Published:Updated:

அ.தி.மு.க அவைத்தலைவர் மாற்றம்? - எடப்பாடியின் மூவ்... செக் வைக்கும் பன்னீர்!

தி.மு.க-வில் பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் இறக்கும்வரை, அவருடைய பதவி வேறு யாருக்கும் கூடுதல் பொறுப்பாகக்கூடக் கொடுக்கப்படவில்லை. இதைக் காரணம் காட்டி, பன்னீர்செல்வம் முட்டுக்கட்டை போடுகிறார் என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அ.தி.மு.க அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரைக் காணச் சென்ற எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருக்கும் நேரத்திலேயே சசிகலாவும் சென்றது பரபரப்பானது அனைவரும் அறிந்ததே. இந்தநிலையில், தொடர்ந்து ஆக்டிவாகச் செயல்பட முடியாமல் இருக்கும் மதுசூதனனுக்கு பதிலாக வேறு ஒருவரை அவைத்தலைவராக நியமிக்கலாம் என்ற பேச்சு அ.தி.மு.க-வில் எழுந்துவிட்டது. இதற்கான பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம்.

சசிகலா
சசிகலா

``அவைத்தலைவரை மாற்ற வேண்டிய கட்டாயமெல்லாம் இப்போது எழவேயில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும், நன்றாக இருந்தாலும் அவைத்தலைவருக்கான பணிகள் அவ்வளவாக இல்லை. நிர்வாகிகள் கூட்டம், ஆட்சிமன்றக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவை ஜெயலலிதா இருந்த காலத்தில் அவைத்தலைவர் தலைமையில்தான் நடக்கும். ஆனால், இப்போதோ அப்படியில்லை. ஒருங்கிணைப்பாளர் இல்லாமலேயே கூட்டம் நடக்கிறது. பொதுக்குழு மற்றும் செயற்குழுவுக்குத்தான் அவைத்தலைவர் வருவது கட்டாயம்.

எனினும், அவைத்தலைவரை மாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஏனெனில், ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருடன் சென்றார் மதுசூதனன். தற்போதும் பன்னீரின் அரவணைப்பிலேயே இருக்கிறார். பன்னீரே சசிகலா ஆதரவு மனநிலையில் இருக்கிறாரோ என்ற அச்சம் எடப்பாடிக்கு உண்டு. அப்படியிருக்கும்பட்சத்தில் பன்னீர்செல்வம் எந்த முடிவெடுத்தாலும், அதற்கு மதுசூதனனும் கண்டிப்பாகக் கட்டுப்படுவார். அவைத்தலைவர் கருத்துகளை கட்சித் தலைமை மதிக்க வேண்டுமென்பது மரபு. அதனால் என்றிருந்தாலும் மதுசூதனனால் ஆபத்து என்பதால்தான், தற்போதே அவைத்தலைவரை மாற்றியாக வேண்டும்; அதிலும் தனக்குத் தோதானவர்களை நியமிக்க வேண்டுமென்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.

ஆனால், இதற்கு பன்னீர் இசைந்துகொடுக்கவில்லையாம். ஏனென்றால், தி.மு.க-வில் பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் இதேபோன்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது, பொதுச்செயலாளர் பதவியை வேறொருவருக்குக் கொடுக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், க.அன்பழகனின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், இறுதிவரை அவரே பொதுச்செயலாளராகத் தொடருவார்; தேர்தல் சமயத்தில் முடிவெடுக்க வேண்டிய சூழலில், அவரது அதிகாரம் மட்டும் தற்காலிகமாகத் தலைவருக்கு மாற்றப்படும் என கட்சி விதிகளில் திருத்தம் செய்து, அதிகாரத்தை எடுத்துக்கொண்டார் ஸ்டாலின். பின்னர் க.அன்பழகன் மறைந்து, துரைமுருகன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் அதிகாரங்கள் மீண்டும் பொதுச்செயலாளர் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதே ஃபார்முலாவில் வேண்டுமானால் நாமும் செல்லலாம் என்கிறார் பன்னீர்செல்வம். மதுசூதனன் மறைந்த பின்னர் வேறொருவரை நியமித்துக்கொள்ளலாம், அதுவரை அவரே தொடரட்டும் என்பதுதான் பன்னீரின் கருத்து” என்றார்.

பன்னீர், எடப்பாடி
பன்னீர், எடப்பாடி

சரி அவைத்தலைவர் பதவியை விரும்பும் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று நாம் கேட்க, மீண்டும் பேசத் தொடங்கினார். ``பொன்னையன், பா.வளர்மதி, செங்கோட்டையன், தனபால், ஜே.சி.டி.பிரபாகர், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பெயர்களைச் சொல்கிறார்கள். இவர்களில் பொன்னையனுக்கும் வயதாகிவிட்டதால் சாத்தியப்படாது. வளர்மதி ஆக்ரோஷமாகச் செயல்படுபவர். மேலும், பெண்களை இதுவரை அவைத்தலைவர் பதவிக்கு நியமித்ததில்லை என்பதால் அவருக்கும் வாய்ப்பு குறைவுதான். செங்கோட்டையனை நியமிக்கலாம், ஆனால், ஏற்கெனவே கட்சியில் கவுண்டர் ஆதிக்கம் என்ற பேச்சு இருப்பதால் அதற்கும் வாய்ப்பில்லை என்கிறார்கள்.

``இன்டர்னல் பாலிடிக்ஸ் என சொல்லிவிட்டார் எடப்பாடி!'' - தோப்பு வெங்கடாசலம் ஓப்பன் டாக்

வன்னியர் இட ஒதுக்கீடு கொடுத்ததால் அந்தச் சமூகம்தான் அதிக அளவில் அதிமுகவுக்கு வாக்களித்தது. அதனால் கே.பி.அன்பழகனுக்கு வாய்ப்புள்ளது. அதேசமயம், வன்னியர் இட ஒதுக்கீட்டால் எஸ்.சி வாக்குகள் கிடைக்கவில்லை. அதைச் சரிக்கட்ட முன்னாள் சபாநாயகரும், அருந்ததியர் சமூகத்தவருமான தனபாலுக்குக் கிடைக்கலாம். சிறுபான்மை + வன்னியர் கேட்டகரியில் ஜே.சி.டி.பிரபாகர் வருவதால் அவருக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், இவர் பன்னீரின் ஆதரவாளர் என்பதால் எடப்பாடி தரப்பு விரும்பாது. இவர்கள் தவிர ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி பெயர்களும் அடிபடுகின்றன. இந்த விவகாரத்திலும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இடையே முட்டல் மோதல் நடக்கிறது!” என்பதோடு முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு