Published:Updated:

`விருப்ப ஓய்வுத் திட்டத்தை முன்னெடுக்கும் BSNL, MTNL..!’ - மத்திய அரசின் அடுத்த அதிரடி?

வி.ஆர்.எஸ் எனப்படும், விருப்ப ஓய்வுத் திட்டம் குறித்து, தங்கள் ஊழியர்களிடம் பேசி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வி.ஆர்.எஸ்
வி.ஆர்.எஸ்

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) மற்றும் மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் (எம்.டி.என்.எல்) ஆகிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 'வி.ஆர்.எஸ் எனப்படும், விருப்ப ஓய்வுத் திட்டம் குறித்து, தங்கள் ஊழியர்களிடம் பேசி, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

BSNL
BSNL

கடந்த சில வருடங்களாகவே, இந்த இரு நிறுவனங்களும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி நிலவுகிறது. இதனால் விருப்ப ஓய்வின் மூலம், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அதன்மூலம், சம்பள செலவை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாலானோர், விருப்ப ஓய்வு பெறத் தகுதி உள்ளவர்களாக அரசு கருதுகிறது. அதேபோல, எம்.டி.என்.எல் நிறுவனத்தில் மட்டும் 15,000 முதல் 22,000 ஊழியர்கள் 50 வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களை விருப்ப ஓய்வு பெற வைப்பதன் மூலம், அரசுக்குச் சம்பளச் செலவு மிச்சமாகும். இதற்கான நடைமுறைகளுக்காக 17,160 கோடி ரூபாய் ஒதுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 “பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைப் புனரமைப்பது தனியாருக்குத் தாரைவார்க்கவா?”

ஜனவரி 1, 2020-ம் தேதியில் 50 வயதைக் கடந்தவர்கள் மட்டுமே இந்த வி.ஆர்.எஸ் திட்டத்தை பரிசீலிக்க முடியும். இந்தத் திட்டத்தை பரிசீலிப்பவர்களுக்கு வருகிற டிசம்பர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கக் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வி.ஆர்.எஸ் பெறுபவர்களுக்கு 46 மாத சம்பளத்தை இழப்பீடாக மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

BSNL
BSNL

வி.ஆர்.எஸ் திட்டமானது மத்திய அரசின் முடிவு என்பதால், பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய இரு நிறுவனங்களும், இதை விரைந்து முடிக்கும் எனத் தொலைத்தொடர்பு வட்டாரங்கள் தெரிவித்தன.