Published:Updated:

'தைப் பொங்கலுக்குப் பிறகு தலைவரின் பிளான்'... பொடிவைத்துப் பேசும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்!

விஜய் - மக்கள் இயக்கம்
விஜய் - மக்கள் இயக்கம்

எஸ்.ஏ.சி மற்றும் விஜய் இருவருக்கும் சமாதானம் செய்ய சென்னையிலுள்ள விஜய் உறவினர்கள் முயல்கிறார்கள்.

`எதிர்த்து என்னை ஜெயிப்பதற்கு யாருமில்லை உன்னாலே...’ என்று `பத்ரி’ படத்தில் பாடியிருப்பார் விஜய். ஆனால், இதில் எதிர்பாராத ட்விஸ்ட் என்னவென்றால், இந்தமுறை எதிர்ப்பு என்பது அவருடைய அப்பா எஸ்.ஏ சந்திரசேகரிடமிருந்தே வந்திருப்பதுதான். எஸ்.ஏ.சி தனிக்கட்சி தொடங்கியதும், சில நிமிடங்களிலேயே அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்ததும், அதற்கும் சில மணி நேரத்திலேயே அந்தக் கட்சியிலிருந்த விஜய்யின் அம்மா ஷோபா, தன்னுடைய பொருளாளர் பதவியை ராஜினாமா செய்ததும்... என விஜய் குடும்பத்தைச் சுற்றி அரசியல் காட்சிகள் ஓயாமல் பரபரத்துக்கொண்டிருக்கின்றன.

உண்மையில், விஜய்யைச் சுற்றி என்னதான் நடந்து கொண்டிருக்கிறது, அவருடைய எண்ண ஓட்டம்தான் என்ன? - முழுப் பின்னணிகளையும் தெரிந்துகொள்ள அவருக்கு நெருக்கமானவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.

எஸ்.ஏ.சி - விஜய்
எஸ்.ஏ.சி - விஜய்

பிளவு தொடங்கிய 2012!

முதலில், விஜய் மக்கள் இயக்கத்தினர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்களைப் பார்ப்போம்.

``தளபதி விஜய்க்கும், அவருடைய அப்பாவுக்கும் இடையிலான பிரச்னையின் ஆரம்பம் 2012-ல் தொடங்கியது’’ என ஒரு ஃப்ளாஷ்பேக்கோடு தொடங்கியவர்கள், `` `என்னுடைய அப்பா நிறைய உழைச்சிட்டாரு. அதனால அவருக்கு ஒய்வு கொடுக்கிறேன். இனி எல்லாவற்றையும் புஸ்ஸி ஆனந்த் பார்த்துக்கொள்வார்' என்று 2012-ல் நடந்த இயக்க மீட்டிங்ல, அறிவிச்சாரு தளபதி விஜய். அதேநேரத்தில் எஸ்.ஏ.சி-யிடம் இருந்த நிறுவனத் தலைவர் பதவியை, ஒரு கௌரவப் பதவிபோல அப்படியே தொடரச் செய்தார் விஜய். ஆனாலும், தன்னுடைய அதிகாரத்தை விஜய் பறிச்சிட்டதாவே நினைச்சாரு எஸ்.ஏ.சி. அதிலிருந்து தொடங்கியதுதான் பிரச்னை. `காவலன்' பிரச்னைக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்தது, அதன் தொடர்ச்சியாக `அ.தி.மு.க வெற்றிக்கு மக்கள் இயக்கமும் ஒரு காரணம்’ என்று எஸ்.ஏ.சி பேசியது என இவையெல்லாமே விஜய்யை ரொம்பவே தர்மசங்கடப்படுத்தின. குறிப்பாக `தலைவா’, `கத்தி’ என விஜய் படங்களின் ரிலீஸுக்கு ஏற்பட்ட பிரச்னைகளுக்கு, அப்பாவின் இப்படிப்பட்ட பேச்சுக்களும்தான் ஒருவகையில் காரணம் என நினைத்தார் விஜய். மேலும் அ.தி.மு.க-வுக்கு அப்போது விஜய் ஆதரவு கொடுத்ததுகூட, அவரின் அப்பாவின் கட்டாயத்தினாலதான்னு அதற்குப் பிறகான இயக்க ஆலோசனை கூட்டங்களில் கூறியிருந்தார் விஜய்.

ஸ்கெட்ச் போட்ட எஸ்.ஏ.சி!

தொடக்கத்திலிருந்தே எஸ்.ஏ.சி-க்கு அரசியல் ஆசையிருக்கு. ஆனால்,`இனி அரசியல் உள்ளிட்ட எதுவென்றாலும் தாமே சொந்தமாக முடிவெடுத்துக்கொள்ளலாம்' என்ற முடிவுக்கு வந்தார் விஜய். அது எஸ்.ஏ.சி-க்குப் பிடிக்கவில்லை. விஜய்யை நேரடி அரசியலுக்கு அழைத்து வர பலமுறை முயற்சி செஞ்சாரு. இந்தநிலையில்தான், கருணாநிதி - ஜெயலலிதா இல்லாத 2021 தேர்தல் வெற்றிடத்தை மக்கள் இயக்கத்தின் மூலம் பூர்த்தி செய்யலாம்னு கால்குலேஷன் போட்டாரு. இந்தநேரத்துலதான் ரஜினி அரசியல் முயற்சி, தனிக் கட்சி தொடங்கிய கமல் போன்ற காட்சிகளெல்லாம் தென்பட, உடனடியாக புதுக் கணக்கு போடத் தொடங்கினார் எஸ்.எஸ்.சி.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்

`கமல்-ரஜினி-விஜய்’ - எஸ்.ஏ.சி-யின் புது டீல்:

`கமல், ரஜினி-யோடு விஜய் மக்கள் இயக்கமும் கூட்டணியில் இணைந்தால் மாற்றம் உருவாகும்’ எனத் திட்டமிட்டு, அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்தார் எஸ்.ஏ.சி. இதெல்லாம் தளபதி விஜய் காதுகளுக்குப் போக, அவர் அப்செட். இந்த நேரத்தில்தான் தீவிர அரசியலில் ரஜினி நுழையாமலிருக்க, கமல் மூன்றாவது அணி முயற்சியில் இருக்க, இதையெல்லாம் பார்த்து விஜய்யை நேரடி அரசியலுக்குக் கொண்டு வர முயன்றார் எஸ்.ஏ.சி. அப்பா-மகன் பேசிக்கொள்ளாததால், உறவினர்கள் மூலம் தளபதி விஜய்க்கு தூது அனுப்பிக்கொண்டே இருந்தார் எஸ்.ஏ.சி. அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை விஜய். இதனால், எஸ்.ஏ.சி-க்குக் கோபம் உச்சத்துக்கு ஏற, அதற்கடுத்து அவர் தொடங்கிய சில செயற்பாடுகள்தான் அப்பா-மகனுக்கிடையிலான பிளவை, பகைபோல மாற்றின" என்ற நிர்வாகிகள், ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் தொடர்ந்தார்கள்.

எஸ்.ஏ.சி-யின் ரகசிய மீட்டிங்!

விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து முறைகேடு உள்ளிட்ட புகார்களால் நீக்கப்பட்ட பல நிர்வாகிகளையும் இணைத்து, ஒன்றரை மாதத்துக்கு முன்பு கன்னியாகுமரியில் ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்தினார் எஸ்.ஏ.சி. அதில் காணொலிக் காட்சி மூலம் பங்கெடுத்தார் எஸ்.ஏ.சி. அங்குதான் தனிக்கட்சி தொடங்குவது குறித்து முடிவெடுத்தார்கள். இது எங்க தளபதி காதுகளுக்கு வரவும்தான் அவர் ரொம்பவே கோபமாகி, தன்னுடைய அடுத்த ஸ்டெப்பை எடுத்துவைக்கத் தொடங்கினார்.

எஸ்.ஏ.சந்திரசேகர்,  ஷோபா, விஜய்
எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, விஜய்

செக்வைத்த விஜய்!

விஜய் மக்கள் இயக்கத்தைக் கைப்பற்றும் நோக்கத்தில் சிலர் செயல்படுகிறார்கள் என உணர்ந்துதான், சில நாள்களுக்கு முன்னர் பனையூரில் புதிய நிர்வாகிகளைச் சந்தித்து அரசியல், கொரோனா சூழல் உள்ளிட்ட பலவற்றையும் ஆலோசனை செய்துவிட்டு வாழ்த்தியும் அனுப்பினார் விஜய். அந்தக் கூட்டத்தின் மூலம், விஜய் மக்கள் இயக்கத்தில் முடிவெடுக்கும் அதிகாரமுள்ளவர் யார் என்பதை அனைவருக்கும், குறிப்பாகத் தனது அப்பா எஸ்.ஏ.சி-க்கு உணர்த்தவும் செய்தார் தளபதி. இதை ஜீரணிக்க முடியாமல், எஸ்.ஏ.சி உடனடியாக விஜய்க்குப் பல முறை கால் செய்தார். ஆனாலும் அதை விஜய் அட்டண்ட் செய்யவில்லை.

'இப்போது கட்சி ஆரம்பித்தால் எதிர்காலம் நல்லாயிருக்கும். என்ன முடிவுல இருக்காரு தம்பி விஜய்?' என்று ஷோபாம்மா மூலமாகவும் தூது அனுப்பினார் எஸ்.ஏ.சி. `எதுவாக இருந்தாலும் மக்கள் இயக்கத்திலுள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் பேசித்தான் முடிவெடுக்க முடியும். மேலும், இது கொரோனா காலம்... இந்த நேரத்தில் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதுதான் முக்கியம்' என அதற்கு முற்றுப்புள்ளிவைத்தார் விஜய். பிறகென்ன, ஆத்திரமடைந்த எஸ்.ஏ.சி., விஜய்க்குத் தெரியாமல் தனிக்கட்சி தொடங்கியதிலிருந்து ஏதேதோ பேட்டி கொடுப்பது வரை, சொந்த மகனுக்கே தேவையில்லாமல் நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கிறார்’’ என்றனர் வேதனையான குரலில்.

ரஜினிக்கு ரத்து... விஜய்க்கு விசாரணை - ஐ.டி விவகாரங்களுக்குப் பின் உள்ள அரசியல் என்ன?

விஜய்யைச் சீண்டிய எஸ்.ஏ.சி-யின் பேச்சு!

`தம்பி விஜய்யின் மக்கள் இயக்கத்துக்கு நெருக்கடி கொடுக்காதீர்கள்’ எனப் பலமுறை ஷோபாம்மா சொல்லியும் , எஸ்.ஏ.சி கேட்காமல் கட்டாயப்படுத்தித்தான் ஷோபாம்மாவிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார். அதன் பிறகு விஜய் சாரிடமிருந்து மறுப்பு அறிக்கை வந்த பிறகு, தன்னுடைய பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார் ஷோபாம்மா.

இதைவிட `முறைகேடு புகார்களால் நீக்கப்பட்ட பத்மநாபனையே தலைவராக நியமித்ததெல்லாம் டூ மச். இது சொந்த மகனுடைய புகழையே சிறுமைப்படுத்துற மாதிரி' என விஜய்க்கு நெருக்கமான உறவினர்கள், எஸ்.ஏ.சி-யிடம் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு எஸ்.ஏ.சி-யோ, `அது ஒரு பேச்சுக்காகப் போடப்பட்ட பதவிதான். பிற்பாடு மாத்திக்கலாம். தம்பி விஜய் கூட இருக்கிற புஸ்ஸி ஆனந்த்தான் என்னுடைய டார்கெட்’’ என்று கொதித்திருக்கிறார் எஸ்.ஏ.சி. இதன் தொடர்ச்சியாகத்தான் பிற்பாடு டி.வி பேட்டிகளிலும், ``விஜய்யைச் சுற்றி கிரிமினல்ஸ் இருக்காங்க. நிறைய விஷக் கிருமிகள் இருக்காங்க...’’ என்றெல்லாம் பேச, இதுதான் விஜய்யை ரொம்பவே சீண்டியது' என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

விஜய்
விஜய்

யார் கிரிமினல்? - உறவுகளிடம் கொதித்த விஜய்

``எஸ்.ஏ.சி மற்றும் விஜய் இருவரையும் சமாதானம் செய்ய சென்னையிலுள்ள விஜய் உறவினர்கள் முயன்றார்கள். அப்போது விஜய் குடும்பத்தினர், `கிரிமினல்கள் இருக்காங்கனு எஸ்.ஏ.சி பேசியிருக்காரு. யாரை கிரிமினல்கள்னு சொல்றாரு? அவரைவிட்டு நாங்க எப்பவோ தனியாக வந்துட்டோம். சரி, நாங்க கேட்கிறோம்... மகன்கிட்டகூட சொல்லாம, மக்கள் இயக்கத்துல எல்லா நிர்வாகிகளிடமும் கூடிப் பேசாம, திடுதிடுப்புனு, தன்னிச்சையா தனிகட்சினு அறிவிச்சிருக்காரே... அதுதாங்க உண்மையிலேயே க்ரைம். எஸ்.ஏ.சி-யைச் சுற்றித்தான் நிறைய விஷக்கிருமிகள் இருக்காங்க' எனக் கொதித்திருக்கிறார்கள்" என்கிறார்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்கள்.

விஜய் Vs எஸ்.ஏ.சி: சமரசப் பேச்சுவார்த்தையில் இழுபறி... வீட்டில் கட்சி அலுவலகம்!

எஸ்.ஏ.சி-யின் நெக்ஸ்ட் மூவ்!

தனிக்கட்சிக்கான அலுவலகம் அமைப்பது தொடங்கி பொறுப்புகள் போடுவது வரையிலான பணிகளை எஸ்.ஏ.சி ஆதரவாளர்கள் தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் இயக்கத்தின் பல மாவட்டங்களையும் தொடர்புகொண்டு ஆதரவு கேட்கும் வேலைகளையும் தொடங்கவிருக்கிறார்கள். மறுபுறம், 'புஸ்ஸி ஆனந்தை விஜய்கிட்ட இருந்து பிரிக்காமல் விட மாட்டேன்' என பலரிடமும் பேசிவருகிறார் எஸ்.ஏ.சி.

'தைப் பொங்கலுக்குப் பிறகு  தலைவரின் பிளான்'... பொடிவைத்துப் பேசும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்!

விஜய்-யின் நெக்ஸ்ட் மூவ்!

இதையெல்லாம் கேள்விப்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் முதற்கட்டமாக, `இயக்கத்துக்கு எதிரானவர்களோடு மறைமுகமாகவோ, நேரடியாகவோ தொடர்பு வைத்திருக்க மாட்டேன். என்றும் தளபதி வழியில்' என உறுதிமொழி எடுக்கும் நிகழ்வை மதுரையில் நடத்தியிருக்கிறார்கள். இதை, அடுத்தடுத்து பல மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறார்கள். மற்றபடி ஏற்கெனவே செய்து வந்த பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட மக்கள் இயக்கப் பணிகளைத் தொடரச் சொல்லி புஸ்ஸி ஆனந்த் மூலமாக மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் தகவல் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம், ``நவம்பர் 10-ம் தேதி கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள், பனையூருக்குப் படையெடுத்தனர். அவர்கள், நாங்கள் எப்போதும் தளபதி விஜய்கூடதான் இருப்போம். அவர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்றும் உறுதி கொடுத்துவருகிறார்கள்" எனும் விஜய் மக்கள் இயக்கத்தின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், தொடர்ந்து,``எஸ்.ஏ.சி மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அதன் பிறகு அவர் வகித்த பதவிக்கு வேறு யாரை நியமிக்கலாம் என்றும் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது. அரசியல் உள்ளிட்ட பல விஷயங்களிலும் தைப் பொங்கலுக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் அரங்கேறும்... அதற்கென்றே விஜய்யிடம் தனியாக பொங்கல் பிளானே இருக்கு’’ என்கிறார்கள் புதிர் போட்டபடி.

இந்தநிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த்தைத் தொடர்புகொண்டோம். நான்கைந்து முறை கால் செய்த பிறகே நம் அழைப்பை அட்டெண்ட் செய்தார்.

``விஜய் சார் பெயரில் தொடங்கப்பட்ட புதுக் கட்சியை மறுத்து விஜய் சாரே அறிக்கை கொடுத்துவிட்டார். மற்றபடி எல்லா முடிவுகளும் எப்பொழுதுமே விஜய் சார்தான் எடுப்பார். அவர் என்ன சொல்கிறாரோ, அதைத்தான் நாங்கள் செய்வோம். வேறொன்றும் பேசுவதற்கில்லை " என்று தொடர்பைத் துண்டித்தார்.

 விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்

`விஜய்யைத் தன் கட்சியில் ஐக்கியப்படுத்தியே தீர வேண்டும்' என எஸ்.ஏ.சி தரப்பும், 'இப்போதைக்கு `மாஸ்டர்’ ரிலீஸ், அரசியலுக்குக் காலம் உண்டு. மேலும், அப்படியே அரசியல் என்றாலும் எஸ்.ஏ.சி-யைத் தவிர்த்துதான்' என விஜய் தரப்பும் முடிவில் இருக்கிறார்கள்.

மொத்தத்தில் `தலைவா’ படத்தில் இடம்பிடித்த ஒரு `பன்ச்’தான் நினைவுக்கு வருகிறது.

`தலைவன்கிறது தேடிப் போறதில்லை... நம்மளைத் தேடி வர வேண்டும்...’

உண்மைதான்... மக்களுக்காகப் பிரதிபலன் பார்க்காமல் உழைக்கும்போது தலைவன் என்கிற உயர்ந்த அந்தஸ்தை மக்களே முன்வந்து வழங்குவார்கள். நிச்சயம் அதை விஜய்யும் சரி, எஸ்.ஏ.சி-யும் சரி உணர்ந்தேயிருப்பார்கள்.

அடுத்த கட்டுரைக்கு