Published:Updated:

விநாயக சதுர்த்தி விழா அரசியல்!

விநாயக சதுர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
விநாயக சதுர்த்தி

தொற்றுநோய் அபாயம் தீராத நிலையில், பத்து நாள்களுக்குப் பொது இடங்களில் பூஜையும், கடைசி தினத்தன்று நீர்நிலைகளில் உருவ பொம்மை கரைப்பதற்கும் பா.ஜ.க பிரச்னை செய்வது முறையல்ல.

விநாயக சதுர்த்தி விழா அரசியல்!

தொற்றுநோய் அபாயம் தீராத நிலையில், பத்து நாள்களுக்குப் பொது இடங்களில் பூஜையும், கடைசி தினத்தன்று நீர்நிலைகளில் உருவ பொம்மை கரைப்பதற்கும் பா.ஜ.க பிரச்னை செய்வது முறையல்ல.

Published:Updated:
விநாயக சதுர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
விநாயக சதுர்த்தி
1950 முதல் 1980 வரை, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மக்கள் களிமண்ணால் செய்த ஒரு சிறிய விநாயகர் உருவ பொம்மையை வாங்கி, அதை வீட்டில்வைத்து பூஜை செய்தார்கள். மூன்றாவது நாளில் வீட்டுக்குப் பின்னாலிருந்த கிணற்றில் அதைப் போட்டுவிடுவார்கள். பின்னர், நகரத்திலுள்ள பெரிய கோயில்களுக்குச் செல்வதைத் தவிர்த்த மக்கள், தங்கள் தெருமுனைப் பிள்ளையாரை வழிபட்டுச் செல்லத் தொடங்கினர். அங்கு வழிபடுபவர்களின் எண்ணிக்கை கூடியதையொட்டி, அந்தக் கோயில்களே நடைபாதைகளை அடைத்து பெரிய கோயில்களாக மாறின.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சூழலில்தான் ராமகோபாலன், ‘விநாயக சதுர்த்தி மத்தியக்குழு’ என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தினார். அதன் மூலம் சென்னை நகரத்திலும், இதர பகுதிகளிலும் 1983-லிருந்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிவருகிறார். அதற்காகப் பெறப்படும் நன்கொடைகளில் பெரிய பிள்ளையார் பொம்மைகளை விலைக்கு வாங்கி, அதை நகரத்தின் பல இடங்களில் நிறுவினார்கள். விழா முடிவடையும்போது சிலைகளை வண்டியில்வைத்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பார்கள். அதற்கு `விஸர்ஜனம்’ என்று பெயர்.

 கே.சந்துரு, மேனாள் நீதிபதி, 
சென்னை உயர் நீதிமன்றம்
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

பிள்ளையார் பொம்மைகளை நகரத்தின் முக்கியமான பகுதிகளில் வைப்பதுடன், உண்டியல்வைத்து, பண வசூலும் நடைபெறும். இந்தச் சிலைகளை எடுத்துச் செல்வதற்காக பெரிய டிராக்டர்கள், லாரிகள் மற்றும் ஆள்படைக்கு பெரும் தொகை செலவழிக்கப்படும். நகரத்தின் பல திசைகளிலிருந்தும் பிள்ளையார் பொம்மைகளுடன் வரும் வண்டிகள் அண்ணா சிலை அருகிலுள்ள வாலாஜா சாலையில் நுழைந்து, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் செல்ல முற்படும். அங்குதான் திருவல்லிக்கேணி பெரிய மசூதி இருக்கிறது. தவிர, அதே வழியில் ஐஸ்ஹவுஸ் அருகில் இன்னொரு பள்ளிவாசல் இருக்கிறது.

அதனால், ஆண்டாண்டுக் காலமாக, ‘திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்வோம்’ என்று அடம்பிடிப்பார்கள். 1996-ம் வருடம், அவர்கள் ஊர்வலத்துக்குக் குறிப்பிட்ட வழியாகச் செல்வதற்குக் கேட்ட அனுமதி காவல் துறையால் மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து ‘விநாயக சதுர்த்தி மத்தியக்குழு’ சார்பில் ராமகோபாலன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், மேல்முறையீடு செய்தார்கள்.

அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஏ.ஸ்வாமி, “நீங்கள் ஊர்வலம் செல்லலாம்; ஆனால், குறிப்பிட்ட பாதை வழியாகச் செல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. காவல்துறை குறிப்பிடும் பாதையில் சென்றுதான் கடலில் உருவ பொம்மைகளைக் கரைக்க வேண்டும்” என்றார்.

ராமகோபாலன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில் தன்னையும், தான் நடத்தும் விழாவைப் பற்றியும் இவ்வாறு குறிப்பிட்டார்:

“13 வருடங்களாக சென்னை நகரத்தில் இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியைத் தங்களது சொந்த விழாவாக நடத்துவதில்லை. மாறாக பொது இடங்களில் விநாயகர் உருவச் சிலைகளை வைத்து சமூக, கலாசார, மதம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடம் சாதி, இனம் வேறுபாடு இல்லாத ஒருமிதத்தை உருவாக்கியுள்ளனர்.

