Published:Updated:

வி.ஐ.பி டின்னர் - சி.பி.ராதாகிருஷ்ணன்

சி.பி.ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
சி.பி.ராதாகிருஷ்ணன்

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர் - சி.பி.ராதாகிருஷ்ணன்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
சி.பி.ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
சி.பி.ராதாகிருஷ்ணன்

பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவர் சி.பி.ராதாகிருஷ்ணன். தமிழக பா.ஜ.க தலைவர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்த இவர் தற்போது கேரள மாநில பா.ஜ.க பொறுப்பாளராக இருக்கிறார். அவர் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்களையும், அதற்கான காரணத்தையும் இந்த இதழ் வி.ஐ.பி டின்னர் பகுதியில் விவரிக்கிறார்...

பிரதமர் மோடிக்கு சென்னையில் விருந்து!

``பிரமதர் மோடியின் மனதுக்குள் ஒரு தீப்பொறி எப்போதும் கனன்றுகொண்டே இருக்கிறது. நம் தேசத்தின் செல்வ வளம் உயர்த்தப்பட வேண்டும். கடைக்கோடி குடிமகனையும் அது சென்றடைய வேண்டும் என்கிற பொறிதான் அது. அவரின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அச்சாணியாகவும் அதுதான் இருக்கிறது. அந்தப் பொறி மோடியின் மனதுக்குள் ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பின் காரணமாக உருவானதா அல்லது சிறு வயதில் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் வளர்ந்ததால் உருவானதா என்பதை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்ப் பண்பாட்டின்மீதும் கலாசாரத்தின்மீதும் அவர் கொண்டிருக்கும் பற்றின் காரணமாக அவருக்கு சென்னையில் வைத்து விருந்தளிக்கவே விருப்பம். அவருக்குப் பிடித்த இட்லி, வடையையும் சாம்பாரையும் அவருக்கு விருந்தாக அளிப்பேன்.’’

இந்திரா காந்தியிடம் எமர்ஜென்சி குறித்த விவாதம்!

``மிகச்சிறந்த நிர்வாகியாகவும் மிகச்சிறந்த தேசபக்தராகவும் விளங்கிய இந்திரா காந்தி அம்மையாருக்கு, ஏன் எல்லோரையும் அடக்கி ஆள வேண்டும் என்கிற சிந்தனை உருவானது எனக் கேட்டுத் தெரிந்துகொள்ள விருப்பம். அவரிடம், `ஒரு சர்வாதிகாரியாக மாறியாவது, இந்த தேசத்தை ஆள வேண்டும் என்கிற சிந்தனையை உங்களுக்குப் புகுத்தியது யார், நீங்கள் ஏன் அவர்களை அனுமதித்தீர்கள்... அவசரநிலைப் பிரகடனம் ஒரு களங்கமாக மாறிப்போனது குறித்து வருந்துகிறீர்களா?’ எனக் கேட்க வேண்டும். நான் அவரை டெல்லியில், அவருடைய வீட்டிலேயே சந்திக்க விரும்புகிறேன். அவரின் இறப்புக்குப் பிறகு அங்கு நான் போயிருக்கிறேன். தனிப்பட்ட முறையில், மிகவும் எளிமையான வாழ்க்கை முறையைத்தான் அவர் கடைப்பிடித்திருக்கிறார் என்பதற்கு அந்த வீடு ஒரு சாட்சி. அங்கே அவருக்குத் தேநீர் விருந்தளித்து என்னுடைய கேள்விகளைக் கேட்பேன்.’’

ரஜினிகாந்திடம் என் கேள்வி!

``வாழ்க்கையில் நல்வாய்ப்புகள் எல்லோருக்கும் வருவதில்லை. ஆனால், ரஜினிகாந்துக்கு அப்படியொரு வாய்ப்பு வந்தது. ரஜினி மீது தமிழர்கள் வைத்திருந்த அன்பு என்பது எம்.ஜி.ஆர் மீது தமிழர்கள் வைத்திருந்த அன்புக்கு ஒப்பானது. ஏழைகளுக்குத் தனிமனிதனாக உதவுவதைக் காட்டிலும், அரசியல் அதிகாரத்தின் மூலமாக உதவுவதே சரியானதாக இருக்கும். அந்த வகையில், எம்.ஜி.ஆர் ஓர் இயக்கத்தைக் கண்டு, மக்களுக்குப் பயன்படும் வகையில் தன் வாழ்வைத் தகவமைத்துக்கொண்டார். ரஜினிகாந்த் அவர்கள் தன் உடல்நிலை நன்றாக இருந்தபோதும் அதற்கான முயற்சிகளில் இறங்கவில்லை. அவர் பயந்துவிட்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. `யாரும் மிரட்டினார்களா அல்லது பாசத்தைக் காரணம் காட்டி கையைக் கட்டிப்போட்டுவிட்டார்களா?’ என்கிற கேள்வியை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சென்னையில் அவருக்குப் பிடித்த உணவுகளோடு இந்தச் சந்திப்பு நடைபெற வேண்டும்.’’

வி.ஐ.பி டின்னர் - சி.பி.ராதாகிருஷ்ணன்

கண்ணியத்தின் அடையாளமான அச்சுத மேனனுக்கு மரியாதை!

``நான் கூர்ந்து கவனித்த அரசியல் தலைவர்களில் என்னை ஆச்சர்யப்படுத்தியவர் கேரள முன்னாள் முதல்வர் அச்சுத மேனன் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதும் தான் கொண்ட கொள்கையிலிருந்து சிறிதும் மாறாமல், அதேவேளையில் மாற்றுச் சிந்தனைகள் கொண்டவர்களிடமும் கண்ணியத்தோடு நடந்துகொண்டவர். தனிநபர் ஒழுக்கம் எளிமை, நேர்மை, ஏழை மக்கள்மீதான அக்கறை என்பதன் அடையாளமாக அவர் வாழ்ந்தார். அதுமட்டுமல்ல, இந்திய அரசியல் தலைவர்களில், முதல்வராக இருந்தபோதே அரசியலிலிருந்து ஓய்வை அறிவித்த ஒரே தலைவர் அவர்தான். கடைசிவரை அந்த ஓய்வைக் கடைப்பிடிக்கவும் செய்தார். அவருக்கு, கேரள பாரம்பர்ய உணவுகளை கோயம்புத்தூரில் வைத்து விருந்தளித்து மரியாதை செலுத்த வேண்டும்.’’

முத்துராமலிங்கத் தேவருக்கு திருச்சியில் விருந்து!

``அந்தக் காலத்திலேயே தேசியமும் தெய்விகமும் நம் இரு கண்கள் எனச் சொன்ன ஒரே தலைவர் முத்துராமலிங்கத் தேவர். இடதுசாரிச் சிந்தனைகள் அவரின் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த நேரத்திலும்கூட, இந்த மண்ணின் மாண்புகளின்மீதும் அதிக அக்கறை கொண்டிருந்தார். அவர் எப்போதும் பொய் பேசியதில்லை என்பதை நம்புகிற மனிதர்களில் நானும் ஒருவன். நேதாஜியை பர்மா எல்லையில் சந்தித்ததாக ஒரு பேட்டியில் அவர் சொல்லியிருக்கிறார். அதை முழுமையாக நம்புகிறவன் என்கிற வகையில், நேதாஜியுடனான சந்திப்பில் பேசிய விஷயங்கள் குறித்து அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விருப்பம். அவரின் கடைசிகால வாழ்க்கையில் பெரும்பகுதி திருச்சி மாநகரத்தில்தான் கழிந்தது. அங்கே அவருக்குப் பிடித்த பாரம்பர்ய உணவுகளோடு அந்தச் சந்திப்பு நடைபெற விருப்பம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism