Published:Updated:

வி.ஐ.பி டின்னர் - கனிமொழி

வி.ஐ.பி டின்னர் - கனிமொழி
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர் - கனிமொழி

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர் - கனிமொழி

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர் - கனிமொழி
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர் - கனிமொழி

தி.மு.க மகளிரணிச் செயலாளர், நாடாளுமன்றக்குழுத் துணைத் தலைவர் எனப் பல முக்கியப் பொறுப்புகளில் இருந்தாலும் கலை, இலக்கியம் சார்ந்த விஷயங்களில் பெரிதும் ஆர்வமிக்கவர் கனிமொழி எம்.பி. ‘நெய்தல் - தூத்துக்குடி கலைவிழா’ என்கிற பெயரில் கிராமியக் கலைகள், தமிழர் பண்பாடு, உணவு முறை குறித்த மாபெரும் விழாவையும் சமீபத்தில்தான் நடத்தினார். அவர் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்களும், அதற்கான காரணங்களும்...

தந்தை பெரியாரும், வெறுப்பு அரசியல் குறித்த உரையாடலும்!

``சமூகத்தின் அழுக்குகளைத் துடைத்தெறிவதற்காகவே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மனிதம் மட்டுமே உண்மை என்று உரத்த குரலில் முழங்கியவர். பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனக்கென வசதிகளைத் தேடாமல் சமூகத்தில் சாதி, மதம் என்ற பெயரால் மனிதர்கள் மனிதர்களை வெறுக்கும், அவமதிக்கும் கொடுமையை மாற்ற வேண்டும் என்று பாடுபட்டவர். செருப்பு வீச்சாக இருந்தாலும், மலர் மாலையாக இருந்தாலும் அவற்றை ஒன்றாகப் பார்த்தவர், ஏற்றுக்கொண்டவர். இன்றைக்கும் அவரைப் பார்த்து பயப்படும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் இன்றும் செருப்பு மாலைகளால் அவருக்கு மரியாதை செலுத்திக்கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட போராளியுடன் உட்கார்ந்து, அவருடைய ஈரோட்டு வீட்டில் அவருக்குப் பிடித்த உணவுகளோடு சாப்பிட வேண்டும். இன்றைய சமூகம், இன்று மனிதர்களுக்கு மத்தியில் விதைக்கப்படும் வெறுப்பு அரசியல், இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அவரிடம் கேட்க வேண்டும்.’’

பெருங்கோப்பெண்டும், சங்க காலப் பெண்கள் குறித்த உரையாடலும்!

``சங்க காலத்தில், அரசன் பூதப்பாண்டியன் இறந்த பிறகு, கணவனை எரிக்க மூட்டிய தீயில் தானும் விழுந்து சாகச் செல்கிறார் பெருங்கோப்பெண்டு. சான்றோர்கள் அவரைத் தடுக்க, `நெய் சேர்க்காமல், ஒரு கைப்பிடி அரிசியில் வெள்ளை எள் சாதத்துடன் புளி ஊற்றி வெந்த சாதத்தைச் சாப்பிட்டு, பரல் - கற்களைப் பரப்பிய தரையில் படுத்துத் தூங்கும் விதவை வாழ்வை என்னை வாழ வைப்பீர்கள் என்றால், அதற்கு பதிலாக நான் நெருப்பில் விழுந்து இறந்துபோகிறேன்’ என்று பதில் சொன்னார். அவருடன் பேச வேண்டும். பெண்பாற் புலவர்கள் இருந்த காலகட்டத்தில், ஓர் அரசனுக்குத் தூதராக ஔவை செல்ல முடிந்த காலகட்டத்தில், விதவை நோன்பு என்பதும் இருந்திருக்கிறது. அன்று வாழ்ந்த பெண்களின் வாழ்க்கை என்னவாக இருந்தது என்று அவரிடம் பேசித் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் அதை எப்படிப் பார்த்தார்கள், அதிலிருந்து நாம் எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்று புரிந்துகொள்ள வேண்டும். அவருக்குப் பிடித்த உணவு விருந்தோடு இந்தச் சந்திப்பு நடைபெற வேண்டும்.’’

முத்துலட்சுமி ரெட்டியும், வெற்றிப் பாதைக்கான ஊக்கமும்!

``தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர். இந்தியாவிலேயே சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண். இன்றைக்கும் அரசியலில் பெண்கள் ஈடுபடுவது சவாலாக இருக்கக்கூடிய காலகட்டத்தில், பெண்கள் படிக்கவே கூடாது என்று இருந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் உடைத்து, வென்று காட்டியவர். அவர் முதலில் கல்லூரிக்குச் சென்றபோது, ஒரு பெண்ணாக என்னென்ன சவால்களை எதிர்கொண்டார், அவர் வீட்டிலிருந்த பிரச்னைகளை எப்படிச் சமாளித்தார், அவ்வை இல்லம் மற்றும் கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஆகியவற்றைத் தொடங்கியது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்துப் பேச வேண்டும். இன்றைக்கும் தன் கருத்துகளைப் பொதுவெளியில் பதிவுசெய்யும் பெண்கள், சமூக ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், அவரின் காலத்தில் சமூகம் அவரை எப்படிப் பார்த்தது, விமர்சித்தது என்று அவரிடம் கேட்க வேண்டும். அவரது வலிகள், வெற்றிகள் குறித்துப் பேசி, இப்போதுள்ள சூழ்நிலைகளால் சோர்ந்துபோகும் பெண்களிடம் அவரது வெற்றிப் பாதையைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவரின் சென்னை வீட்டில் இந்தச் சந்திப்பு ஒரு தேநீருடன் நடக்க வேண்டும்.’’

வி.ஐ.பி டின்னர் - கனிமொழி

மாதவிக்குட்டியுடன் ஒரு நிறைவேறா சந்திப்பு!

``பெண்கள் தன்னைப் பற்றி, தங்களது உணர்வுகளைப் பற்றி, தடைகளைக் கடந்து பொதுவெளியில் சொல்ல முடியும் என்று வெளியுலகுக்குக் காட்டியவர் மாதவிக்குட்டி. எதிலும் தனது எண்ணங்களை விட்டுக்கொடுக்காமல், சமரசம் செய்துகொள்ளாமல் கடைசிவரை உறுதியாக இருந்தவர். மனிதர்களை நேசித்தவர். அவர் பலமுறை என்னைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். எனக்கும் அவரைச் சந்திக்க மிகுந்த ஆர்வம் இருந்தது. யோசித்துப் பார்க்கும்போது, அர்த்தமே இல்லாத காரணங்களால் கடைசிவரை அந்தச் சந்திப்பு நடக்காமலேயே போனது. இன்று நினைத்தாலும் அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டதை நினைத்து வருத்தப்படுவேன். ஒரு வாய்ப்பிருந்தால் அந்த நிறைவேறா சந்திப்பு, அவரின் சொந்த மாநிலமான கேரளாவில், அவருக்குப் பிடித்த உணவுகளோடு நிகழவேண்டும்.’’

அப்பாவின் ஒரு வாய்ச் சோறு!

``பலமுறை அப்பாவுடன் உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் இன்னும் ஒரு முறை அவரோடு உட்கார்ந்து சாப்பிட வேண்டும். அவர் எப்போதும் விரும்பிச் சாப்பிடும் விரால் மீனிலிருந்து முள்ளை எடுத்துவிட்டுச் சாப்பிடுவதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அப்பா நம்மோடுதானே இருக்கிறார் என்று, கேட்கத் தவறிய எத்தனையோ விஷயங்கள் உண்டு. `இன்னொரு நாள், இன்னொரு நாள்...’ என்று சொல்லி கடைசியில் அவர் இல்லாத நாளும் வந்தது. அவரிடம் கேட்கத் தவறிய, மறந்த, தள்ளிப்போட்ட எத்தனையோ விஷயங்கள் அப்பா என்ற விதத்தில், அரசியல் தலைவர் என்ற முறையில் அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தால், அவற்றையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். குழம்பு நன்றாக இருந்தால், அவரே ஒரு வாய் உருட்டிக் கையில் தருவார்கள். அதற்காகவே அவரோடு சாப்பிட வேண்டும்.’’