திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்து தொடர்ந்து ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் அர.சக்கரபாணி. சட்டமன்றத்தில் தி.மு.க-வின் கொறடாவாக இருந்து, தற்போது மாநில உணவு வழங்கல் துறை அமைச்சராகப் பணியாற்றிவருபவர். அனைவரிடமும் இனிமையாகப் பழகுபவர் எனப் பெயரெடுத்த அவர் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்களையும், அதற்கான காரணத்தையும் இந்த இதழ் வி.ஐ.பி டின்னர் பகுதிக்காகக் கேட்டோம்...
கலைஞருக்கு இட்லி விரால் மீன் குழம்பு விருந்து!
``தலைவரின் கரகரப்பான குரலில் `என்ன சக்கரபாணி, எப்படி இருக்கிறாய்?’ என்கிற வார்த்தைகளை மீண்டும் கேட்க விரும்புகிறேன். 1996-ம் ஆண்டு என்னை ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவித்து, 2006-ம் ஆண்டு அரசுக் கொறடாவாக நியமித்து அழகு பார்த்தவர். 2011-ம் ஆண்டில் ஆட்சியை இழந்த பிறகு நடந்த கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் `அரசுக் கொறடாவாகத் திறமையாகப் பணியாற்றிய தம்பி சக்கரபாணியைக் கட்சிக் கொறடாவாகத் தேர்ந்தெடுக்கலாம்’ என்று அறிவித்த பாசம் கொண்ட அன்புத் தலைவர் கலைஞர். அவரின் அரசியல் வாரிசால் உணவு அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், அவரைச் சந்தித்து என் நன்றியைத் தெரிவித்து என் கையால் அவருக்குப் பிடித்த இட்லியையும் விரால் மீன் குழம்பையும் பரிமாற ஆசை. பெண்களைக் கோயில் ஓதுவாராக நியமித்ததை அறிந்து, `தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி அல்ல 32 அடி பாய்கிறது’ என்று அவருக்கே உரித்தான பாணியில் தளபதி அவர்களின் ஆட்சியைப் பாராட்டுவதைக் கேட்க வேண்டும்.’’
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தஞ்சாவூர் அறுசுவை விருந்து!
``நடிகர் திலகத்துக்கு அவருக்குப் பிடித்த தஞ்சாவூர் அறுசுவை விருந்தளிக்க ஆசை. ‘பராசக்தி’ கதாநாயகனாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றியும், அதில் கலைஞரின் வசனங்களிலிருந்த உணர்ச்சிக்கு உயிர் கொடுத்த அவரின் உச்சரிப்பு குறித்தும் கேட்க வேண்டும். `தமிழ்நாட்டின் முதல் குரலே பிச்சைக்காரரின் குரலாக இருக்கிறதே’ என்று ‘பராசக்தி’ படத்தில் அவர் வசனம் பேசியபோது இருந்த தமிழகத்தின் நிலை முற்றிலும் மாறி, இன்று தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உயர்ந்து நிற்கிறது. இந்த நிலை கண்டு அவருக்குள் ஏற்பட்ட உணர்வை வசனமாக அவரின் சிம்மக் குரலில் கேட்க ஆசை. காங்கிரஸுக்கு அவர் சென்றபோது `கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க’ என்று அண்ணா அவர்கள் வெளிப்படுத்திய அரசியல் நாகரிகத்தை இன்று அவர் பெயரைத் தாங்கிய கட்சியினர் மறந்துபோனது பற்றியும் கேட்பேன்!’’
சிங்கப்பூரின் லீ குவான் யூவுக்கு கொங்கு ஸ்பெஷல் விருந்து!
``சிங்கப்பூரை உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக ஆக்கிய சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அவர்களை, நம் முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து சந்தித்து விருந்து படைக்க விரும்புகிறேன். `நீங்கள் எடுத்த அரசியல் முடிவுகளிலேயே எதை முக்கியமாகக் கருதுகிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்டதற்கு, `சீனர்கள் 75%-க்கு மேல் இருந்தும் சீன மொழியை (மாண்டரின்) அலுவல் மொழியாக்காமல் சக சீனத் தலைவர்களைச் சமாதானப்படுத்தி ஆங்கிலத்தை ஆக்கியதுதான்’ என்றும், `சிங்கப்பூர் அடைந்த வளர்ச்சிக்கு இதுவே முதன்மையான காரணம்’ என்றும் கூறிய அவருக்கு நாட்டுக்கோழிக்கறியுடன் கொங்கு விருந்துவைக்க ஆசைப்படுகிறேன். அனைத்து இந்திய ஊடகத்தையும் அழைத்து அவரைப் பேட்டி காணச் சொல்லி அதில், `இந்திய அரசியல் நிர்ணய சபையில், `இந்தியாவின் இணைப்பு மொழி ஆங்கிலமா, இந்தியா?’ என்று ஓட்டெடுப்பு வந்தபோது இரண்டுக்கும் சமமான வாக்குகள் விழுந்த நிலையில், ராஜேந்திர பிரசாத் இந்திக்கு ஆதரவாக ஓட்டுப்போடாமல் ஆங்கிலத்தை இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆக்கியிருந்தால் என்னவாகியிருக்கும்?’ என்ற கேள்விக்கு அவரின் பதிலைக் கேட்க ஆவல்.’’

‘கபடி ராணி’ அபிலாஷா மாத்ரேவுக்கு என் கிராமத்தில் விருந்து!
``மாநில அளவிலான போட்டிகளில் கலக்கிய கபடி வீரனான நான், பட்டி தொட்டியெங்கும் கபடி விளையாட்டு பரப்பப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். படித்த குடும்பங்களிலும், நகரங்களிலும்கூட கால்பந்து விளையாடவே பெண்களை இன்றும் அனுமதிக்காத சூழலில், பல ஆண்டுகளுக்கு முன்பே கபடிப் போட்டிகளில் விளையாடி உலகக் கோப்பையை வென்ற, ‘இந்தியாவின் கபடி ராணி’ என்றழைக்கப்படும் அபிலாஷா மாத்ரேவை கள்ளிமந்தையத்திலுள்ள என் இல்லத்துக்கு அழைத்து விருந்து கொடுக்க ஆசை. அந்த விருந்தின்போது அவர் சந்தித்த தடைகளையும், அவற்றைத் தாண்டி அவர் வளர்ந்த விதத்தையும், பெண்களுக்கு எவ்வளவு நன்மையை அந்த விளையாட்டு தருகிறது என்பது பற்றியும் அவர் வாயால் கேட்டறிய ஆவல். அவர் தலைமையில் பன்னாட்டுப் பெண்கள் கபடிப் போட்டியை ஒட்டன்சத்திரம் தொகுதியில் நடத்தவும் விரும்புகிறேன்.’’
விருப்பாச்சி கோபால்சாமி நாயக்கருக்கு ஆட்டுக்கிடா விருந்து!
``விருப்பாச்சி கோபால்சாமி நாயக்கர் ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். மருது சகோதரர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர். வீரமங்கை வேலு நாச்சியாரை ஆங்கிலேயர்கள் தேடிக்கொண்டிருந்தபோது தன் அரண் மனையில் தங்கவைத்துப் பாதுகாத்தவர். ஒட்டன்சத்திரம் தொகுதியிலுள்ள விருப்பாச்சி கிராமத்தை இந்திய வரலாற்றில் இடம்பெறச் செய்த கோபால்சாமி நாயக்கருக்கு ஆட்டுக்கிடாக் கறியுடன் ராஜ விருந்து கொடுக்க விரும்புகிறேன். கூடவே, அவருடன் நீண்டநேரம் உரையாடி அவரது உண்மை வரலாற்றை விரிவாகப் பதிவுசெய்து, இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் விரும்புகிறேன்.’’