Published:Updated:

வி.ஐ.பி டின்னர் - ஆர்.பி.உதயகுமார்

வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர் - ஆர்.பி.உதயகுமார்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

தென் தமிழகத்தின் அ.தி.மு.க முகங்களுள் ஒருவராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோயில் கட்டி தலைமையின்மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தியவர். வருடத்தின் பெரும்பாலான நாள்களை, பூஜை விரதம் எனக் கழித்துவருபவர். அவர் ஸ்பெஷல் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்கள் அதற்கான காரணங்கள் குறித்து ஆர்வமாகப் பகிர்ந்துகொண்டார்!

புரட்சித்தலைவி அம்மாவுக்கு என் வீட்டில் விருந்து!

``நான் முதலில் புரட்சித்தலைவி அம்மாவின் பெயரைத்தான் சொல்வேன் என்பது உலகத்துக்கே தெரியும். காரணம், அம்மாவால் வாழ்வு பெற்று வளர்ந்தவன் நான். நான் மட்டுமல்ல, என்னைப் போன்ற பல சாமானியர்களும் மக்கள் பிரதிநிதிகளாகப் பணியாற்றக் காரணமாக இருந்தவர் அம்மாதான். ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்கிற தாரக மந்திரத்துக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். ஆரம்ப காலங்களில் சுற்றுப்பயணம் போகும்போது, தொண்டர்களின் வீடுகளில் சாப்பிடுவார். ஒரு வாய்ப்பு கிடைத்தால், என்னுடைய இல்லத்திலேயே அவர்கள் விரும்புகிற உணவுகளையெல்லாம் சமைத்துப் பரிமாற வேண்டும் என்பது என் ஆசை. ‘அம்மா கடைப்பிடித்த ராணுவக் கட்டுப்பாடு, நிர்வாகத் திறமை, பாரபட்சமில்லாமல் எல்லோரையும் சரிசமமாக பாவிப்பது உள்ளிட்ட குணநலன்களை அம்மாவுக்குக் கொடுத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்வேன். அந்தச் செய்தியை அம்மாவிடம் பகிர்ந்துகொள்வேன்!’’

ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் இருவருக்கும் ஒன்றாக அழைப்பு!

``ஒரு நபராகத்தான் சொல்ல வேண்டும் என்கிறீர்கள். ஆனால், அம்மாவுக்குப் பிறகு கழகத்தைக் கட்டிக் காப்பாற்றுகிற அண்ணன் ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் இருவரையும் வேறு வேறாக என்னால் பார்க்க முடியாது. அதனால், இரண்டு பேரையும் ஒன்றாக அழைத்து விருந்து கொடுக்க வேண்டும். அம்மாவின் பிறந்தநாளுக்கு ஏழை, எளிய மக்களுக்குத் திருமணம் நடத்துவோம். அது போன்ற விழாவில் என்னுடைய மகளுக்குத் திருமணம் நடத்தி, அந்த விழாவுக்கு அவர்கள் இருவரையும் அழைத்து விருந்து கொடுக்க வேண்டும். `மாபெரும் தொண்டர்படை கொண்ட மக்கள் இயக்கத்தை வழிநடத்தும் திறமை, உழைப்பு, மதிநுட்பம், பொறுமை ஆகியவை இன்னும் வலிமை பெற வேண்டும். அதற்குப் புரட்சித்தலைவரின் ஆன்மாவும், புரட்சித்தலைவியின் ஆன்மாவும் உங்களை வழிநடத்தும்’ என்று அவர்களிடம் சொல்வேன்!’’

அறிஞர் அண்ணாவும் அறுசுவை விருந்தும்!

``சமூகநீதி, பெண்ணுரிமை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. அரசியல்ரீதியாக அதற்குத் தந்தை பெரியார் காரணமாக இருந்தாலும், அவை செயல்வடிவம் பெறக் காரணமாக இருந்தவர் அறிஞர் அண்ணாதான். துணிச்சலாக வாக்கு அரசியலில் களமிறங்கி, முதலில் 15 எம்.எல்.ஏ-க்கள், 50 எம்.எல்.ஏ-க்கள் எனப் படிப்படியாக தி.மு.கழகத்தை வழிநடத்தி ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவர் அண்ணா. எதிர்க்கட்சியாக இருக்கும்போதே, சட்டமன்றத்தில் அண்ணா எடுத்துவைத்த வாதங்கள், விளக்கங்களெல்லாம் மிகச் சிறப்பானவை. அதுமட்டுமல்ல, ‘ஆளுங்கட்சி கொதிக்கிற சோறு என்றால், எதிர்க்கட்சிகள் அதைப் பதம் பார்க்கிற அகப்பையாக இருக்க வேண்டும். மாறாக, சட்டியையே பதம் பார்த்துவிடக் கூடாது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை மாப்பிள்ளைத் தோழனாகப் பார்க்க வேண்டுமே தவிர எதிரியாகப் பார்க்கக் கூடாது’ என அவர் வகுத்த இலக்கணங்கள், உவமைகள் காலத்துக்கும் நிலைத்து நிற்பவை. அண்ணா விரும்புகிற ஓர் இடத்தைத் தேர்வுசெய்து, அறுசுவை உணவுகளை அவருக்கு விருந்தாக்க வேண்டும்!’’

வி.ஐ.பி டின்னர் - ஆர்.பி.உதயகுமார்

பிரதமர் மோடியும் மதுரை ஸ்பெஷல் விருந்தும்!

``பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பது என் ஆசை. நவீன காலத்துக்கு இந்தியாவை எடுத்துச் செல்வதில் அவர் எடுக்கும் முயற்சிகள், அதில் அவர் அடையும் வெற்றிகள் பிரமிக்கவைக்கின்றன. நிதி ஆயோக், பண மதிப்பிழப்பு என அவர்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட விஷயங்களில்கூட அவர் சாதித்துக் காட்டியிருக்கிறார் என்றே கருதுகிறேன். நான் அமைச்சராக இருந்த காலத்தில், அவர் தமிழ்நாட்டுக்கு வருகைபுரிந்தபோது பலமுறை அவரை வரவேற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்துல் கலாம் மரணத்தின்போதும் நான்தான் அவரை வரவேற்று நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்றேன். அதேபோல, அவருடன் பலமுறை ஒன்றாகச் சாப்பிடும் வாய்ப்பும் எனக்கு அமைந்திருக்கிறது. அவருக்கு மதுரையில், நம்ம ஊர் ஸ்பெஷல் உணவுகளைச் சமைத்து விருந்தளிக்க வேண்டும் என்பது என் விருப்பம்!’’

தந்தைக்கு மரியாதை!

``அடுத்ததாக மறைந்த என் தந்தை போஸுக்கு விருந்து கொடுக்க வேண்டும். சிறு வயதிலிருந்து எனக்கு உணவு கொடுத்தவர். மிகச்சிறப்பாக என்னை வளர்த்தெடுத்தவர். புரட்சித்தலைவரின் தீவிர ரசிகராகவும் அ.தி.மு.க-வின் உண்மையான தொண்டனாகவும் வாழ்ந்து மறைந்தவர். அவரின் மூலம்தான் எனக்கு அரசியல் ஆர்வம் பிறந்தது. அதனால் ஒருவகையில் அவர் என் வழிகாட்டியும்கூட. அவருக்கு அம்மாவுடன் சேர்ந்து விருந்து கொடுக்க வேண்டும். அவருக்குப் பிடித்த உணவுகள் என்று எதுவுமில்லை. அன்பு கலந்த உணவாக இருந்தால், கூழானாலும், பழைய கஞ்சியாக இருந்தாலும் விரும்பிச் சாப்பிடுவார். அன்பில்லாமல் பிரியாணி கொடுத்தால்கூட சாப்பிட மாட்டார். என் தாய் மீனாளும் அப்படித்தான் மிகுந்த வைராக்கியமானவர். எனக்காகப் பல தியாகங்கள் செய்தவர், அவரும் உடனிருக்கும்படி பார்த்துக்கொள்வேன்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism