Published:Updated:

வி.ஐ.பி டின்னர்

வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

அரசியல்ரீதியாக கட்சிகள் மாறிப் பயணித்தாலும் அடிப்படையான சில கொள்கைகளில் எப்போதும் உறுதியாக இருப்பவர் குஷ்பு. மனதில் பட்டதை வெளிப்படையாகவும் துணிச்சலோடும் பேசும் பெண்மணியும்கூட. பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பு அரசியல் பணிகள் ஒருபுறம்... சினிமா பணிகள் மறுபுறம் என பிஸியாக இருக்கிறார். அவர் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்களையும் அதற்கான காரணங்களையும் கேட்டோம்...

காமராஜரும் அரசுப்பள்ளி சந்திப்பும்!

``கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த மாபெரும் தலைவர் காமராஜர். அவர் இறந்தபோது அவரிடம் வெறும் 136 ரூபாயும், இரண்டு ஜோடி செருப்புகளும் மட்டுமே இருந்தன. ஓர் அரசியல் தலைவர் இப்படியெல்லாம் இருக்க முடியுமா என்று அனைவரும் வியக்கும் வகையில் வாழ்ந்து மறைந்தவர் அவர். அவருடன் ஒரு விருந்து சந்திப்பு நடந்தால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு வேறில்லை. அந்தச் சந்திப்பில் அவரது எளிமையான வாழ்க்கை குறித்தும், அணைக்கட்டுகள், பள்ளிக்கூடங்கள் என அப்போதே தொலைநோக்குத் திட்டங்களை எப்படிச் சிந்தித்தீர்கள் என்பது குறித்தும் கேட்டுத் தெரிந்துகொள்வேன். குறிப்பாக, ‘மதிய உணவு கொடுத்தால் ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்கிற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?’ என்று கேட்பேன். அவர் கட்டிய அரசுப்பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுடன் அமர்ந்து, அவருக்கு உணவு பரிமாறியபடியே இந்தச் சந்திப்பு நடைபெற வேண்டும்!’’

கலைஞரும் கோபாலபுரம் இல்ல சந்திப்பும்!

``எனது அடுத்த விருப்பம் நிச்சயம் கலைஞர்தான். வார்த்தை ஜாலத்தில் அவரை மிஞ்ச ஆளே இல்லை. தனது நல்ல சிந்தனைகளை நல்ல தமிழோடும் நகைச்சுவையோடும் மக்களிடம் கொண்டுசேர்த்தவர். அதுமட்டுமல்ல... நான் அரசியலுக்கு வந்தபோது, ‘அரசியல் நாகரிகம்’ என்றால் என்னவென்று எனக்குக் கற்றுக்கொடுத்தவர் கலைஞர்தான். அதனால், அவர்மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. அவரிடம் இந்த விஷயங்களையெல்லாம் எங்கு கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்பேன், அவர் அண்ணாவைக் கைகாட்டுவார். நான் தற்போது பயணித்துவரும் அரசியல் குறித்து அவரது கருத்து என்னவென்பதையும் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அவரது கோபாலபுரம் வீட்டில் காலை 7 மணிக்கு என் கையில் டீ, அவரது கையில் காபியுடன் இந்தச் சந்திப்பு நடைபெற வேண்டும்!’’

வி.ஐ.பி டின்னர்

ராகுல் காந்தியும் வள்ளுவர் சிலை சந்திப்பும்!

``அரசியலில் ஏன் அவரால் முன்னேற முடியவில்லை என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காகவே ராகுல் காந்தியுடன் ஒரு சந்திப்பு நடைபெற வேண்டும். ஒரு காலத்தில் எவ்வளவு பெரிய கட்சியாக காங்கிரஸ் இருந்தது... ஆனால், இன்று மிகப்பெரிய பின்னடைவை அந்தக் கட்சி சந்தித்திருக்கிறது. வெளியில் நடக்கிற விஷயங்களையெல்லாம் கவனித்து, கருத்து சொல்லும் ராகுல் காந்தி, தனது கட்சிக்குள் நடக்கிற விஷயங்களை கவனிக்கிறாரா, நாம் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்று சிந்தித்திருக்கிறாரா என்றால் இல்லவே இல்லை என்பதுதான் யதார்த்தம். அதை எப்போது செய்யப்போகிறீர்கள் என்று அவரிடம் கேட்க வேண்டும். கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலைக்குக் கீழே, அவருக்கு என்ன உணவு பிடிக்குமோ அதை விருந்தளித்து இந்தச் சந்திப்பு நடைபெற வேண்டும்!’’

ஜெயலலிதா அம்மாவும் ஒரு நெடுஞ்சாலைப் பயணமும்

``ஒரு துணிச்சலான பெண் என்கிற வகையில் ஜெயலலிதா அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்க்கட்சியில் இருந்தபோதும் பெண் என்கிற முறையில் அவரது துணிச்சலைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன், பாராட்டியிருக்கிறேன். ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் சூழலில், என்னென்ன தடைகளையெல்லாம் எதிர்கொண்டு இந்த இடத்துக்கு வந்தடைந்தீர்கள் என்று அவரிடம் கேட்க வேண்டும். நெடுஞ்சாலையில் இருவரும் காரில் அமர்ந்து ஜெயலலிதா அம்மாவுக்குப் பிடித்த சாக்லேட்டுகள், எனக்குப் பிடித்த ஐஸ்க்ரீம்களுடன் இந்தச் சந்திப்பு அமைந்தால் சிறப்பாக இருக்கும்!’’

நண்பர் கமலும் ஆழ்வார்பேட்டை அலுவலக சந்திப்பும்!

``அடுத்து, எனது நண்பர் கமல். நீங்கள் அரசியலுக்கு வர முக்கியக் காரணம் என்ன என்று அவரிடம் கேட்க வேண்டும். அரசியலுக்கு வந்த பிறகு அவர் சந்தித்த நெருக்கடிகள், அடைந்த லாப, நஷ்டங்கள் என்னென்ன என்பது குறித்தும் உரையாட வேண்டும். ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற வேண்டும். பறக்கும் விமானம், மிதக்கும் கப்பல், ஓடும் கார் தவிர்த்து பறப்பன, ஊர்வன, நடப்பன என எல்லாவற்றையும் ஒரு பிடி பிடிப்பார் அவர். சாப்பாடு குறித்த அனைத்து விஷயங்களையும் எனக்குச் சொல்லிக் கொடுத்த குருவும் அவர்தான். அதனால், விதவிதமான உணவு வகைகளுடன் நன்றாகச் சாப்பிட்டுக்கொண்டே இந்தச் சந்திப்பு நடைபெற வேண்டும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism