Published:Updated:

வி.ஐ.பி டின்னர் - முத்தரசன்

வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர் - முத்தரசன்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

ஓர் அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் என்கிற எந்தவித பந்தாவும் இல்லாமல், மிக எளிமையான வாழ்க்கை முறையைக்கொண்டவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன். விவசாயத் தொழிலாளர்களுக்காக எப்போதும் சோர்வில்லாமல் உழைத்துவருபவர் என்பது அவரது பிரதான அடையாளம். அவர், ஸ்பெஷல் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்கள் யார்... யார்... அதற்கான காரணங்கள் என்னென்ன?

தோழர் ஆர்.என்.கே-வுக்கு திருநெல்வேலி ஸ்பெஷல் சைவ விருந்து!

``தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவர், விடுதலைப் போராட்ட வீரர், எங்களால் `தோழர் ஆர்.என்.கே’ என அழைக்கப்படும் தோழர் நல்லகண்ணுதான் என் முதல் தேர்வு. அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய மிக உயர்ந்த பண்பு அவரிடம் உண்டு. பொதுவாழ்விலோ, தனிப்பட்ட வாழ்விலோ அவர் அடையும் துன்பங்களை அவரே தாங்கிக்கொண்டு சமாளிப்பாரே தவிர, பிறர்மீது ஒருபோதும் சுமத்த மாட்டார். பல உயர்ந்த பொறுப்புகளுக்குப் போன பிறகும், அடித்தட்டு மக்களின்மீது அவர்கொண்ட அன்பும் அக்கறையும் இன்றளவும் மாறாமல் அப்படியே இருக்கின்றன. கட்சியில் இருக்கும் இளம் தோழர்களுக்கும் சரி, எங்களைப் போன்றவர்களுக்கும் சரி, அவர்தான் முன்மாதிரி. அந்த அடிப்படையில் அவருக்கு ஒரு டின்னர் கொடுக்கலாம். பொதுவாக, தோழர் ஆர்.என்.கே நன்றாகச் சாப்பிடக்கூடியவர். வயது முதிர்வின் காரணமாக அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை என்று நினைக்கிறேன். அந்தவகையில் திருநெல்வேலி சைவ உணவுகளை, அவரின் வீட்டிலோ, கட்சிக் கூட்டங்கள் நடக்கும்போதோ அவருக்கு விருந்தளிக்க விரும்புகிறேன். அவரிடம் அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க முடியும். தற்போதைய சூழலில் விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்னைகள் குறித்து அந்த நேரத்தில் உரையாடுவேன்!”

முதல்வர் ஸ்டாலினுக்கு ‘சமோசா’ டின்னர்!

``அடுத்ததாக என்னை உரிமையோடும் பாசத்தோடும் ‘அண்ணே... அண்ணே...’ என அழைக்கும் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு விருந்தளிக்க வேண்டும். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது, அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நேரடியாகவும், அலைபேசி வாயிலாகவும் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறோம். நம்முடைய கருத்துகளுக்கு மதிப்பளித்து அதற்குரிய பதில்களைத் தருவார்; செயல் வடிவத்துக்குக் கொண்டுவருவார். எங்கள் இருவருக்கும் வயது வித்தியாசங்கள் இருந்தபோதும், இருவரும் `அண்ணன்’ என்றுதான் பரஸ்பரம் அழைத்துக்கொள்வோம். முதல்வரான பிறகும்கூட அந்த நிலையிலிருந்து மாறாமல் அப்படியே பழகுகிறார். கூட்டணிக் கட்சியினருக்கு உரிய மரியாதையைத் தருகிறார். அவரின் மனைவி, அம்மையார் துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ புத்தகம் படித்ததன் வாயிலாக அவருக்கு சமோசா மிகவும் பிடிக்கும் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது. அதனால், சமோசா, தேநீருடன் முதல்வருக்கு மெரினா கடற்கரையில் ஒரு விருந்துவைக்கலாம். அவரிடம், ``அரசியல்ரீதியாக எங்களின் கருத்துகளுக்கு எப்போதும் பாசிட்டிவான பதில்களையே தருகிறீர்கள். தவிர நீங்கள் முதலமைச்சர், நான் கட்சித் தலைவர் என்கிறரீதியில் இல்லாமல், எப்போதும் சகோதரனாகப் பழகும் உங்கள் மாறாத அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி’ எனச் சொல்வேன்!”

நடிகர் சிவக்குமாருக்கு மீன்குழம்பு விருந்து!

``எப்போதும் மார்க்கண்டேயனாகத் திகழும் திரைக்கலைஞர் சிவக்குமார் எனக்கு மிகவும் பிடித்தமானவர். எப்போது அலைபேசியில் அழைத்தாலும் ‘வெயில்ல ரொம்ப அலைஞ்சுக்கிட்டு இருக்கே, உடம்பைப் பார்த்துக்கப்பா, நல்லா சாப்பிடு முத்தரசா’ என அக்கறையோடு பேசுவார். அதுமட்டுமல்லாமல், எந்தவொரு விஷயம் குறித்துப் பேசினாலும் நல்ல தரவுகளோடு மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளக்கும் ஆற்றல் அவருக்கு உண்டு. ஜீவா, பகத் சிங் போன்ற மாவீரர்களைப் பற்றி நானறியாத பல விஷயங்களை அவரிடமிருந்து தெரிந்துகொண்டிருக்கிறேன். அவருக்கு, அவரின் சொந்த ஊரில் மீன்குழம்பு விருந்துவைக்க வேண்டும். அப்போது `திரைப்படத்துறையில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் குறித்தும் கவலைப்படும், கருத்து தெரிவிக்கும் உங்களின் அக்கறைக்கு நன்றி’ என என் பாராட்டுகளைத் தெரிவிப்பேன்!”

வி.ஐ.பி டின்னர் - முத்தரசன்

ஆளுநர் தமிழிசைக்கு ஸ்பெஷல் மட்டன் விருந்து!

``அடுத்ததாக தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவி வகிக்கும் சகோதரி தமிழிசை சௌந்தரராஜன். அவரின் அப்பா குமரி அனந்தனை ‘அண்ணன்’ என்றுதான் எப்போதும் அழைப்பேன். ஒருநாள் குமரி அனந்தன், தமிழிசை இருவரும் ஒரே இடத்தில் இருந்தபோது ‘நம்ம கொள்கைக்கு எதிராகப் போய்க்கிட்டிருக்காங்க... அவங்களை நம்ம பக்கம் கூப்பிடுங்கண்ணே’ எனச் சொல்ல, குமரி அனந்தன் விழுந்து விழுந்து சிரித்தார். தமிழிசையும் சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தாரே தவிர, தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. அரசியல்ரீதியாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தாலும், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஒரு பக்குவம் அவரிடமிருக்கிறது. கொள்கைரீதியாக அவரிடம் எந்தச் சமரசமும் இல்லை. ஆனால், தனிப்பட்ட அவரின்மீது எனக்கு ஒரு மதிப்பு உண்டு. தொலைபேசியில் பேசும்போது ‘தம்பி... தம்பி...’ என மிகவும் பாசமாக நலம் விசாரிப்பார். அசைவ உணவுகள் சாப்பிடுவார் என்றுதான் நினைக்கிறேன். அவருக்கு ஆளுநர் மாளிகையிலேயே வைத்து மட்டன் விருந்து கொடுக்கலாம். அவரிடம், ‘விமர்சனங்களைத் தாங்கிக்கொள்கிற உங்கள் மனப்பக்குவத்துக்குப் பாராட்டுகள்’ எனச் சொல்வேன்!”

சிவாஜி கணேசனுக்குத் தஞ்சை ஸ்பெஷல் விரால் மீன் விருந்து!

``அடுத்ததாக செவாலியே சிவாஜி கணேசன். எங்கள் கட்சி அலுவலகத்துக்குப் பக்கத்தில்தான் அவருடைய வீடு. ஆனாலும், அவருடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அதேநேரம், அவருடைய ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வரும் காட்சிகளை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கண்டிப்பாகப் பார்த்துவிடுவேன். உண்மையான நாதஸ்வரக் கலைஞன்கூட அப்படி நடித்துவிட முடியாது. அவர் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை. சிறு வயதிலிருந்தே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்தைப் பார்த்து ஒரு முறைகூட நான் அழாமல் இருந்ததில்லை. தஞ்சை மாவட்டத்துக்காரர்கள், விரால் மீன் குழம்பை விரும்பிச் சாப்பிடுவார்கள். அவரின் இல்லத்தில்வைத்து அவருக்கு விரால் மீன் விருந்தே கொடுத்துவிடலாம். ‘எந்தவொரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை உங்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்’ என அவரிடம் தெரிவிப்பேன்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism