Published:Updated:

``சூப்பரா இருக்குறாருங்க தலைவரு!'- உற்சாகத்தில் தே.மு.தி.க தொண்டர்கள்

அன்றைய கூட்டத்தில் விஜய்காந்த் தெம்புடனும் உற்சாகத்துடன் காணப்பட்டார்.

விஜய்காந்த்
விஜய்காந்த்

கடந்த இரு ஆண்டுகளாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். அமெரிக்காவில் நண்பர் வீட்டில் தங்கியிருந்து விஜயகாந்த் சிகிச்சையும் எடுத்து வந்தார். அதற்குப் பிறகு, பொது இடங்களில் விஜயகாந்த் தென்பட்டாலும் கைத்தாங்கலாகவே அவரை அழைத்து வருவார்கள். பேச்சிலும் தடுமாற்றம் தெரிந்தது. பொதுக்கூட்டங்களில் நீண்ட நேரம் அவரால் பேச முடியாது. விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்பால் தே.மு.தி.கவின் வளர்ச்சியும் குன்றியது.

விஜயகாந்த்
விஜயகாந்த்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட தே.மு.தி.க சார்பாக, பிரேமலதாவே பெரும்பாலும் பிரசாரத்தில் ஈடுபட்டார். விஜயகாந்த் ஒரு சில இடங்களில் மட்டுமே பேசினார். ஒருமுறை மேடையில் பேசிய விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், தன் தந்தையின் உடல்நலம் குறித்து வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்புவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். விஜயகாந்த் உடல்நிலை மீண்டு வந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்று அந்தக் கட்சித் தொண்டர்கள் நம்பினர்.

டார்கெட் ராமதாஸ்... ஆயுதம் விஜயகாந்த்! அ.தி.மு.க-வின் வில்லன் வியூகம்

இந்த நிலையில், சென்னையில் உள்ள தே.மு.தி.க மாவட்ட தலைமைக்கழகத்தில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார். அப்போது, மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார் விஜயகாந்த். முகத்தில் புதுப் பொலிவு இருந்தது. `பழைய பன்னீர்செல்வமாக' விஜயகாந்த் காட்சியளித்தைப் பார்த்த கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாகமடைந்தனர்.

நிர்வாகிகள் கூட்டத்தில் விஜயகாந்த்
நிர்வாகிகள் கூட்டத்தில் விஜயகாந்த்

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதாவிடம், விஜயகாந்த் உடல் நிலை எப்படியிருக்கிறது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ``தலைவர் சூப்பராக இருக்கிறார். வெகு விரைவில் கம்பீரமான நடையுடன் பேச்சுடன்கூடிய தலைவரை நீங்கள் பார்ப்பீர்கள்'' என்று புன் சிரிப்புடன் பதிலளித்தார்.

அந்நிகழ்வில் கலந்த விஜயகாந்தின் புதிய தோற்றமும் பிரேமலதாவின் உற்சாக பதிலும் தே.மு.தி.க தொண்டர்களை மகிழ்ச்சிக்கடலில் தள்ளியுள்ளது.