Published:Updated:

`ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்பட்டாரா?’ - 'சார்பட்டா பரம்பரை’ படக்குழுவுக்கு அதிமுக நோட்டீஸ்

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை

1971-ம் ஆண்டு மிசா காலங்களில் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டாரே ஒழிய ’மிசா’ பிரிவில் அவர் கைதுசெய்யப்படவில்லை. நீதியரசர் ஷா கமிஷனின் அறிக்கையின்படி ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்படவில்லை என்று பட்டவர்த்தனமாகப் புலப்படுகிறது.

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்து, இயக்கிய `சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பிவருகிறது. ``தி.மு.க சார்பாக அ.தி.மு.க-வுக்கு எதிராகவும், எம்.ஜி.ஆரின் புகழைக் கெடுக்கும் வகையிலும் படம் எடுக்கப்பட்டுள்ளது’’ என ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான ஆர்.எம்.பாபு முருகவேல், `சார்பட்டா பரம்பரை’ இயக்குநர், தயாரிப்பாளர் பா.இரஞ்சித், வெளியிட்ட அமேசான் ஆகியவற்றுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

ஆர்.எம்.பாபு முருகவேல்
ஆர்.எம்.பாபு முருகவேல்

``எதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினீர்கள்?’’ என்று பாபு முருகவேலிடம் பேசினோம். ``படத்தில் வரலாற்று நிகழ்வுகளைத் தவறாக மக்களிடம் பரப்புகிறவிதமாக, உண்மைக்கு மாறான விஷயங்களை, வரலாற்றுச் சம்பவங்களில் இல்லாத ஒரு விஷயத்தை யாரோ ஒரு நபரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக, நடக்காத ஒரு விஷயத்தை, எந்த ஓர் அரசு ஆவணமும் இதுவரை நிரூபிக்காத ஒரு விஷயத்தை, சம்பந்தப்பட்ட நபர்களே இதுவரை நிரூபிக்காத ஒரு விஷயத்தை அந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார். ஒரு வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு, உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களிடம் பரப்புவது சட்டத்துக்குப் புறம்பான விஷயம்.

பா.ரஞ்சித் | Pa.Ranjith
பா.ரஞ்சித் | Pa.Ranjith

அந்தப் படத்தில் ஒரு மணி 45 நிமிடம் 17-வது நொடியில் `முதலமைச்சர் மகன்கூட மிசாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்’ என்று ஒரு வசனம் வருகிறது. இந்த வசனத்தின் அடிப்படையில் அது தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினைத்தான் குறிக்கிறது. ஸ்டாலின் அவர்கள் 1971-ம் ஆண்டு மிசா காலங்களில் கைதுசெய்யப்பட்டாரே ஒழிய `மிசா’ சட்டப்பிரிவில் அவர் கைதுசெய்யப்படவில்லை. எனவே இந்தச் செய்தியில், அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலினை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக உண்மைக்கு மாறான தகவலைச் சொல்லியிருக்கிறார் இரஞ்சித்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒரு தவறான செய்தியைக் கொண்டு சேர்த்திருப்பதாக நான் அறிகிறேன். மேலும் மிசாவைப் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் ஷா கமிஷனின் அறிக்கையின் 575 பக்கங்களில் எந்த ஓர் இடத்திலும் ஸ்டாலினுடைய பெயர் பதிவாகவில்லை. இது சம்பந்தமாக பல விவாதங்களிலேயும், பல அரசியல் தலைவர்களின் கேள்விகளுக்கும் இதுநாள் வரை அதை நிரூபிக்கும்விதமாக அல்லது அதை மறுத்துக் கூறுகின்றவிதமாக முதல்வர் ஸ்டாலினோ, அவரைச் சார்ந்தவர்களோ எந்தவிதமான அறிக்கையையோ, சான்றுகளையாே வெளியிடவில்லை.

அமேசான் ப்ரைம் வீடியோ
அமேசான் ப்ரைம் வீடியோ

எனவே வரலாற்றில் இல்லாத ஒரு விஷயத்தை வெளியிட்டதை, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505-ன் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்து தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக நான் கருதுகிறேன். எனவே, இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்துக்குள்ளாக அந்தச் செய்தி எந்தவித ஆதாரமும் இல்லாமல் திரைப்படத்துக்காக எடுக்கப்பட்டது என்பதை அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் நாளேடுகளில் பிரசுரித்து வெளியிட வேண்டும் அல்லது அந்தத் திரைப்படத்தில் வரக்கூடிய குறிப்பிட்ட அந்த வசனத்தை உடனடியாக நீக்கி மறு வெளியீடு செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். தவறுகின்ற பட்சத்தில் அவர்கள் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பை அவர்களே வழங்கிவிட்டார்கள் என்பதாக எடுத்துக்கொண்டு அதற்கான அனைத்து விளைவுகளையும் அவர்கள் சந்திக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறேன்” என்றார்.

ஒரு விஷயத்தில் ஆடுகளத்தை மிஞ்சிய சார்பட்டா! - வைரல் டெம்ப்ளேட் பின்னணி
அடுத்த கட்டுரைக்கு