விநாயக சதுர்த்தியை பொது மதப் பண்டிகையாக உருவாக்கி, இந்திய மக்களை பிரிட்டிஷாருக்கு எதிராகத் திரட்டினார் பாலகங்காதர திலகர். மகாத்மா காந்தி எண்ணிய ராமராஜ்ஜியத்தை மக்களிடம் உருவாக்குவதற்கு சென்னையிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் விநாயகர் உருவச்சிலைகளைவைத்து ஊர்வலமாகச் சென்றுவருகிறோம்.

12 வருட காலமாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை மற்றும் ஐஸ்ஹவுஸிலுள்ள மசூதிகள் வழியாகச் செல்ல அனுமதிக்கப் பட்டது. ஹைதராபாத்திலும் அகமதாபாத்திலும் ஒவ்வொரு வருடமும் ரதயாத்திரைகள் மசூதி உள்ள பகுதிகளில் அனுமதிக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.

விநாயக சதுர்த்தி விழா அரசியல்!

இதையெல்லாம் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ராமகோபாலன், `விநாயக சதுர்த்தி ஊர்வலங்கள் காந்தியின் கனவான ராமராஜ்ஜியத்தை நிறுவுவதற்காக என்று கூறியிருந்தது மிகப்பெரிய ஜோக்!’ 18.8.1924-ல் ‘யங் இந்தியா’ பத்திரிகையில் காந்தி இவ்வாறு எழுதினார்:

“பழிக்குப் பழி என்பது ஆதாம் காலத்திலிருந்தே முயற்சி செய்யப்பட்டு மிகவும் மோசமாகத் தோல்வியுற்றது. ஆனாலும் அதனுடைய மிகப்பெரிய விஷத் தாக்கத்தில் முனகிக் கொண்டிருக் கிறோம். எல்லாவற்றையும்விட, உடைத்துவிட்ட கோயில்களுக்கு எதிர்வினையாக மசூதிகளை உடைக்க இந்துக்கள் முயலக் கூடாது. அடிமைத்தனம் அந்த வழியில்தான் தொடங்குகிறது. வெறித்தனமான நம்பிக்கையுடன் அலைபவர்களுக்கு என்னுடைய நம்பிக்கையின் உயரிய தன்மையை நிரூபிக்கும்விதமாக, ஆயிரம் கோயில்கள் சின்னாபின்னமாக்கப்பட்டாலும் நான் ஒரு மசூதியையும் தொட மாட்டேன்.”

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் உருவ பொம்மைவைத்து பூஜை செய்வதற்கும், கடைசி நாளன்று ஊர்வலமாகச் சென்று கடலில் கரைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தொற்றுநோய் தடுப்புக்கான ஊரடங்கு விதிகளையொட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி பா.ஜ.க-வும் அதன் பரிவாரங்களும் இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவதற்கு அனுமதி கேட்டு மனு அளித்துள்ளன. அதில், சில தீவிர குழுக்கள் ‘தடையையும் மீறி விழாவை நடத்துவோம்’ என்று சவால்விடுகின்றன.

‘அமர்நாத் லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவுக்கு இந்த முறை தடைவிதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ‘இது குறித்த முடிவுகளை மாநில அரசுதான் எடுக்க வேண்டும்’ என்று கூறிவிட்டது. பூரி ஜகந்நாதர் ரத யாத்திரைக்கு முதலில் தடைவிதித்து பின்னர் அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், ‘அந்த விழாவுக்கு மக்களுக்கு அனுமதியில்லை’ என்று கூறியதுடன், அன்றைய தினம் பூரி நகரத்தில் முழு ஊரடங்கு பிறப்பித்தது. அதேபோல் ராமர் கோயில் பூஜைக்கும் ஒரு சில பிரமுகர்கள் தவிர மக்கள் கலந்துகொள்வதற்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை.

தொற்றுநோய் அபாயம் தீராத நிலையில், பத்து நாள்களுக்குப் பொது இடங்களில் பூஜையும், கடைசி தினத்தன்று நீர்நிலைகளில் உருவ பொம்மை கரைப்பதற்கும் பா.ஜ.க பிரச்னை செய்வது முறையல்ல.

இந்தச் சூழலில், மதுரையைச் சேர்ந்த வட இந்தியர் நலச் சங்கம் ஒன்று சென்னையிலுள்ள உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில், ஒரு விசித்திரமான வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. பொதுநல வழக்குகள் இல்லாத சுற்றுச்சூழல் வழக்குகளை மட்டும் விசாரிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீதிபதி வினீத் கோத்தாரி தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கில் இரண்டு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ‘விநாயகர் சதுர்த்தி அன்று கறிக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும். ஆகஸ்ட் 15 முதல் 24-ம் தேதிவரை சமணர்கள் நடத்தும் `பரூஷண் பர்வா’ என்ற விரதத்தையொட்டி 10 நாள்களுக்குக் கறிக்கடைகளை மூட வேண்டும்’ என்பதே அவை. `இந்த வழக்கு எப்படிச் சுற்றுச்சூழல் சம்பந்தமானது?’ என்ற கேள்விக்கு, ‘அசைவ உணவைத் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கும்’ என்று புதிய விளக்கம் கொடுக்கப்பட்டது.

விநாயக சதுர்த்தி விழா அரசியல்!

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு அட்வகேட் ஜெனரலிடம், ‘அரசின் கொள்கை முடிவு என்ன?’ என்று கேட்டுச் சொல்லும்படி வழக்கை ஒத்திவைத்துள்ளனர். இதற்குள் இன்னொரு விசித்திரமாக தேனி மாவட்ட ஆட்சியர், தனது மின்னஞ்சல் மூலம் 13.8.20-ம் தேதி ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில், ‘பரூஷண் பர்வா விரதத்தையொட்டி 10 நாள்களுக்கு தேனி மாவட்டத்திலுள்ள இறைச்சிக் கூடங்களை மூட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் 2008-ல் அளித்த தீர்ப்பு ஒன்று சுட்டிக் காட்டப்பட்டிருந்ததது. ஆனால், பொதுமக்களின் பலத்த எதிர்ப்பினால் 24 மணி நேரத்தில் அந்த உத்தரவு திரும்பிப் பெறப்பட்டது.

சமணர்களின் பரூஷண் பர்வா விரதத்தை முன்னிட்டு 2008-ம் ஆண்டு அகமதாபாத் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சிக் கூடங்களை 10 நாள்களுக்கு மூட உத்தரவிட்டது அரசு. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ‘மக்கள் தங்களுடைய உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது அவர்களது அடிப்படை உரிமை. அதில் அரசு தலையிட முடியாது. அதேசமயத்தில், சமய நல்லிணக்கம் கருதி பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு சிறுபான்மை சமூகத்தினரின் புனித விரதத்தை மதிக்கும் வகையில் விட்டுக்கொடுக்க வேண்டும். அதனால் 10 நாள்கள் கறிக்கடை வியாபாரத் தடையை ரத்து செய்ய முடியாது’ என்று அவருக்கே உரிய முறையில் கூறினார்.

தமிழகத்தில் வள்ளலார் ஜோதி அடைந்த தினம், காந்தி பிறந்தநாள் தவிர மற்ற நாள்களில் கறிக்கடைகளுக்கான தடை உத்தரவைத் தமிழக அரசு வழங்கியதில்லை. விநாயகர் சதுர்த்தி விழாவைப் பொதுவெளிகளில் விமரிசையாகக் கொண்டாடத் தொடங்கிய மகாராஷ்டிரா மாநிலத்தில்கூட அன்றைய தினம் கறிக்கடை வியாபாரத்துக்குத் தடை இருந்ததில்லை.

இந்து மதத்தினரில் பெரும்பான்மை யானவர்கள் கொண்டாடக்கூடிய ஒரு விழாவின்போது, அவர்கள் சார்பில் யாருமே கோரிக்கை வைக்காத போது, மதுரையில் வட இந்தியர்கள் நலச் சங்கத்தினர் தடைவிதிக்கக் கோருவது முறையல்ல. இந்த வருடம் பரூஷண் பர்வா விரத நாள்களுக்குள் விநாயக சதுர்த்தி பூஜையையும் அவர்கள் சேர்த்துக் கோரிக்கை வைத்தது ‘பக்கத்து இலைக்குப் பாயசம் ஊற்றச் சொல்வதைப்போல’ உள்ளது. தமிழக அரசிடம் ஆலோசிக்காமலேயே கறிக்கடைகளுக்கு 10 நாள்கள் தடைவிதித்த தேனி மாவட்ட ஆட்சியரின் நடத்தை குறித்து விசாரிக்க வேண்டும்.

ஒரு சமயம் சார்ந்த விழாவை, பொது விழாவாக்கி அதில் பெரும்பான்மைச் சமுதாயத்தை ஒன்றிணைப்பதாகக் கூறி, நாடு முழுதும் ஒரே சமயம் என்ற கருத்தை வலியுறுத்துவது சரியல்ல. மேலும், அந்தச் சமயத்திலுள்ள சிறுபான்மையினரின் உணவுப் பழக்கத்தைப் பெருமைக்குரிய ஒன்றாக மாற்றி, சைவ உணவுதான் சிறப்பான உணவு என்று பிரசாரம் செய்து, அரசியல் ஆதாயம் தேட முயல்வது கண்டிக்கத்தக்கது.

தொற்றுநோய் தடுப்பு முயற்சிகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் காலத்திலும் சமயப் பிரச்னைகளைவைத்து அரசியல் செய்வதற்கு பா.ஜ.க முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism