Published:Updated:

சாத்தான்குளம்: `அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை’- பரபரப்பைக் கிளப்பியுள்ள போஸ்டர்!

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

``ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு பணக்கார, வெளியூர் வேட்பாளர்கள் வேண்டாம், உள்ளூர் வேட்பாளரே வேண்டும். வெளியூர் வேட்பாளர்களை நிச்சயம் தோற்கடித்தே தீருவோம்” எனக் குறிப்பிட்டு தூத்துக்குடியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், `தமிழக அரசியல்கட்சிகளுக்கு எச்சரிக்கை‘ என்ற பெயரில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டத்தில் சாத்தான்குளம் தனி சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. இந்தத் தொகுதியின் கடைசி எம்.எல்.ஏ-வாக காங்கிரஸைச் சேர்ந்த ராணி வெங்கடேசன் இருந்தார். கடந்த 2007-ம் ஆண்டு, தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதி முழுவதுமாகக் கலைக்கப்பட்டு, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டது.

பரபரப்பைக் கிளப்பியுள்ள போஸ்டர்
பரபரப்பைக் கிளப்பியுள்ள போஸ்டர்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த முறையும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில், `இந்த முறை தி.மு.க-வுக்கே ஒதுக்க வேண்டும்’ என தி.மு.க-வினரும் அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலினிடம் கோரிக்கைவைத்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், கடந்த ஒரு வாரமாக காங்கிரஸ் கட்சியினர், தேர்தல் பிரசார தொடக்கமாக அலுவலகத் திறப்புவிழா மற்றும் கிராமம்தோறும் மத்திய அரசின் வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கத்தையும் நடத்திவருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால், மாநில இளைஞர் காங்கிரஸ் முதன்மைச் செயலாளரான ஊர்வசி அமிர்தராஜுக்கு சீட் கிடைக்கலாம் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். இவர், ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஊர்வசி செல்வராஜின் மகன்.

ஊர்வசி அமிர்தராஜ்
ஊர்வசி அமிர்தராஜ்

இந்தநிலையில்தான், இன்று சாத்தான்குளத்தில் பல பகுதிகளிலும், `அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை’ என தலைப்பிட்டும், `ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு பணக்கார, வெளியூர் வேட்பாளர்கள் வேண்டாம். எங்களோடு இருக்கும் உள்ளூர் வேட்பாளர்களே வேண்டும். வெளியூர் வேட்பாளர்களை நிச்சயம் தோற்கடித்தே தீருவோம். இப்படிக்கு ஸ்ரீவைகுண்டம் வாக்காளர்கள்’ எனக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், போஸ்டர்களில் அச்சகத்தின் பெயர் இடம்பெறவில்லை.

Vikatan

இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் சிலரிடம் பேசினோம், ``ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு என கணிசமான எண்ணிக்கையில் வாக்குகள் உள்ளன. இந்த முறை இந்தத் தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகத் தெரிகிறது. அப்படி ஒதுக்கப்பட்டால், இந்தத் தொகுதியின் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஊர்வசி செல்வராஜின் மகனான அமிர்தராஜை வேட்பாளராக நிறுத்தலாம் என உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்திருக்கிறோம். ரெண்டு வருஷமாவே அவர் இந்தத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறார்.

கையெழுத்து இயக்கத்தில் அமிர்தராஜ்
கையெழுத்து இயக்கத்தில் அமிர்தராஜ்

பல ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்திவருகிறார். பெரும்பாலானோர் அமிர்தராஜுக்கு ஆதரவளிக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் குறிப்பிட்ட சிலர், அவருக்கு எதிராக இருக்கிறார்கள். எம்.எல்.ஏ கனவிலுள்ள சிலரின் தூண்டுதலால், இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கலாம். அதனால்தான், புத்திசாலித்தனமாக அச்சகத்தின் பெயரைக்கூட இடம்பெறாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றனர். இந்த போஸ்டர் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு