Published:Updated:

பரமக்குடி: "சசிகலாவுடன் பேசியதால் என் கார் எரிக்கப்பட்டதா?"- வின்சென்ட் ராஜா பதில்!

எரிந்த கார்
எரிந்த கார்

அதிகாலை 3 மணிக்குச் சத்தம் கேட்டு வெளியில் வந்தவர், தன் கார் எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சமீபகாலமாக அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளுடன் போனில் பேசிவருகிறார். அவர் போனில் பேசும் ஆடியோக்கள் இணையங்களில் உலாவருகின்றன. சசிகலாவுடன் பேசிய அதிமுக-வினர் மீது கட்சியின் சார்பில் நடவடிக்கை எடுப்பதுடன், கட்சிக்குள் வரப்போவதாகப் பேசிய சசிகலாவுக்கு எதிராக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் பேசியதால் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி ஒருவரின் கார் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிந்த கார்
எரிந்த கார்

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக-வில் இளைஞரணிச் செயலாளராக இருந்தவர் பரமக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் ராஜா. கடந்த வாரம் இவரைத் தொடர்புகொண்டு சசிகலா பேசிய ஆடியோ ஊடகங்களில் வெளியானது. கட்சித் தலைமையை விமர்சித்துப் பேசினார் என இவர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு மேலக்காவனூரிலுள்ள தனது தார் பிளான்ட்டுக்கு வந்தவர், அங்கேயே தங்கிவிட்டார். அதிகாலை 3 மணிக்கு சத்தம் கேட்டு வெளியில் வந்தவர் தன் கார் எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

சசிகலா
சசிகலா

உடனே பரமக்குடி காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டது,ம் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் இருவர் காருக்கு தீவைத்துவிட்டு சுவரேறி குதித்து ஓடுவது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் பற்றி வின்சென்ட் ராஜாவிடம் பேசினேன்.

"சின்னம்மா சசிகலாவுடன் பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். என்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடியாருக்குக் கிடையாது. அதில் ஏகப்பட்ட சட்டமீறல் உள்ளது. அது ஒருபக்கம் இருந்தாலும், நான் கட்சிநலன் சார்ந்துதான் கருத்துகளைத் தெரிவித்தேன்.

வின்சென்ட் ராஜா
வின்சென்ட் ராஜா

இன்றுவரை நான் அதிமுக-தான். நான் லாபம் சம்பாதிக்க நினைத்திருந்தால் வேறு கட்சியில் சேர்ந்திருக்கலாம். அதிமுக-வில் நிர்வாகியாக இருந்து ஒரு ரூபாய்கூட சம்பாதித்ததில்லை. மாறாக, நான் சம்பாதிக்கும் பணத்தைத்தான் செலவழித்துள்ளேன்.

அம்மா மறைவுக்குப் பிறகு அதிமுக அழிவுப்பாதைக்ச்கு செல்ல எடப்பாடி, ஓ.பி,எஸ்-தான் காரணம். அவர்களிடம் ஆளுமைத்திறன் இல்லை. வேலுமணியைத் தவிர, மற்ற அமைச்சர்கள் எல்லோரும் அவரவர் தொகுதியில் மட்டும்தான் வேலை செய்தார்கள். மற்ற வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபடவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தைத் தலைமை கண்டுகொள்ளவே இல்லை. உதாரணத்துக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி தோல்வியடைந்ததற்கு மாவட்டச் செயலாளர் முனியசாமிதான் காரணம். அவர், தன் மனைவி போட்டியிட்ட முதுகளத்தூர் தொகுதியில் மட்டும்தான் பணியாற்றினார். அதேநேரம், அங்கு திமுக சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் மாவட்டத்தின் மற்ற தொகுதிகள் மட்டுமல்லாமல், மற்ற மாவட்டங்களிலும் பிரசாரம் செய்தார். ராமநாதபுரத்தில் போட்டியிட்ட திமுக மாவட்டச் செயலாளர் மற்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றினார். இப்படியுள்ள நிலையில், சுயநலமான மாவட்டச் செயலாளர்கள், ஆளுமைத்திறன் இல்லாத தலைமையினால் கட்சி தோல்வி அடைந்தது. அதனால் சின்னம்மா போன்றவர் அதிமுக-வில் தலைமையேற்க வேண்டுமென்று தெரிவித்தேன். அதனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், கார் எரிப்பு போன்ற அச்சுறுத்தலையும் சந்தித்துள்ளேன். காவல்துறைதான் இதற்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு