Published:Updated:

காங்கிரஸ் சட்டமன்றத் தலைவரைத் தேர்வு செய்ய நடந்த வாக்கெடுப்பு - முந்தியது யார்?

சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்
சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்

தமிழக சட்டமன்றத்தின் காங்கிரஸ் குழுத் தலைவர் யார் என்பதில் இன்னமும் சிக்கல் நீடித்துக்கொண்டிருக்கையில், வாக்கெடுப்பு நடத்திவிட்டு டெல்லி பறந்துள்ளனர் மேலிடப் பார்வையாளர்கள்!

பல வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ-க்களைப் பெற்றுள்ளது. எனினும் எப்போதும்போலவே கோஷ்டிப் பூசலால் சட்டமன்றக்குழுத் தலைவரைக்கூடத் தேர்வு செய்ய முடியாமல் திணறிவருகிறது. இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரிடம் பேசியபோது, ``மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, ப.சிதம்பரம் என ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு கோஷ்டி இருப்பது தெரிந்ததே. அது போதாதென்று ஜெயித்திருக்கும் எம்.எம்.ஏ-க்களில் சிலரும் தங்களுக்கென தனி கோஷ்டியைக் கட்டமைத்துவருகிறார்கள்.

அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க என அத்தனைக் கட்சிகளிலும் சட்டமன்றக்குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவிகள் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுவிட்டன. காங்கிரஸ் கட்சியில் மட்டுமே இழுபறி நீடிக்கிறது. முதன்முறை நடைபெற்ற எம்.எம்.ஏ-க்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்படாததால், கடந்த மே 17-ம் தேதி மீண்டும் கூட்டம் கூட்டப்பட்டது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, புதுச்சேரி எம்.பி வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விவாதித்து உள்ளுக்குள்ளேயே வாக்கெடுப்பும் நடத்தினார்கள். அதைவைத்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவிடம் போனில் பேசி முடிவை அறிவித்துவிடலாம் என முடிவெடுத்து, பிற்பகல் 3:30 மணிக்கு பிரஸ்மீட் என்றெல்லாம் அறிவித்தனர். ஆனால், சோனியா காந்தி போனில் கிடைக்கவில்லை. அவர் சார்பில் பேசியவர்கள், `எம்.எல்.ஏ-க்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு விவரத்தையும், அனைவர் குறித்த பயோடேட்டாவையும் அறிக்கையாக அனுப்புங்கள். கேரளாவிலிருந்தும் ரிப்போர்ட் வர வேண்டியிருக்கிறது. இரண்டையும் மேடம் சேர்த்துப் பார்த்து அறிவிப்பு வெளியிடுவார்' என்று சொல்லிவிட்டனர். அதனால், பிரஸ் மீட்டைக் கேன்சல் செய்துவிட்டு பார்வையாளர்கள் டெல்லிக்குப் பறந்தனர்" என்றார்.

விஜயதரணி
விஜயதரணி

சரி வாக்கெடுப்பில் யாருக்கு அதிக ஓட்டு விழுந்தது? என்று நாம் கேட்க, தொடர்ந்து பேசினார் அந்த மூத்த தலைவர். ``எம்.எல்.ஏ-க்களில் சோளிங்கர் முனிரத்னம் நான்காவது முறை எம்.எல்.ஏ-வாகி சீனியர் அளவில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக விளவங்கோடு விஜயதரணி, குளச்சல் பிரின்ஸ் ஆகிய இருவரும் தொடர்ச்சியாக மூன்றாவது முறை எம்.எல்.ஏ-வாக ஆகியிருக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் செல்வப் பெருந்தகை, கிள்ளியூர் ராஜேஷ் ஆகியோர் இரண்டாவது முறை எம்.எல்.ஏ-க்கள். ஓட்டெடுப்பில் புதியவர்களான முதன்முறை எம்.எல்.ஏ-க்கள் 11 பேரில் எட்டுப் பேருடைய வாக்குகளைச் சேர்த்து மொத்தம் ஒன்பது வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருக்கிறார் விஜயதரணி. அவருக்கு அடுத்தபடியாக மூன்று எம்.எல்.ஏ-க்களின் வாக்கைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார் முனிரத்னம். செல்வப்பெருந்தகையும், ராஜேஷும் தலா இரண்டு வாக்குகளையும், பிரின்ஸ் மற்றும் ராஜ்குமார் இருவரும் தலா ஒரு ஓட்டு (தங்களது சொந்த ஓட்டுதான்) பெற்றுள்ளனர். ஒன்பது ஓட்டு மட்டுமன்றி, நான்கு எம்.எல்.ஏ-க்களின் இரண்டாவது சாய்ஸாகவும் விஜயதரணி இடம்பிடித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

இவர்களில், முனிரத்னம் த.மா.கா., தி.மு.க என கட்சிகள் மாறி வந்திருக்கிறார். செல்வப்பெருந்தகை வி.சி.க-விலிருந்து வந்திருக்கிறார். கட்சியுடைய லாயலிட்டி என்று பார்க்கிறபோது இவர்கள் இருவர் பெயரும் அடிபட்டுவிடும். இதுவரை காங்கிரஸில் பெண் ஒருவர் சட்டமன்றக் கட்சித் தலைவராக இருந்ததில்லை. விஜயதரணியை நியமித்தால் புதிய வரலாறு படைக்கலாம் என்பது கட்சியினரின் கருத்து. எனினும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டப்பேரவையில் கால் பதித்துள்ள பா.ஜ.க-வைச் சமாளிக்கும் அளவுக்கு யாருக்குத் திறமை உள்ளது என்பதையும் டெல்லி கணக்கில் எடுக்கும். கேரள சட்டசபைகுழுத் தலைவர் குறித்த அறிக்கையும் வந்த பிறகு, இறுதி முடிவை சோனியா காந்தி எடுப்பார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு