Published:Updated:

கலகல கட்சி ஆபீஸ்கள்!

தி.மு.க அலுவலகம்
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க அலுவலகம்

அரசியல்

கலகல கட்சி ஆபீஸ்கள்!

அரசியல்

Published:Updated:
தி.மு.க அலுவலகம்
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க அலுவலகம்
கலகல கட்சி ஆபீஸ்கள்!
பத்துப் பேரை மட்டும் உறுப்பினர்களாகக் கொண்ட சிறிய இயக்கமோ, லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட பெரிய கட்சியோ தங்களின் கொள்கை சார்ந்து விவாதிக்க, முடிவுகளை எடுக்க, தொண்டர்களைச் சந்திக்க, மக்களைச் சந்திக்க ஓர் அலுவலகம் அவசியமாக இருக்கிறது. இன்று மிகப்பெரிய கட்டடங்களாக உயர்ந்து நிற்கும் ஒவ்வொரு கட்சி அலுவலகத்துக்குப் பின்னாலும் ஒரு சுவாரசிய வரலாறு இருக்கிறது. அதை அறிந்துகொள்வதற்குத் தமிழகத்தின் பிரதான கட்சிகளின் அலுவலகங்களுக்கு ஒரு விசிட் அடித்தோம்.
கலகல கட்சி ஆபீஸ்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

சென்னை, தி.நகர், வைத்தியராமன் தெரு, எண்: 27-ல், செஞ்சட்டைத் தோழர்களின் உழைப்பில் உயர்ந்து நிற்கிறது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம். வெளியில், மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு அலுவலகத் திறப்புவிழாவில் கலந்துகொண்டதற்கான கல்வெட்டு, காலத்தின் சாட்சியாக வரவேற்க... உள்ளே சென்றோம்.

மூன்று தளங்களைக்கொண்ட இந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் என கம்யூனிசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களும் கம்யூனிசப் போராட்ட நூல்களும் விற்பனைக்கும் படிப்பதற்கும் வைக்கப்பட்டுள்ளன.

‘`திருவல்லிக்கேணி தேரடி வீதியில ஒரு வாடகைக் கட்டடத்துலதான் கட்சி ஆபீஸ் முதல்ல இருந்தது. 1991-ம் வருஷம்தான் மக்கள்கிட்ட நிதிதிரட்டி இந்த இடத்தை வாங்கி, சின்னதா ஆபீஸ் வெச்சிருந்தோம். திறப்பு விழாவுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்திருந்தாரு. 2011-லதான் மூன்று தளங்களாக விரிவாக்கம் செஞ்சோம்’’ என்றார், அலுவலகச் செயலாளர் வே.ராஜசேகரன்.

முதல் தளத்தில் நிர்வாக அலுவலகம் இயங்கிவருகிறது. கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்குத் தனித்தனி கேபின்கள் இருக்கின்றன.

நம்மை இரண்டாவது தளத்துக்கு அழைத்துச் சென்ற ராஜசேகரன், ``முக்கியப் பொறுப்புல இருக்கிற தலைவர்கள் பத்துப்பேர் தினமும் அலுவலகம் வந்திடுவாங்க. தவிர, அலுவலக ஊழியர்கள் 20 பேர் இருக்காங்க. 365 நாளும் அலுவலகம் செயல்படும். தினமும் தமிழ்நாட்டுல பல பகுதிகள்ல இருந்தும் தோழர்கள் வருவாங்க. அவங்களோட குறைகளை, கோரிக்கைகளைத் தலைமைக்குழு உறுப்பினர்களிடம் முறையிடுவாங்க’’ என்று அலுவலக அன்றாடங்களை விவரித்தார்.

அங்கு மையக்குழுக் கூட்டம் நடப்பதற்கான சிறிய மீட்டிங் ஹாலும், மாநிலக்குழுக் கூட்டம் நடக்கும் பெரிய ஹால் ஒன்றும் இருக்கிறது. மூன்றாவது தளத்தில், தலைவர்கள் வந்தால் தங்கிக்கொள்வதற்காக இரண்டு அறைகளும் இருக்கின்றன. ‘`மாணிக் சர்க்கார், பிரகாஷ் காரத் என யார் வந்தாலும் இந்த அறையில்தான் தங்குவாங்க. எந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கும் போகமாட்டாங்க’’ எனப் பெருமிதத்தோடு சொன்னார்கள் அங்கிருந்த தோழர்கள்.

கலகல கட்சி ஆபீஸ்கள்!

பாரதிய ஜனதா கட்சி

அதே வைத்தியராமன் தெருவில், அருகேயே, பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட இரண்டு கட்சிகளின் தலைமை அலுவலகங்களை அருகருகே காண்பதே சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கிறது.

வெளியில், கட்சிக் கொடி பறக்க, அதனருகே பா.ஜ.க-வின் வழிகாட்டிகளில் முக்கியமானவரான தீனதயாள் உபாத்யாயாவின் உருவம் சுவரில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அலுவலகத்தின் உள்ளே பாரதமாதா சிலையும் தமிழ்த்தாய் சிலையும் நிறுவப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

``1985-2000 வரைக்கும் கோடம்பாக்கம் சூளையில்தான் கட்சி அலுவலகம் இயங்கி வந்தது. 2000-ம் ஆண்டுல கட்சித் தலைவராக இருந்த இல.கணேசன் மற்றும் மூத்த தலைவர் ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோரின் பெருமுயற்சியால் இந்த இடம் வாங்கப்பட்டது’’ என வரலாற்றை விவரிக்கிறார், அலுவலகச் செயலாளர் சந்திரன்.

சிலைகளைக் கடந்துசென்றால், எதிரிலேயே மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கேபின் இருக்கிறது. அலுவலகத்தின் பக்கவாட்டுப் பகுதியில், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், அணிகளின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனித்தனி கேபின்கள் இருக்கின்றன. வரவேற்பரையில், பா.ஜ.க தலைவர்களின் படங்கள் வரிசையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

“இங்க இருபது பேர் வேலை செய்றாங்க. இரண்டாவது தளத்துல கட்சியோட அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகத்தின் கேபின் இருக்கு. அலுவலக நிர்வாகச் செயல்பாடுகள் அங்கதான் நடக்கும். மூணாவது தளத்துல வி.ஐ.பி-க்கள் தங்குவதற்கான ஒரு அறையும் மீட்டிங் ஹாலும் இருக்கு’’ என்ற சந்திரன், மீட்டிங் ஹாலுக்கு நம்மை அழைத்துச் சென்றார். கிட்டத்தட்ட, 500 பேர் அமரும் வகையில் இருக்கை வசதி செய்யப்பட்டிருக்கிறது. ‘ரங்கராஜன் அரங்கம்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட அந்த ஹால் அனைத்து வசதிகளுடன் சிறப்பாக இருந்தது.

எப்போதும் காவித்துண்டுடன் தொண்டர்கள் வருவதும் போவதுமாக, பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது கமலாலயம்.

கலகல கட்சி ஆபீஸ்கள்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

அதற்கு அடுத்த தெருவிலேயே இயங்கிவருகிறது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லம்.’ ஏழடுக்குத் தளங்களுடன், பிரமாண்டமாக இருக்கிறது. ஆறாவது தளத்தில் கட்சி அலுவலகம் இயங்குகிறது.

``பிராட்வேயில ஒரு வாடகைக் கட்டடத்துலதான் பல வருஷம் ஜனசக்தி அச்சகம் ஒருபக்கமும் கட்சியின் அலுவலகம் ஒருபக்கமும் செயல்பட்டு வந்துச்சு. 1970-களில் கட்சிமீது மிகுந்த பற்றுகொண்ட நாட்டியக் கலைஞர் உதயசங்கரும் அவர் மனைவியும்தான் இந்த நிலத்தைக் குறைவான விலைக்குக் கொடுத்தாங்க. ஒரேயொரு கட்டடத்துல அலுவலகம் மட்டும் இயங்கிவந்துச்சு. 1973-ல் விமான விபத்தில் இறந்த கட்சியின் தலைவர் பாலதண்டாயுதம் நினைவாக, அலுவலகத்துக்கு பாலன் இல்லம் எனப் பெயர் வச்சோம்’’ என அலுவலக வரலாற்றை விளக்கினார் செயற்குழு உறுப்பினர் பெரியசாமி.

மற்ற கட்சி அலுவலகங்களைப் போலவே இங்கும் கட்சியின் முக்கியத் தலைவர்களுக்குத் தனி கேபின் இருக்கிறது. செயற்குழு உறுப்பினர்கள் விவாதிக்க சிறிய கான்பிரன்ஸ் ஹாலும், மாநிலக்குழு, நிர்வாகக்குழு கூட்டம் நடத்த மிகப்பெரிய மீட்டிங் ஹாலும் இருக்கிறது. 3,000 புத்தகங்களைக் கொண்ட நூலக வேலைகள் நடைபெற்று வருகின்றன.

‘`2005-ல் தோழர் தா.பாண்டியன் மாநிலச் செயலாளரானார். அதுக்குப் பிறகு, 2009-ல் தற்போதிருக்கும் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு 2016 ஜனவரியில் திறப்புவிழா நடத்தினோம். மற்ற தளங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்த வச்சு வங்கியில வாங்கிய கடனை அடைச்சுட்டு வர்றோம். மாசத்துக்கு, 10-11 லட்சம் வருமானம் வருது'' என்ற பெரியசாமி தொடர்ந்து, ‘`பத்துப் பேர் அலுவலகத்துல வேலை செய்றாங்க. தேர்தல் நேரங்கள்ல தோழர்களோட வருகை அதிகமா இருக்கும். மற்ற நாள்களில் 100-150 பேர் தினம் வருவாங்க’’ என்றார்.

கலகல கட்சி ஆபீஸ்கள்!

காங்கிரஸ்

வெளியிலேயே, 150 அடி உயர காங்கிரஸ் கொடி பறந்துகொண்டிருக்கிறது, ஜி.பி ரோட்டில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில். வெளியில் அமரர் சத்தியமூர்த்தியின் உருவப்படத்துடன் திறப்புவிழாக் கல்வெட்டும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வைக்கப்பட்ட காந்தியின் கைராட்டையும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவுத் தலைவர் கோபண்ணா நம்மை வரவேற்று, நூற்றாண்டுக்கால வரலாற்றைச் சுமந்துகொண்டிருக்கும் சத்தியமூர்த்தி பவன் வரலாற்றைப் பகிர்ந்துகொண்டார்.

‘`1922-ல நீதிமன்ற ஏலத்துல வந்த இந்த 19 கிரவுண்ட் இடத்தை எஸ்.சீனிவாச ஐயங்கார், முத்துலிங்க முதலியார் இரண்டு பேரும் 19,589 ரூபாய்க்கு வாங்கினாங்க. இங்க இருந்த பழைய கட்டடம் 1936-ல எரிஞ்சுபோயிடுச்சு. தொடர்ந்து, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்துல பொருள்காட்சி நடத்துனது மூலமா கிடைச்ச பணத்துல, 5.5 லட்சம் செலவு செஞ்சு இந்தக் கட்டடத்தைக் கட்டி முடிச்சாரு காமராஜர். தன்னோட குருநாதர், சத்தியமூர்த்தி பேரைச் சூட்டி, 21.1.1963-ல திறந்து வச்சார். அதுக்குப் பிறகு கொஞ்சம் நவீனப்படுத்திருக்கிறோம்.’’

தமிழக காங்கிரஸ் தலைவர், செயல்தலைவர்கள், துணைத்தலைவர்கள், செயலாளர்கள், அணித் தலைவர்கள் என அனைவருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 15 பேர் அலுவலக ஊழியர்களாகப் பணியாற்றிவருகின்றனர். தரைத்தளத்தின் பின்புறம், 250 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம் ஒன்று இருக்கிறது. நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இரண்டாவது தளத்தில், கான்ஃபிரன்ஸ் ரூம், தேர்தல் நேரத்துச் செயல்பாடுகளுக்காக ஒரு ‘வார் ரூம்’ ஆகியவை இருக்கின்றன. ஐ.டி ரூம் தனியாக இயங்கிவருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்த அனைவரின் புகைப்படங்களும் வரவேற்பறையிலேயே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் கட்சியை விட்டு விலகிய, ஜி.கே.வாசன், ஞானதேசிகன் ஆகியோர் படங்களும் இருந்தது ஆச்சர்யம்தான்.

கலகல கட்சி ஆபீஸ்கள்!

அ.தி.மு.க

அ.தி.மு.க தலைமை அலுவலகம், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ளது. தனிப்பெயர் எதுவும் இல்லாத அலுவலகம். அ.தி.மு.க-வின் நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலைகள் நம்மை வரவேற்கின்றன. வெளியூர்களிலிருந்து வரும் தொண்டர்கள் இந்த இருவரின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து, வணங்கத் தவறுவதே இல்லை.

‘`தலைவர் தனியா கட்சி ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே ஒரு வீட்டோட இந்த இடத்தை ராகவாச்சாரிகிட்ட வாங்கிட்டாரு. அது சத்யா திருமண மண்டபமா இருந்தது. இந்த இடம் அலுவலகமா மாற்றப்பட்டது 1980-கள்லதான். சின்ன பில்டிங்கா இருந்தத, 1996-க்குப் பின்னாடி அம்மாதான் இவ்ளோ பெரிசா கட்டினாங்க’’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த இடத்தின் வரலாற்றை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

மூன்று தளங்களைக் கொண்ட கட்டடத்தில், தரைத்தளத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர்களுக்கு ஒரு அறை, துணை ஒருங்கிணைப்பாளர்கள் இருவருக்கு ஒரு அறை, அவைத்தலைவருக்கு ஒரு அறை இருக்கிறது. அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான `நமது அம்மா'வுக்காக ஒரு அறை, கட்சியின் நிர்வாகிகள் அமர்வதற்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

முதல் தளத்தில், அலுவலக நிர்வாக அறையும், கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவதற்கான 300 பேர் அமரும் வசதியுள்ள மீட்டிங் ஹாலும் இருக்கிறது. அங்கேயே, கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்காக ஓர் அறை கட்டப்பட்டிருக்கிறது. அதைத்தான் தற்போது, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி வருகின்றனர். ஒரே டேபிளில் இரண்டு நாற்காலியுடன் காட்சியளிக்கிறது அந்த அறை. அதேபோல, மெயின் பில்டிங்குக்கு வலதுபுறம், அலுவலக நிர்வாகியின் அறை இருக்கிறது. அதற்கு மேலே, இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட 13 அணிகளுக்குத் தனித்தனி அறைகள் இருக்கின்றன.

‘`ஊழியர்கள் பத்துப் பேர் இருக்கோம். முக்கியமான கூட்டங்கள் நடக்கும்போது எக்கச்சக்கமா நிர்வாகிகள், தொண்டர்கள் வருவாங்க. மற்ற நாள்கள்ல 100, 150 பேர் வருவாங்க’’ என்கிறார்கள் ஊழியர்கள்.

கலகல கட்சி ஆபீஸ்கள்!

தி.மு.க

தேனாம்பேட்டை அண்ணா சாலையில், இலக்கம் 369-ல் அமைந்திருக்கிறது அண்ணா அறிவாலயம். 114 அடி உயரக் கொடிக் கம்பத்தில் தி.மு.க கொடி காற்றில் அசைந்து கொண்டிருக்க, முகப்பில் அண்ணா, கலைஞரின் சிலைகள் நிற்கின்றன.

“அண்ணா காலத்துல இராயபுரத்துல இருக்கற அறிவகம்தான் தலைமைக் கழகமாக இருந்துச்சு. இப்போ இளைஞர் அணி அலுவலகமா இருக்குற அன்பகம், 1964-ல கட்டப்பட்டுத் தலைமைக் கழகமானது.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்துல சட்டமன்றத்துல எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கான அறைகள் குறைக்கப்படவும் தலைவர் உடனேயே அறிவாலயத்தைக் கட்ட முடிவு செஞ்சாரு. 1987 செப்டம்பர் 16-ம் தேதி, தலைமைக் கழகம் செயல்பட ஆரம்பிச்சது. திறப்பு விழாவில் அண்ணாவின் மனைவி ராணி அம்மையார் பங்கேற்றார்'' என விவரிக்கிறார், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டைன்டைன் ரவீந்திரன்.

அறிவாலயத்தில் உள்ள ‘பேராசிரியர் ஆய்வு நூலக’த்தில், ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன், ஆய்வு நூல்களும் இருக்கின்றன. அதேபோல, தி.மு.க தொடங்கப்பட்ட நாள்முதல் இன்று வரையிலான நிகழ்வுகளின் வரலாற்றுச் சுவடுகள் ‘கலைஞர் கரூவூலம்’ என்கிற பெயரில் பாதுகாக்கப்பட்டுவருகிறது. இதுதவிர, ‘வெற்றிச்செல்வி இலவச கண் மருத்துவமனை’ செயல்பட்டுவருகிறது.

தலைவர், செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், முதன்மைச் செயலாளர், அமைப்புச் செயலாளர், தலைமைக் கழக நிர்வாகிகள் என அனைவருக்கும் இங்கு தனித்தனி அறைகள் இருக்கின்றன. தவிர, கட்சியின் ஐ.டி விங்குக்கும் ஊடகப்பிரிவுக்கும் தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் தளத்தில், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி அலுவலகமும் மூன்றாம் தளத்தில் கலைஞர் தொலைக்காட்சியின் அலுவலகமும் இயங்குகிறது. கட்சி அலுவலகத்தில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆளுங்கட்சி என்பதால், மற்ற அனைத்துக் கட்சி அலுவலகங்களை விடவும் பரபரப்பாகக் காட்சி தருகிறது அறிவாலயம்.