Published:Updated:

`ஸ்டாலினைச் சுற்றியுள்ள 3 பேர்; பி.ஜே.பி முருகனை சந்தித்தது ஏன்? - விவரிக்கும் வி.பி.துரைசாமி

முருகனுடன் வி.பி.துரைசாமி
News
முருகனுடன் வி.பி.துரைசாமி

என்னைப் பொறுத்தவரையில், வாழ்நாள் பூராவும் கரை வேஷ்டியுடன்தான் இருப்பேன். எம்.எல்.ஏ சீட் ஏதும் கேட்கப்போவதில்லை என்கிற முடிவுடன் இருக்கிறேன்.

தமிழக பி.ஜே.பி-யின் புதிய தலைவராக முருகன் பதவி ஏற்று மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு, திடீரென தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி பி.ஜே.பி தலைவர் முருகனை சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பு பல்வேறு அரசியல் யூகங்களைக் கிளப்பிவிட்டன.

சந்திப்பு தொடர்பாக வி.பி.துரைசாமியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

கட்சியில் தம்மை ஓரங்கட்டுகிறார்கள் என்கிற விரக்தியில் இருந்த நீங்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு ஷாக் கொடுக்கத்தான் முருகனை சந்திக்கப்போனீர்களா, உங்களைத் தூண்டியது யார்?

எனக்கு வயது 68. நான் ராஜ்யசபா எம்.பி, துணை சபாநாயகர், கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் என நிறைய அரசியல் ஞானம் உடையவன். எழுத்துத்திறமை, மேடைப் பேச்சுத்திறன் என நிறைவே உண்டு. என்னை யார் தூண்டிவிட முடியும்? அதெல்லாம் வதந்தி. மு.க.ஸ்டாலின் நல்லவர். அவரைச் சுற்றியிருக்கும் மூணு பேரு தப்புத்தப்பா அவருக்கு சொல்லிக்கொடுக்கிறாங்க. அதையெல்லாம் அவரு கேட்கக்கூடாது என்பதுதான் என் வேண்டுகோள். என்னைப் பொறுத்தவரையில், வாழ்நாள் பூராவும் கரை வேஷ்டியுடன்தான் இருப்பேன். எம்.எல்.ஏ சீட் ஏதும் கேட்கப்போவதில்லை என்கிற முடிவுடன் இருக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க எதிர்க்கும் பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவரை சந்திக்கும் முன், கட்சி தலைமையிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே?

வி.பி.துரைசாமி
வி.பி.துரைசாமி

பி.ஜே.பி-யில் கடந்த 70 வருட காலத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுத்தது இதுதான் முதல்முறை. அந்த வகையில், என் இனத்தார், உறவினர் என்கிற முறையில் முருனுக்கு வாழ்த்துத் தெரிவிக்கத்தான் போனேன். இதைத் திரித்து ஸ்டாலினைச் சுற்றிலும் இருக்கும் சிலர் வேறுமாதிரி சொல்ல, என் மீது ஸ்டாலின் கடுங்கோபத்தில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். என்னுடைய கேள்வி என்னவென்றால், தி.மு.க-வில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் பலரும், அவர்கள் சமுதாயம் சார்ந்த அ.தி.மு.க அமைச்சர்களிடம் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்களா, அதைவிட நான் என்ன தப்பு செய்துவிட்டேன்?

தி.மு.க-வில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் பலரும், அவர்கள் சமுதாயம் சார்ந்த அ.தி.மு.க அமைச்சர்களிடம் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்களா, அதைவிட நான் என்ன தப்பு செய்துவிட்டேன்?
வி.பி.துரைசாமி

பெரிய பதவியை எதிர்பார்த்து பி.ஜே.பி பக்கம் போக நினைக்கிறீர்களா?

முருகனுடன் வி.பி.துரைசாமி
முருகனுடன் வி.பி.துரைசாமி

ஐந்து வருடம் 2 மாதங்கள் ராஜ்யசபா எம்.பி காலம் இருந்த நிலையில், அதை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு தி.மு.க பக்கம் 1996-ல் வந்தவன் நான். மீண்டும் அதே பதவியை கலைஞர் கொடுத்தார். அதைப் பெரிய கௌரவமாகக் கருதித்தான் இத்தனை காலமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நானா பதவிக்கு ஆசைப்பட்டு பி.ஜே.பி பக்கம் போகப்போகிறேன்? கோபாலபுரம் குடும்பத்துக்கு நான் விசுவாசமானவனா, இல்லையா? என்னைப் பற்றி அங்கிருப்பவர்கள் ஒரு நிமிடம் யோசித்துப்பார்த்தால் அனைத்தும் விளங்கும்.

ராஜ்யசபா எம்.பி சீட் கிடைக்காததுதான் உங்கள் அதிருப்திக்குக் காரணாமா?

மாநில, மாவட்ட, அரசியல்ல எப்போதாவது தலையிட்டிருக்கிறேனா? இந்தப் பதவியைக் கொடுங்க... எடுங்கன்னு யாருக்காவது நான் கேட்டிருப்பேனா? என்னை மாதிரி ஒரு சின்சியரான ஆள் கிடைப்பானா? அதெல்லாம் ஒரு காரணமே இல்லை. நான் சிவனேன்னு இருந்தேன். சொந்தக்காரரைப் போய் பார்த்து வாழ்த்துச் சொன்னேன். அவ்வளவுதான். இப்படியெல்லாம் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு கேள்விகளைக் கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்?

உங்கள் மீது கட்சியில் இருந்து நடவடிக்கை எடுத்தால்?

எடுக்கட்டும். பார்க்கலாம். நானா பயப்படுவேன்? நேரு, வேலு, பாரதி... சேர்ந்தா சும்மாவிடுவார்களா.. குடும்ப உறுப்பினர் மூலமாக பிரஸர் கொடுப்பாங்க. எனக்கு நோட்டீஸ் வரலாம். அது வந்தா... சிலருகிட்ட சில கேள்விகள் கேட்க இருக்கிறேன். அதைத் தரக்கூடிய அதிகாரம் யாருக்கு இருக்கிறது?

தி.மு.க முரசொலி நில விவகாரத்தில் தற்போதைய தமிழக பி.ஜே.பி தலைவர் முருகன் பிரச்னை செய்தாரே? அவரை எப்படி நீங்கள் போய் சந்தித்தீர்கள்?

அந்த விவகாரத்துக்கும் நான் சந்தித்ததுக்கும் சம்பந்தமில்லை. அதுபற்றி முழுவதும் எனக்குத் தெரியாது’’ என்றதோடு முடித்துக் கொண்டார்.

இந்தநிலையில், தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அந்தப் பதவியில் அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டிருப்பதாக தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.