உலக மகளிர் தின விழா அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கடந்த 8-ம் தேதி கொண்டாடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகியோர் கேக் வெட்டி அதிமுக பெண் நிர்வாகிகளுடன் மகளிர் தின விழாவை கொண்டாடினர்.

கொண்டாட்டங்கள் முடிந்து கூட்டம் கலைந்ததும் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் அலுவலகம் உள்ளே சென்றனர். அவர்களுடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்ட சிலர் சென்றனர். அவர்கள் அனைவரும் பூட்டிய அறையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்படி என்ன பேசப்பட்டது... அதிமுக சீனியர் ஒருவரிடம் பேசினோம். ``முதலில் பேசத் தொடங்கிய கே.பி.முனுசாமி, ‘இப்படி ஒவ்வொரு மாவட்டமும் தீர்மானம் போட்டால் சரிவராது. இதற்கு ஏதாவது ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திட வேண்டும். தலைமையை மீறி செயல்படுபவர்களை தயவு தாட்சணம் பார்க்காமல் நீக்கினால்தான், மாவட்ட நிர்வாகிகள் நம் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இல்லையெனில் தேனி போல ஒவ்வொரு மாவட்டமும் கிளம்பிவிடும். அவர்கள் சொல்வதுபோல நீக்கப்பட்டவர்களை சேர்க்க வேண்டுமென்றால் முன்பு 3000-த்துக்கும் மேற்பட்டவர்களை நீக்கியிருக்கிறோம். சசிகலா, தினகரனை சேர்ந்தால், அவர்களையெல்லாம் சேர்க்க வேண்டிய சூழல் வரும்’ என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் பேசுகையில், “முன்பு பொதுக்குழுவில் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை வைத்துதானே சசிகலா நீதிமன்றத்தில் கிளைம் செய்கிறார். அதே பொதுக்குழுவை வைத்து அதற்கான முடிவைக்கட்டுவோம். தேர்தல் ஆணைய விதிப்படி எப்படியும் இந்தாண்டு இறுதிக்குள் பொதுக்குழுவைக் கூட்டியாக வேண்டும்.

அதனால், விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி, ’நீக்கப்பட்டவர்களை சேர்க்கலாமா?’ என்ற ஒரு தலைப்பை எடுத்து, அதுகுறித்து அங்கேயே பேசி, நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்டு, அப்போதே அதுபற்றி முடிவுகட்டும் வகையில் தீர்மானத்தையும் நிறைவேற்றிவிடுவோம்” என்று பேசியிருக்கிறார்.
பன்னீரின் கருத்தை ஆமோதிக்கும் வகையில், “கண்டிப்பாக பொதுக்குழுவில் முடிவெடுத்துவிடலாம்ணே..” என்று சிரித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியின் இந்தக் கள்ளச்சிரிப்புக்கு அர்த்தம் இல்லாமல் இல்லை! முன்பிருந்த பொதுக்குழுவை தனது ஆட்சியில் மாற்றியமைத்து, 80 சதவிகிதம் தனது ஆதரவாளர்களை இடம்பெறவைத்துவிட்டார் எடப்பாடி.

பொதுக்குழு கூடினாலும், பன்னீர் நேரடியாக சசிகலா பற்றியோ, நீக்கப்பட்டவர்கள் பற்றியோ பேசமாட்டார். அவர் சார்பில் இதை முன்மொழிவதற்கும் ஆட்கள் இல்லை. யாருக்கும் அப்படியொருத் தீர்மானத்தைக் கொண்டுவர தைரியம் இருக்காது. அதனால், சசிகலா பற்றிய பேச்சே பொதுக்குழுவில் எழுந்திட வாய்ப்பில்லை என்பதே எடப்பாடியின் சிரிப்பின் பின் உள்ள அர்த்தம்” என்றார் விரிவாக