Published:Updated:

தேர்தல் ஆணையத்தை நாடத் தயாராகும் விஜய்... சட்ட ஆலோசனையில் எஸ்.ஏ.சி!

விஜய்
விஜய்

``டெல்லி தேர்தல் கமிஷனிடம் மனு கொடுக்க ஆலோசனை நடத்திவருகிறார் விஜய். தனது பெயரை அனுமதியில்லாமல் எஸ்.ஏ.சி பயன்படுத்தியதாகச் சொல்லப்போகிறார்'' என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த வாரம் `அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கடசியைப் பதிவுசெய்தார். கட்சியின் புதிய தலைவராக திருச்சி பத்மநாபன், பொருளாளர் பதவியில் மனைவி ஷோபா ஆகியோரை நியமித்தார். இது தொடர்பான தகவல் வெளியானதுமே, பொருளார் பதவியிலிருந்து விலகுவதாக ஷோபா அறிவித்தார்.

எஸ்.ஏ.சி
எஸ்.ஏ.சி

நவம்பர் 12-ம் தேதியன்று எஸ்.ஏ.சி-யின் புதிய கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் பத்மநாபன் சமூக வலைதளங்களில் பேசிய பேச்சு, திடீர் திருப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. ``போலீஸ் மூலம் டார்ச்சர் அதிகமாகிவிட்டது. பத்து போலீஸார் என் வீட்டுக்கு வந்து தேடிவிட்டுப்போனார்கள். எந்த வழக்கும் என் மீது இல்லை. புஸ்ஸி ஆனந்த் தரும் டார்ச்சர்தான் என்று நினைக்கிறேன். எனது உயிருக்கோ, எனக்கோ ஏதாவது ஆனால் அதற்கு புஸ்ஸி ஆனந்த்தான் காரணம்'' என்று பேச, எஸ்.ஏ.சி தரப்பினர் ஏக டென்ஷனில் இருக்கிறார்கள்.

'தைப் பொங்கலுக்குப் பிறகு  தலைவரின் பிளான்'... பொடிவைத்துப் பேசும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்!

விஜய் அருகில் இருக்கும் மக்கள் இயக்க மாநிலப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த்தான் உள்ளடி பாலிடிக்ஸ் செய்வதாக எஸ்.ஏ.சி வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். அவர் இயக்கிவரும் சினிமா படப்பிடிப்புகளை கவனிக்க சில நாள்கள் சென்றுவிட்டார். நவம்பர் 13-ம் தேதியன்று திரும்பி வருகிறார். படபிடிப்புகளுக்கு இடையே, அனைத்து இந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளரும், சினிமா டைரக்டருமான எம்.ஜி.ஆர் நம்பியிடம் போனில் ஆலோசனை நடத்திவந்தார் எஸ்.ஏ.சி.

`எனது தந்தை தொடங்கியிருக்கும் கட்சிக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ரசிகர்கள் அந்தக் கட்சியில் இணையக் கூடாது’ என்று விஜய் ஏற்கெனவே அறிவித்திருந்தார். திருச்சி மாவட்ட மக்கள் இயக்கத்தின் சார்பில் விஜய் சொல்லும் வழியில் செல்வதாக எஸ்.ஏ.சி-க்கு எதிராகத் தீர்மானம் போட்டனர். வேறு சில மாவட்டங்களும் இதே பாணியில் எஸ்.ஏ.சி-க்கு எதிராகத் தீர்மானம் போட ரெடியானநேரத்தில், விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

 விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்

ஏற்கெனவே, விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாவட்ட லெவலில் புதிய பொறுப்பாளர்களை அறிவிக்க லிஸ்ட்டை ரெடியாக வைத்திருந்தார் புஸ்ஸி ஆனந்த். அந்த லிஸ்ட்டை நவம்பர் 11-ம் தேதியன்று நடிகர் விஜய் அறிவித்தார். பல மாவட்டங்களுக்கு இளைஞர் அணித் தலைவர், தொண்டர் அணித் தலைவர், மாணவர் அணித் தலைவர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு பிரமுகர்களை நியமித்திருக்கிறார். இந்தக் குழப்பமான நேரத்தில் விஜய்யின் இந்த நியமனம் எஸ்.ஏ.சி-க்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

தந்தையா, புஸ்ஸி ஆனந்தா என்கிற விவகாரத்தில் விஜய்யை பொறுத்தவரை, புஸ்ஸி ஆனந்த்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், இந்த விவகாரத்தை எஸ.ஏ.சி விடுவதாக இல்லை.

நம்மிடம் எஸ்.ஏ.சி தரப்பினர் கூறும்போது, ``புதிதாக நியமிக்கப்பட்டிருப்பவர்களில் புஸ்ஸி ஆனந்த்தின் ஆதரவாளர்கள்தான் அதிகம் பதவி பெற்றிருக்கிறார்கள். எஸ்.ஏ.சி-யின் ஆதரவாளர்களைப் புறக்கணித்திருக்கிறார்கள். ஒரிரு நாளில் எஸ்.ஏ.சி படபிடிப்பை முடித்துவிட்டு வரவிருக்கிறார். அவர் வந்ததும், இதற்கு தக்க பதிலடி தரப்படும். பத்மநாபன், பொருளாளர் ஷோபா இருவரையும் நீக்கிவிட்டு புதிய இருவரை நியமிக்கவிருக்கிறார் எஸ்.ஏ.சி’’ என்கிறார்கள்.

விஜய் தரப்பினரிடம் கேட்டபோது, ``டெல்லி தேர்தல் கமிஷனிடம் மனு கொடுக்க ஆலோசனை நடத்திவருகிறார் விஜய். தனது பெயரை அனுமதியில்லாமல் எஸ்.ஏ.சி பயன்படுத்தியதாகச் சொல்லப்போகிறார்'' என்கிறார்கள்.

விஜய் இப்படிச் செய்தால், தேர்தல் கமிஷன் தரப்பில் எஸ்.ஏ.சி-யிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிகிறது. அதற்குத் தகுந்த விளக்கத்தைச் சட்டப்படி கொடுக்க எஸ்.ஏ.சி தரப்பிலும் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு