Published:Updated:

வி.ஐ.பி டின்னர் - பீட்டர் அல்போன்ஸ்

வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர் - பீட்டர் அல்போன்ஸ்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பீட்டர் அல்போன்ஸ். தக்க தரவுகளோடு நிதானமாகவும் தெளிவாகவும் பேசக்கூடியர். சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், தற்போது தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக இருக்கிறார். அவர் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்களையும், அதற்கான காரணங்களையும் இங்கே பார்ப்போம்!

மறக்க முடியுமா தலைவர் மூப்பனாரை!

``என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத தலைவர் மூப்பனார். அரசியலில் எனக்கான பாதையை வகுத்துத் தந்தவர் அவர்தான். என்னைச் சட்டமன்றத்துக்கு, மாநிலங்களவைக்கு அனுப்பியதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அவருடன் அடிக்கடி சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன். டெல்லிக்குப் போகும்போதெல்லாம் அங்கிருக்கும் பெரிய ஹோட்டல்களுக்கு என்னை அழைத்துச் செல்வார். தஞ்சாவூரிலும் என்னை அருகில் அமரவைத்து, சாப்பிட வைத்திருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான இடம் டெல்லியிலுள்ள மௌரியா ஷெரட்டன் ஹோட்டல்தான். அவருக்கு அதே ஹோட்டலில், இப்போது வந்திருக்கும் புதுமையான உணவுகளோடு விருந்து கொடுக்க விரும்புகிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசியலில் மிகப்பெரிய இடத்துக்கு வர வேண்டும் என்று விரும்பியவர் மூப்பனார். முதன்முறை ஸ்டாலின் மேயரானபோது, நேரில் சென்று தங்கச் சங்கிலி அணிவித்துப் பாராட்டினார். முதன்முறை ஸ்டாலின் அமைச்சரானதிலும் மூப்பனாருக்குப் பெரும் பங்கு உண்டு. அதனால் விருந்தின்போது அவரிடம் ‘நீங்கள் வைத்த புள்ளி இன்று கோலமாகியிருக்கிறது’ என்று சொல்ல ஆசைப்படுகிறேன்!’’

வி.ஐ.பி டின்னர் - பீட்டர் அல்போன்ஸ்

கலைஞரின் பரந்துபட்ட பார்வைக்கு ஈடேது!

``சமூகத்தின் எந்தத் தரப்பு மக்களின் பிரச்னையையும் சரியான கோணத்தில் உள்வாங்கி, அதற்குத் தீர்வு காண்பதில் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். அவரது பரந்துபட்ட பார்வை என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்தும். அதேபோல, அவர் முன்னெடுக்கும் நல்ல விஷயங்களுக்கு, இவர் சரியாக வருவார் என்று ஒருவரை அடையாளம் கண்டுவிட்டால், அவர் எந்தக் கட்சியினராக இருந்தாலும் அவரது திறமையை அங்கீகரித்து ஊக்கப்படுத்துவார். எந்தவொரு விஷயத்தையும் அவரிடம் நம்பிக்கையாகச் சொல்லலாம். கலைஞரின் கோபாலபுரம் வீட்டில் அவரது பிறந்தநாளில் பலமுறை நான் சாப்பிட்டிருக்கிறேன். அங்கேயே அவருக்குப் பிடித்த உணவுகளை சர்ப்ரைஸாக வரவழைத்து டின்னர் கொடுக்க ஆசைப்படுகிறேன். `கலைஞரைப்போல ஸ்டாலினால் செயல்பட முடியாது என்று பலரும் சொன்னார்கள். ஆனால், உங்கள் பிள்ளை சோடை போகவில்லை, நீங்கள் நினைத்ததைவிட, நாங்கள் எதிர்பார்த்ததைவிட இரு மடங்கு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார்’ என்று அவரிடம் சொல்வேன்!’’

எப்போதும் என் நண்பர் இல.கணேசன்!

``தமிழ்நாட்டில் பா.ஜ.க செல்வாக்கு இல்லாத காலகட்டத்தில், பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் கட்சியைச் சுமந்து திரிந்தவர் இல.கணேசன். அந்தக் காலகட்டத்தில் பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சிப்பவர்களில் நானும் ஒருவன். ஆனாலும், என்னை எங்கு பார்த்தாலும் ‘தம்பி’ என்று பாசத்தோடு நலம் விசாரிப்பார். அவரது வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பார். அரசியலுக்கு அப்பாற்பட்டு, கண்ணியத்தோடு பழகக்கூடிய இல.கணேசன் தற்போது மணிப்பூர் கவர்னர் ஆனது எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவருக்கு என்ன உணவு பிடிக்கும் எனக் கேட்டு அவருக்கு டின்னர் கொடுக்க விரும்புகிறேன். அவரிடம், ‘பா.ஜ.க தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள், பிடித்துவிட்டீர்கள்... ஆனால், இந்தியாவை ஒற்றைக் கலாசார நாடாக மாற்றிவிடாதீர்கள். இந்தியா பல்முனை கலாசார நாடாக இருப்பதுதான் நல்லது. மூத்த தலைவராகிய நீங்கள் பிரதமரிடம் இந்த விஷயங்களை எடுத்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொள்வேன்!’’

ஓயாத உழைப்பாளி சுப.வீரபாண்டியன்!

``நல்ல சிந்தனையாளர்; எடுத்துக்கொண்ட கொள்கைக்காக எப்போதும் உழைக்கக்கூடியவர் நண்பர் சுப.வீரபாண்டியன். சட்டமன்றத்துக்குப் போக வேண்டும், நாடாளுமன்றத்துக்குப் போக வேண்டும், அரசுப் பதவி வேண்டும் என்கிற எந்த விருப்பமும் இல்லாதவர். அவர் செட்டிநாட்டு உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார். அவரை செட்டிநாடு உணவகத்துக்கு அழைத்துச் சென்று அவர் விரும்பும் உணவுகளைப் பரிமாறுவேன். அப்போது, `மாற்றுக் கருத்துகளை நாகரிகமாக முன்வைக்கும் உங்கள் திறமையை அனைவருக்கும் கற்றுக்கொடுங்கள்’ என்று கேட்டுக்கொள்வேன்!”

நண்பர் வடிவேலு இல்லாத நாளேது நமக்கு!

``நண்பர் வடிவேலுவை அழைத்து விருந்துவைக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். தினமும் இரவு பத்து நிமிடங்களாவது அவரது காமெடிக் காட்சிகளைப் பார்க்கவில்லையென்றால் எனக்குத் தூக்கம் வராது. தமிழகத்தில் தினமும் பத்தாயிரம் மீம்ஸ்கள் வெளியானால், அதில் அதிகமான மீம்ஸ்களில் அவர்தான் இருக்கிறார். அவரது வசனங்கள் எல்லாச் சூழ்நிலைக்கும் பொருந்துகின்றன. வக்கீல், டாக்டர், அரசியல்வாதி என எல்லோராகவும் அவர் உருமாறியிருக்கிறார். உடல்மொழி, பேச்சு என பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத நடிகர் அவர். விமான நிலையங்களில் பார்க்கும்போது ‘அண்ணே...’ என்று ஓடிவந்து கையைப் பிடித்துக்கொண்டு அன்பொழுகப் பேசுவார். அவரது சொந்த ஊரான மதுரையில் வைத்து, அவருக்குப் பிடித்தமான மதுரை உணவுகளோடு அவருக்கு விருந்து கொடுப்பேன். அவரிடம், ‘சமீபகாலமாக உங்கள் படம் வெளியாகாமல் இருப்பது எல்லோருக்கும் ஏமாற்றமாக இருக்கிறது. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டு இன்னும் அதிகமான படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும்’ என்று கேட்பேன்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism