.சி வாபஸ் பெற வேண்டும். மீடியாக்களில் புஸ்ஸி ஆனந்த் பற்றிப் பேசுவதை உடனே நிறுத்த வேண்டும். அவருடன் இருக்கும் அனைத்து இந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர், எம்.ஜி.ஆர் நம்பியைக் கழற்றிவிட வேண்டும். இவர்தான் அரசியல் ஆலோசனை வழங்கிவருகிறார். கட்சிப் பதிவு விண்ணப்பப் பிரதி மீடியாக்களில் லீக் ஆன விஷயத்தில் நடிகர் விஜய் ரொம்பவே அப்செட். யார் லீக் செய்தது என்பதை விஜய் நேரிடையாக விசாரித்துவிட்டார். விஜய் பெயர் இல்லாமல் அரசியல் கட்சியை எஸ்.ஏ.சி தொடங்குவதில் எங்களுக்குப் பிரச்னையும் இல்லை. விஜய் பெயரைப் பயன்படுத்த வேண்டுமானால், சில காலம் பொறுத்திருக்க வேண்டும் என்று பேசியதாகக் கேள்விப்பட்டோம்’’ என்றார்கள்.

விஜய் Vs எஸ்.ஏ.சி மோதல்: குடும்பச் சண்டையா... அரசியல் வருகைக்கான முன்னோட்டமா?

அதையடுத்து, எஸ்.ஏ.சி தரப்பினரிடம் நாம் கேட்டபோது, ``மனுவை வாபஸ் பெறுவது பெரிய விஷயமில்லை. உடனே என்னுடைய கண்டிஷனை விஜய் செய்தால், நான் வாபஸ் வாங்கிவிடலாம். தற்போது மன்றப் பொறுப்பிலிருக்கும் புஸ்ஸி ஆனந்தை உடனடியாகத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். இவர் தரப்பினர்தான், புதுக்கட்சி பதிவு செய்ய கொடுத்த விண்ணப்பத்தை லீக் செய்து குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.

எஸ்.ஏ.சி
எஸ்.ஏ.சி

37 மாவட்டத்துக்குத் தலா இருவரை நான் நியமித்திருந்தேன். வேண்டுமென்றே மாவட்டங்களைப் பிரித்து அவரது ஆட்கள் 115 பேரை நியமித்திருக்கிறார். தேவையில்லாதவர்களை நீக்க வேண்டும். ஆனந்த் பற்றிய புகார் பட்டியல் என்னிடம் இருக்கிறது. அது பற்றி விசாரிக்க வேண்டும். எம்.ஜி.ஆர் நம்பி 30 வருட நண்பர்; அவ்வளவுதான். எனக்கு உதவினார். அவரைக் கண்டு சிலர் பயப்படுகிறார்கள். அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று எஸ்.ஏ.சி நினைப்பதாகத் தெரிகிறது’’ என்கிறார்கள்.

`என் பெயரையோ, இயக்கத்தின் பெயரையோ பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை!’ - நடிகர் விஜய்

சென்னை சாலிகிராமத்திலுள்ள எஸ்.ஏ.சி வீட்டின் ஒரு பகுதியைக் கட்சி அலுவலகமாக மாற்றும் பணி இரவு, பகலாக நடந்துவருகிறது. அதேநேரம், ரசிகர் மன்ற அலுவலகத்துக்கு நடிகர் விஜய் வரும் புதன்கிழமை வரவிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் வந்தவுடன், அடுத்தகட்ட நிகழ்வுகள் அரங்கேறும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு