Published:Updated:

வி.ஐ.பி டின்னர்

வி.ஐ.பி டின்னர் - ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர் - ஜோதிமணி

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர் - ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர் - ஜோதிமணி

தொகுதி மக்களுக்கு பிரச்னை என்றால் உடனடியாக களத்தில் நிற்பவர், காங்கிரஸ் கட்சியின் கரூர் எம்.பி ஜோதிமணி. அப்படிச் செல்லும் நேரங்களில் தொண்டர்களின் வீடுகளில் உணவு உண்பது சகஜம். சமீபத்தில்கூட தொகுதி பெண்மணி ஒருவரின் வீட்டுக்குச் சென்று கொள்ளுத் துவையல், கொள்ளு ரசம் உண்டவர், அதை சிலாகித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சரி, ஜோதிமணி டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்கள் யார், அதற்கு அவர் தேர்வு செய்திருக்கும் இடங்கள் என்ன என்பதையெல்லாம் பார்ப்போம்!

காந்தியுடன் வார்தா ஆசிரமத்தில் எளிய உணவு!

``காந்திதான் என் முதல் சாய்ஸ். அன்பும் சகிப்புத்தன்மையுமே அவரது அரசியலின் அடிப்படையாக இருந்தன. ஆனால், இப்போது நாட்டில் வெறுப்பரசியலே நிலவுகிறது. இந்தச் சூழலில் நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்வது, நாங்கள் எதைத் தக்கவைத்துக்கொள்வது என்று அவரிடம் கேட்பேன். வார்தா ஆசிரமத்தில்தான் அந்த டின்னர் நடக்கும். மாபெரும் தலைவர்கள் அந்த எளிய குடிலில், எளிமையான உணவுகளைச் சாப்பிட்டு மிகப்பெரிய ஆளுமைகளாக மாறியிருக்கிறார்கள். இந்திய சுதந்திரத்துக்கான களமாக அந்த இடம் இருந்திருக்கிறது. அங்கே, எளிமையான உணவுகளோடு காந்திக்கு டின்னர் அளிப்பேன்.’’

நேருவுடன் ஆனந்த பவனில் விருந்து!

``காந்தியின் கனவை செயல்படுத்தியவர்களில் முதன்மையானவர் நேரு. இன்றைய இந்தியாவே நேருவின் மாபெரும் கனவுதான். அந்தக் கனவுக்காக அவர் 17 வருடங்கள் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். தேர்தல் ஆணையம், நீதிமன்றம், ஊடகத்துறை என ஒவ்வோர் அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்; இறுதி அதிகாரம் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று விரும்பியவர் அவர். ஆனால், இன்று அதற்கு நேர் எதிரான அரசியல் நடக்கிறது. இதற்கு நாங்கள் எப்படி எதிர் வினையாற்றுவது என்று நேருவிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன். நேரு பிறந்து வளர்ந்த அலகாபாத் இல்லமான ஆனந்தபவனில்தான் இந்த டின்னர் நடக்கும்!”

அம்பேத்கருடன் அரசியல் சாசனம் குறித்த உரையாடல்!

``ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதுடன் தனது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை அம்பேத்கர். சாதிரீதியான ஒடுக்குமுறைகளையும், பிற்போக்கு சிந்தனைகளையும் கொண்டிருக்கும் நம் சமூகச் சூழலில் அம்பேத்கரின் தோளிலிருந்த சுமை எதனுடனும் ஒப்பிட முடியாதது. ஒரு தேசத்தை அரசாங்கமாக மட்டுமல்லாமல், சமூகமாக சமத்துவத்தோடு முன் நகர்த்த வேண்டும். அதற்கான வழிமுறைகளை அரசியலமைப்பில் கொண்டுவந்தவர் அம்பேத்கர். இந்திய அரசியல் சாசனத்தின்மீது எனக்கு மிகப்பெரிய பிரமிப்பு இருக்கிறது. அதில் பல்வேறு ஜாம்பவான்களின் பங்களிப்புகள் இருந்தாலும், அதன் முதுகெலும்பாக இருந்தவர் அம்பேத்கர்தான். அவர், அதை எப்படி விஷுவலைஸ் செய்து பார்த்திருப்பார் என்று அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன். புத்தமதம் சார்ந்த இடத்தில் இந்த டின்னர் நடக்கும்.’’

வி.ஐ.பி டின்னர்

அபுல் கலாம் ஆசாத்துடன் நவீன இந்தியா குறித்த கனவுகள்!

``இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் இருவர். ஒருவர், காந்தி. மற்றொருவர், அபுல் கலாம் ஆசாத். கடினமான அந்தக் காலகட்டத்தில் ஓர் இஸ்லாமியராக அவரது நிலைப்பாடு ஆச்சர்யப்படத்தக்கது. இந்தியாவின் மிகச்சிறந்த கல்வியாளர், முற்போக்குச் சிந்தனையாளர் அவர். தொலைநோக்குக் கல்வித் திட்டத்தில் நேருவுக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ, அதே பங்கு ஆசாத்துக்கும் இருக்கிறது. இஸ்லாமிய மக்களுக்கு நெருக்கடி மிகுந்த இந்தக் காலகட்டத்தில் அவருக்குப் பிடித்த உணவுகளோடு, மத நல்லிணக்கம் பற்றி அவருடன் உரையாட வேண்டும்.’’

தோழர் நல்லகண்ணுவுடன் லட்சியவாத உரையாடல்!

``காமராஜர்தான் எனது ஆதர்சம். ஆனால், நான் அவரைப் பார்த்ததில்லை. ஆனால், தோழரும் தாத்தாவுமான நல்லகண்ணு நம் கண்முன்னே அப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார். அரசியலை அதிகாரத்தோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்காமல், மக்களுக்கான இயக்கமாகப் பார்ப்பவர். சுதந்திரப் போராட்ட காலம்தொட்டு தற்போதுவரை தமிழ்நாட்டு அரசியலின் அனைத்து அசைவுகளையும் தாத்தா பார்த்திருக்கிறார். அது குறித்து அவரிடம் உரையாட வேண்டும். லட்சியவாதங்கள், அரசியல் மதிப்பீடுகள் வீழ்ச்சியடையும் காலம் இது. மக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டுமே இருக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இப்படியான சூழலிலும், தாத்தா தனது கொள்கைகளுடன் எப்படி நெஞ்சுரத்துடன் இருக்கிறார் என்பதை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன். எனது கிராமத்து வீட்டில் அவருக்குப் பிடித்த உணவுகளோடு நீண்ட உரையாடலாக அது இருக்க வேண்டும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism