தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,15,48,060 குடும்பங்களுக்கு 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21 பொருள்கள்கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி 4-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் முழுக்கரும்புடன்கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டுவருகிறது.

பொங்கல் வைப்பதற்காக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றுடன் வீட்டுத் தேவைக்கான கோதுமை மாவு, ரவை, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, உப்பு, கடுகு, சீரகம், மிளகு, புளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், முழுக்கரும்பு, பை ஆகிய 21 பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன.
நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு் தொகுப்பைப் பெற்றுக்கொள்ள பெண்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். இந்தப் பரிசு தொகுப்பில் முதல்வரின் படமோ அல்லது வேறு தனிப்பட்ட யாருடைய படமோ இடம்பெறவில்லை. ஆனாலும், பல்வேறு பகுதிகளிலும் தி.மு.க-வினர் இந்தப் பரிசுத் தொகுப்பை வழங்கும் இடத்தில் வலம்வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை, மன்னராஜா கோயில் தெருவிலுள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பை தி.மு.க-வின் ஒன்றியச் செயலாளரும், மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான வி.எஸ். ஆர். ஜெகதீஷ் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தி.மு.க-வினருடன் சேர்ந்து விநியோகித்தார்.
திசையன்விளையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யும்போது பொருள்களைப் பெற வந்த பெண்கள் பலரும் ரொக்கப் பணம் இல்லாமல் வெறும் பொருள்கள் மட்டுமே கொடுக்கப்படுவதைக் கண்டதும் தங்களுக்குள் அதிருப்தியுடன் பேசிக்கொண்டனர்.

ஒரு பெண், அங்கிருந்த தி.மு.க-வினரிடம், ``கடந்த ஆட்சியில் 2,500 ரூபாய் பணம் கொடுத்தாங்க. அப்போது நீங்க 5,000 ரூபாய் கொடுக்கணும்னு சொன்னீங்க. நீங்க இப்போ ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்காவிட்டாலும் 2,500 ரூபாயாவது கொடுத்திருக்கலாமே?’ என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முதியவர்கள் பலரும் ரொக்கப் பணம் இல்லாமல் வெறும் பொருள்கள் மட்டுமே கொடுக்கப்படுவதால் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். ’பணம் எங்கே?’ என்று வயதான பெண்கள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர்களைச் சமாளிக்க முடியாமல் பரிசுத்தொகுப்பை விநியோகம் செய்ய வந்திருந்த தி.மு.க-வினர் திணறினார்கள்.

பின்னர் பெண்களிடம், ‘தேர்தலுக்காக போன ஆட்சியில் பணம் கொடுத்தாங்க’ என்று சொன்னதும், ’அதுக்கு முன்பும் பொங்கலுக்குப் பணம் கொடுத்தாங்க. நீங்க இந்த ஆட்சியிலும் கொடுக்கச் சொல்லுங்க’ என்று கோரிக்கை விடுத்தார்கள். இந்தச் சம்பவங்களால் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் நடக்கும் இடத்தில் பரபரப்பு நிலவியது.