Published:Updated:

``அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட நாங்கள் சீட் கேட்கவில்லை!" - பொன். ராதாகிருஷ்ணன்

``நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க போட்டியிடும் எனக் கூறப்பட்டது தவறான தகவல். எந்தத் தொகுதியிலும் நாங்கள் சீட் கேட்கவில்லை” என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

pon radhakrishnan
pon radhakrishnan

தமிழகத்தில் நடைபெற உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் நாங்குநேரியில் காங்கிரஸும், விக்கிரவாண்டியில் தி.மு.கவும் போட்டியிடுவதாக அக்கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டது. நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடுவதால், அங்கு பா.ஜ.க போட்டியிட உள்ளதாக சமூக வளைதளங்களில் தகவல்கள் பரவின.

pon radha krishnan
pon radha krishnan

இந்த நிலையில், இந்த இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்தது அ.தி.மு.க. `ஒரே நாடு ஒரே மொழி என்று இந்தி மொழியைப் பற்றி அமித் ஷா பேசியுள்ளது சர்ச்சையாகிப் போன நிலையில், நாங்குநேரியில் பா.ஜ.க களமிறங்குவது சரியாக இருக்காது. எதிர்க்கட்சிகளும் பிரசாரத்தில் இதைக் கிளப்ப வாய்ப்பிருக்கிறது' எனச் சொல்லி பா.ஜ.கவை சமாளித்து, நாங்குநேரியில் அ.தி.மு.க வேட்பாளர் அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். தரிசனத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் நாங்குநேரி தொகுதி விவகாரம் குறித்துக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், ``நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிடுவது குறித்து யாரும் கூறவில்லை. இதுபற்றி கட்சியிலும் ஆலோசிக்கவில்லை. பா.ஜ.க போட்டியிடும் எனக் கூறப்பட்டது தவறான தகவல். எந்தத் தொகுதியிலும் போட்டியிட நாங்கள் சீட் கேட்கவில்லை. தற்போதும் அ.தி.மு.க., கூட்டணியில்தான் உள்ளோம்” என்றார். அவர் தொடர்ந்து பேசுகையில், ``பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது சகஜமான ஒன்று. உலகப் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை எட்டியபோதுகூட இந்திய நாட்டின் பொருளாதாரம் நிலையாக இருப்பது மகிழ்ச்சியான ஒன்று.

pon radhakrishnan
pon radhakrishnan

வெளிநாடுகளிலிருந்து இங்கு தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர். இதைப் பொருளாதாரம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கு இந்தியப் பிரதமர் மோடி சென்றது நாட்டின் வளர்ச்சிக்காகத்தான். ஒவ்வொரு துறையும் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒவ்வொரு நொடியும் உழைத்துக் கொண்டிருக்கிறார். உலக நாடுகள் இந்தியாவை வணங்க வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமர் மோடி செயல்பட்டுவருகிறார். எனவே, இதுபற்றி சீதாராம்யெச்சூரி போன்றவர்கள் தவறான கருத்துகளைப் பரப்பக் கூடாது.

நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரளா மற்றும் தமிழக முதல்வர்களின் சந்திப்பு வரவேற்கக் கூடிய ஒன்று. இதற்காக அமைக்கப்படும் குழு முல்லைப் பெரியாறு போன்ற தமிழகத்தின் உரிமைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் தமிழகத்துக்குப் பயன் அளிக்கக் கூடியது. ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் போன்றவர்களுக்கு அது பயன் அளிக்காது. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொரு துறையிலும் கமிஷன் பெற்றவர்கள்தான்.

pon radhakrishnan
pon radhakrishnan

நாட்டில் சுதந்திரம் அடைந்ததும் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்றுதான் காந்தி கூறினார். `வெள்ளையனே வெளியேறு' இயக்கம் நடத்திய காந்தி சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைக் கலைக்கத்தான் சொன்னார். காந்தி அனைவருக்கும் பொதுவானவர்தான். எனவேதான், காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டசபைத் தொகுதியில் பா.ஜ.க-வினர் பாதயாத்திரை மேற்கொள்கிறார்கள்” என்றார்.