Published:Updated:

வி.ஐ.பி டின்னர் - சீமான்

வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

உணவு சார்ந்து சீமான் பேசும் விஷயங்கள் அவ்வப்போது சர்ச்சையாவதுண்டு. ஆனால், இயல்பாகவே அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதிலும், நண்பர்களுக்குச் சமைத்துப் பரிமாறுவதிலும் அவருக்கு அலாதியான ஆர்வமுண்டு. திரைத்துறையில் அவர் பணியாற்றிய காலத்தில், ‘சீமான் ரூமுக்குப் போனா சாப்பாட்டுக்குப் பிரச்னையில்லை’ என அவரின் அறைக்கு உதவி இயக்குநர்கள் படையெடுத்த கதைகள் ஏராளமுண்டு. முழுநேர அரசியல்வாதியாகப் பரிணமித்திருக்கும் சீமான், இப்போது டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து நபர்களையும், அதற்கான காரணத்தையும் அவரிடம் கேட்டோம்!

அப்பா பாரதிராஜாவும் பாசப் போராட்டமும்!

``என்னுடைய முதல் விருப்பம் என் அப்பா பாரதிராஜாதான். கதை விவாதங்களின்போது அப்பாவும் நானும் மட்டும் தனியாகப் பல இடங்களில் தங்கியிருக்கிறோம். அப்போதெல்லாம் ‘அந்தக் கறியை எடுத்து சாப்பிடுடா, இந்தக் கறியை எடுத்து கடிடா’ என என்னைப் பயங்கரமாகச் சாப்பிடவைத்து, அப்படியே தூங்கவும் வைத்துவிடுவார். அடுத்தநாள் காலையில் எழுந்து, ‘அப்பா சாப்பிடுறதுக்கு முன்னாடியே தூங்கிட்டியா?’ என்று கேட்க, ‘நீங்கதானப்பா தூங்கச் சொல்லி, போர்வையெல்லாம் போர்த்திவிட்டீங்க’ என்று நான் சொல்ல, இரண்டு பேருக்கும் இடையில் பயங்கரமா சண்டை நடக்கும். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான ஒரு பாசப் போராட்டமா அந்தக் காட்சி இருக்கும். அதனால், அவருடன் இணைந்து சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். நான் வைக்கும் உப்புக்கறி அவருக்கு விருப்பமான உணவு. என் வீட்டிலோ, அவர் வீட்டிலோ என் கையால் உப்புக்கறி சமைத்து அவருக்குப் பரிமாறிக்கொண்டே கதை பேச ஆசை!’’

ஐயா வைரமுத்துவும் அறிவுப் பரிமாற்றமும்!

``அப்பா பாரதிராஜாவைப் போலத்தான் கவிப்பேரரசு வைரமுத்து ஐயாவும் எனக்கு. நாங்கள் சந்தித்துக்கொண்டால் இலக்கியம், வரலாறு, அரசியல், சினிமா என மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு அறிவுக் கொள்முதல்தான். ‘வாங்க சீமான்... நாம ரெண்டுபேரும் எங்க தோட்டத்துக்குப் போயி, நாட்டுக்கோழி அடிச்சு சாறு குடிப்போம்’ என்று தேனியிலிருக்கும் அவருடைய தோட்டத்துக்கு வரச்சொல்லி பல நாள்களாகஅழைத்துக்கொண்டிருக்கிறார். ‘படம் எடுத்தால் மெட்டமைக்கப் போகலாம்’ என நானும் பல நாள்களாகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அந்த இடத்துக்குப் போக வேண்டும், அவருடன் மனம்விட்டுப் பேச வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. என்னைப்போலவே அவரும் பயங்கரமான அசைவைப் பிரியர். அவரின் தோட்டத்துக்குப் போய், அவருக்குப் பிடித்த மீன், கோழி, கறி போன்ற அசைவ உணவுகளைச் சமைத்து அவருக்குப் பரிமாறி, அவரிடமிருந்து அறிவைத் திருட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், கறியைச் சமைத்துப்போட்டு, அறிவை ஆட்டையப்போட வேண்டும்... அவ்வளவுதான்!’’

ஒளவைப் பாட்டியும் தென்னம்பால் கதையாடலும்!

``என் பாட்டி... அறிவு மூதாட்டி, பேரறிஞர் அவள். எங்கள் தாத்தா அதியமானுடன் கள் குடித்து, பல சேட்டைகள் செய்திருக்கிறாள் கிழவி. அவளிடம், ‘வா... பேரனோட உட்கார்ந்து கள்ளு குடி, இந்தா கறியைச் சாப்பிடு’ என அவளோடு உட்கார்ந்து விருந்துண்ண ஆசை. இதுதவிர, பாட்டிக்குப் பிடித்த உணவுகளைக் கேட்டு அவளுக்குச் சமைத்துப்போடப் பேராசை. அவளைச் சாப்பிடச் சொல்லி பார்த்துக்கொண்டே இருப்பதே ஒரு வியப்புதான். பெண்கள் படிக்கவே முடியாது என இருந்த காலத்தில் பெண்பாற்புலவராக இருந்திருக்கிறாள். ஆனால், நீயே ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, `தையல் சொல் கேளாய்’ என்று ஏன் சொன்னாய், `பெண் பேச்சைக் கேட்கக் கூடாது’ன்னு நீயே சொல்லலாமா?’ என்று அவளுடன் சண்டைபோடுவேன்!’’

வி.ஐ.பி டின்னர் - சீமான்

வள்ளுவரும் மூலிகைச்சாறு குறித்த உரையாடலும்!

``உலகப் பொதுமறை தந்த பேராசான், என் பாட்டன் வள்ளுவனுக்கு விருந்தளிக்க ஆசை. அவர் அளவுக்கு யாரும் வாழ்வியல் நன்னெறியை இதுவரை சொன்னதில்லை. மனிதனுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் 130 அதிகாரங்களில், 1,330 பாடல்களாக இந்த உலகில் ஒருவன் சொல்லியிருக்கிறான் என்றால், அது என் பாட்டன்தான். அவர் நம்மைப்போல அசைவமெல்லாம் சாப்பிட மாட்டார் என்று நினைக்கிறேன். அதனால், அவருக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு, சமைத்துப்போடுவேன். அவரிடம் ‘நீங்க உண்மையிலே 1,330 குறள்கள்தான் எழுதினீங்களா, இல்லை கூட எதுவும் எழுதியிருக்கீங்களா?’ என்று கேட்டுத் தெரிந்துகொள்வேன். ` ‘கறி சாப்பிடக் கூடாது, கள்ளு குடிக்கக் கூடாது’ னு நீங்க சொன்னதை மட்டும் பேரனால கடைப்பிடிக்க முடியாது தாத்தா’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுவேன். அதையும் மீறி அவர் குடிக்கக் கூடாது என்று சொன்னால், `நான் ஆட்சிக்கு வந்ததும் பனம்பால், தென்னம்பால், மூலிகைச்சாறு என்று கள்ளின் பெயரை மாத்திடுவேன்’ என்று சொல்லி சமாளிப்பேன்!’’

வேலுநாச்சியாரும் பா.ஜ.க குறித்த கிண்டல் பேச்சும்!

``தமிழர் இன வரலாற்றில், என் பாட்டி வேலு நாச்சியாருக்கு இணையாக ஒரு பெண்ணைப் பார்க்க முடியாது. அவளுக்கு முன்புகூட யாராவது இருந்திருக்கலாம். ஆனால், நாமறிந்த வரைக்கும் வரலாற்றுக் குறிப்பின்படி அவள்தான் வீரம்மிக்க மங்கையாக இருக்கிறாள். கைம்பெண்ணாக இருந்து, கைக்குழந்தையுடன் படைகட்டி, சண்டையிட்டு இழந்த நிலத்தை மீட்ட கதையை அவளே சொல்லிக் கேட்க ஆசை. எங்கள் ஊர் சிவகங்கைச் சமையலை, நான் வழக்கமாக வீடியோ அழைப்பில் அம்மாவிடம் கேட்டுச் சமைப்பது வழக்கம். பாட்டிக்கும் அப்படிச் சமைத்துக்கொடுக்க ஆசை. அரசியாக இருந்தவள். அதனால், அரண்மனையில் வைத்துப் பரிமாறுவேன். பா.ஜ.க-காரன் பாட்டிக்குக் கூட்டம் நடத்துவதை மௌனமாகப் பார்த்து இருவரும் சிரித்துக்கொள்வோம். ‘இவிங்க அக்கப்போரு தாங்க முடியலை, என்னையும் விட மாட்டேங்கிறாங்களே சீமான்’னு அவ சொல்ல, நான் சிரிக்க... அந்த இடமே கலகலப்பா இருக்கும்!’’