Election bannerElection banner
Published:Updated:

விராலிமலை: 5 முறை நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை! - நீண்ட இழுபறிக்குப் பின் வென்ற விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

வாக்குப்பதிவு இயந்திரத்திலும், முகவர்களின் ஆவணங்களின் எண்களும் மாறுபட்டிருந்ததாலும், ஓர் இயந்திரத்தில் சீல் இல்லாமல் சணல் கொண்டு வாக்குப்பதிவு இயந்திரம் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறிய திமுக-வினர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரினர்.

விராலிமலை தொகுதியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூன்றாவது முறையாகக் களமிறங்கினார். கடந்த 2016-ல் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பழனியப்பனே இந்த முறையும் போட்டியிட்டு அமைச்சருக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்திருந்தார். பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. புதுக்கோட்டையின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளைப்போல் விராலிமலை தொகுதியிலும் காலை 8:30 மணிக்கு வாக்கு எண்ணப்பட்டது. மற்ற ஐந்து தொகுதிகளில் முடிவுகள் இரவு 11 மணிக்குள் அறிவிக்கப்பட்ட நிலையில், விராலிமலை தொகுதியில் ஐந்து முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 1 மணிக்குத்தான் 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

விராலிமலையில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு வாக்கு இயந்திரத்தில் இருந்த எண்ணும், ஆவணங்களில் இருந்த எண்ணும் வேறுபட்டிருந்தன. இதனால், சந்தேகத்தை கிளப்பிய தி.மு.க முகவர்கள், அதிகாரிகளிடம் விவாதம் செய்தனர். நீண்ட விவாதத்துக்குப் பிறகு வி.வி.பேட் இயந்திரம் திறந்து வாக்கு எண்ணப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதன் பிறகு 2-வது சுற்றுக்கான வாக்கு பெட்டிகள் எடுத்துவரப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

அதிலும் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்களிலுள்ள எண்கள் மாறுபட்டிருந்தன. இயந்திரத்திலும், முகவர்கள் வைத்துள்ள ஆவணங்களிலிருக்கும் எண்களும் வேறுபட்டு வந்ததால், வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறிய திமுக-வினர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரினர். இது குறித்து விராலிமலை தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் இணைந்து தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான உமா மகேஸ்வரியிடம் மனு கொடுத்தனர். தொடர்ந்து சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டது. அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட நேரத்துக்குப் பிறகு தி.மு.க-வினரின் சந்தேகங்களை அதிகாரிகள் நிவர்த்தி செய்தனர்.

தொடர்ந்து, தி.மு.க-வினர் வாக்கு எண்ணிக்கை நடத்த எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூற சுமார் ஐந்து மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு மதியம் 2 மணிக்கு மீண்டும் விராலிமலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இரண்டு சுற்று எண்ணப்பட்ட நிலையில் அ.தி.மு.க வேட்பாளர் விஜயபாஸ்கர், தி.மு.க வேட்பாளரைவிடவும் 4,000 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். 5-வது சுற்று தொடங்கிய நிலையில் மீண்டும் நிறுத்தப்பட்டது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாடாவுக்குச் சணல் போட்டுக் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர் சர்ச்சைகளால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, ``தற்போது வரையிலும் அமைச்சர்தான் முன்னிலையில் இருக்கிறார். எப்படியும் வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வாக்கு எண்ணிக்கையைத் தடுக்கின்றனர். வாக்குகளை எண்ண எத்தனை மணி நேரம் தாமதமானாலும், எத்தனை நாள் ஆனாலும் வாக்கு எண்ணாமல் இங்கிருந்து அதிமுக-வினர் யாரும் செல்ல மாட்டோம் என்று கூறி அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு இயந்திரத்திலும், முகவர்களின் ஆவணங்களின் எண்கள் மாறுபட்டிருந்ததாலும், ஓர் இயந்திரத்தில் சீல் இல்லாமல் சணல் கொண்டு வாக்குப்பதிவு இயந்திரம் கட்டப்பட்டிருந்ததாலும் இதனால், வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறிய திமுக-வினர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரினர். பிரச்னைக்குரிய 13 வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்படாமல் ஓரங்கட்டப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

இது பற்றிப் பேசிய அமைச்சரோ, `அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எனக்கு வெற்றி கிடைக்கப்போகிறது என்று திட்டமிட்டே தி.மு.க-வினர் நிறுத்தப் பார்க்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் பிரச்னை என்றால், அதைத் தனியாக எடுத்துவைத்துவிட்டு இறுதியாக அது பற்றிப் பேசுவதுதான் வழக்கம். அதற்காக, வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்... உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும்’ என்றார்.

இதற்கிடையே பேசிய தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், "முதல் சுற்றிலேயே 6-வது மேசை பெட்டியில் 17சி படிவத்துக்கும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்த நம்பருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. விவிபேடிலாவது சரியா இருக்கும்னு பார்த்தா அதுலயும் வேற நம்பர். வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் இந்த மையத்தில் இரண்டு மணி நேரம் பவர்கட் பண்ணியிருக்காங்க. முறைகேடு நடந்திருக்கலாம். ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் சணல் கட்டப்பட்டு இருக்குது. நிறைய குளறுபடி. ஏற்கெனவே வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாள் 7-ம் தேதி காலையில் ஸ்ட்ராங்க் ரூமுக்கு வெளியே வாக்கு இயந்திரத்திலிருந்த ஒரு நாடா வெளியே கிடந்தது. பெட்டியை மாத்தியிருக்காங்க" என்று ஆதாங்கப்பட்டார்.

இந்தநிலையில்தான், மே 3-ம் தேதி காலை 23 சுற்றுகளும் எண்ணி முடிக்கப்பட்டன. அதோடு, பிரச்னைக்குரிய வாக்கு இயந்திரங்களும் எண்ணப்பட்டு சுமார் 24 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு முடிவு அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக பழனியப்பனைவிட 23,642 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு