தமிழகத்தின் சீனியர் அரசியல்வாதிகளில் ஒருவர் சு.திருநாவுக்கரசர். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், மத்தியிலும் மாநில அளவிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார்... ஏராளமான அரசியல் அனுபவம்கொண்டவர், தான் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்களையும் அதற்கான காரணங்களையும் பகிர்ந்துகொண்டார்!
தந்தை சுப்பராமனுடன் கிராமத்து வீட்டில் விருந்து!
``இது போன்ற ஒரு பகுதியில் என் தந்தையின் பெயரைத் தவிர்க்க முடியாது. அவர்தான் என் முதல் விருப்பம். புதுக்கோட்டை மாவட்டம், தீயத்தூர் வடகோட்டை எனும் சிறு கிராமம்தான் எங்கள் சொந்த மண். என் தந்தை சுப்பராமன் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தவர். நண்டு, இறால், மீன், தலைக்கறி ஆகிய அசைவ உணவுகளை எப்படிப் பக்குவமாகச் சாப்பிட வேண்டும் என்று அவர்தான் சிறு வயதில் எனக்குக் கற்றுக்கொடுத்தார். நான் சென்னைக்கு வந்த பிறகு என் தந்தையுடன் சாப்பிடும் வாய்ப்பு பெரும் பாலும் எனக்கு அமைந்ததில்லை. தந்தையின் மறைவுக்குப் பிறகு கடந்தகால நாள்களை நான் அதிகம் மிஸ் செய்கிறேன். அதனால், எங்களுடைய கிராமத்து வீட்டில் அவருக்குப் பிடித்தமான உணவுகளைச் சமைத்து, பேரன் பேத்திகளுடன் அவரைச் சாப்பிடச் சொல்லிப் பார்க்க வேண்டும்!’’
புரட்சித்தலைவருக்கு பரிமாறி ரசிக்க வேண்டும்!
``என் அடுத்த சாய்ஸ், எனக்கு அரசியலில் அடையாளம் பெற்றுத்தந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான். சுற்றுப்பயணம் செல்லும்போதும், அமைச்சரவைக் கூட்டங்களின்போதும் அவருடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன். சொல்லப்போனால், 1980-84-களில் காலை உணவு ராமாவரம் தோட்டத்தில் அவருடன்தான் சாப்பிடுவேன். காலையிலேயே இட்லிக்குச் சூடான மீன் குழம்பு இருக்கும். மதியத்துக்கு கருவாட்டுக் குழம்பு, முட்டைக் குழம்பு, மீன் குழம்பு, உள்ளான் என விதவிதமான உணவு இருக்கும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை அவர் சாப்பிடுவதைவிட அவரைச் சுற்றிச் சாப்பிடுபவர்களின் இலையைத்தான் கவனித்துக்கொண்டேயிருப்பார். ஏதாவது ஒரு பதார்த்தம் தீர்ந்துவிட்டால், உடனடியாக அதைப் பரிமாறச் சொல்வார். அதனால், என் வீட்டில் அவருக்குப் பிடித்தமான அசைவ உணவுகளைச் சமைத்துப் பரிமாறுவேன்... பிறர் சாப்பிடுவதை அவர் எப்படிப் பார்த்து ரசிப்பாரோ, அதேபோல அவர் சாப்பிடுவதைப் பார்த்து ரசிக்க வேண்டும்!’’
கலைஞருக்கு மீன் விருந்து!
``அடுத்ததாக நான் மிகவும் மதிக்கின்ற தலைவர் கலைஞர். அவர் குறைவாகத்தான் சாப்பிடுவார். ஆனால், நிறைய பேசுவார்... கேட்கக் கேட்க ஆசையாக இருக்கும். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு நான் தனியாகக் கட்சி நடத்தியபோது அவருடன் பலமுறை சாப்பிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் முதலமைச்சராக இருந்தபோது, நான் எம்.பி-யாக அவருடன் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவருக்கு மீன் குழம்பு மிகவும் பிடித்தமான உணவு. எம்.ஜி.ஆராகட்டும்... கலைஞராகட்டும்... அவர்களுக்கு வரும் உணவை நம்மோடு பகிர்ந்து சாப்பிட்டிருக்கிறார்கள். அதனால், அவர்களுக்குப் பிடித்த உணவை நாம் சமைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்கிற ஏக்கம் இருக்கிறது. அப்படிச் சாப்பிட்டால் அது எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். கலைஞருக்கும் என் வீட்டிலேயே அவருக்குப் பிடித்தமான மீன் விருந்து கொடுக்க ஆசை.’’

ராகுல் காந்தியுடன் மறக்க முடியாத நாள்!
``நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தபோது, ஒருமுறை ராகுல் காந்தி இங்கு வந்திருந்தார். அப்போது சிக்கன், இறால், மீன் ஆகிய உணவுகளை என் வீட்டில் சமைத்து, சத்தியமூர்த்தி பவனில் அவருக்கு விருந்து கொடுத்தேன். மிகவும் ரசித்துச் சாப்பிட்டவர், ‘என் தங்கை பிரியங்காவுக்கு இந்த உணவுகள் மிகவும் பிடிக்கும்; பார்சல் பண்ண முடியுமா?’ என்று கேட்டார். உடனடியாக தயார் செய்து கொடுத்தோம்... விமானத்தில் அதை எடுத்துச் சென்றார். உலகின் பல நாடுகளுக்குச் சென்றவர்... விதவிதமான உணவுகளைச் சாப்பிட்டிருப்பார். அவர் என்னிடம் கேட்டு எடுத்துச் சென்ற அந்த நாளை மறக்க முடியாது. அதனால், அவரை என் வீட்டுக்கு வரவேற்று, அவர் விரும்பும் உணவுகளைச் சமைத்து சாப்பிடவைக்க வேண்டும். அவரிடம், ‘உடனடியாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். அடுத்த பொதுத்தேர்தலுக்குள் இந்தியா முழுவதும் பயணித்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக்கொள்வேன்!
நண்பர் ரஜினியுடன் அரசியல் விருந்து!
``ரஜினிகாந்த் என் நீண்டகால நண்பர். ஒருநாள் மதியம் அவரது தோட்டத்துக்கு வரச் சொன்னார். நானும் என் மகனும் சென்றோம். அருமையான மீன் குழம்புடன் விருந்து கொடுத்தார். அதற்குப் பிறகும் நான் பலமுறை அவரது வீட்டுக்குப் போயிருக்கிறேன். அவரும் என் வீட்டுக்குப் பலமுறை வந்திருக்கிறார். ஆனால், என் வீட்டில் அவர் சாப்பிட்டதில்லை. அதனால், அவருக்கு ஒரு டின்னர் கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. நானும் அவரும் எப்போது சந்தித்தாலும் அரசியல்தான் பேசுவோம். அரசியலுக்கு அவர் வராவிட்டாலும்கூட, தமிழக அரசியல் குறித்தும் இந்திய அரசியல் குறித்தும் தெளிவான பார்வை வைத்திருக்கிறார். நான் அவருக்கு அளிக்கும் விருந்திலும் அரசியல்தான் பேசுவோம். ஆனால், எப்போதும்போல என்ன பேசினோம் என்பதை அவரும் வெளியில் சொல்ல மாட்டார்; நானும் சொல்ல மாட்டேன்!’’