Published:Updated:

``அவர்கள் விரும்பித்தான் சென்றனர்; 10 லட்சம் தொண்டர்கள் எங்கள் பக்கம்!"- உத்தவ் தேர்தல் கமிஷனில் மனு

உத்தவ் தாக்கரே

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தங்களது அணியில் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் போதிய எண்ணிக்கை இல்லாவிட்டாலும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலம் அதிகமாக இருப்பதாக தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருக்கிறார்.

``அவர்கள் விரும்பித்தான் சென்றனர்; 10 லட்சம் தொண்டர்கள் எங்கள் பக்கம்!"- உத்தவ் தேர்தல் கமிஷனில் மனு

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தங்களது அணியில் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் போதிய எண்ணிக்கை இல்லாவிட்டாலும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலம் அதிகமாக இருப்பதாக தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருக்கிறார்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே

சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அந்தக் கட்சியின் தேர்தல் சின்னம் யாருக்கு என்ற போட்டி ஏற்பட்டிருக்கிறது. வில் அம்பு சின்னத்தைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மனு கொடுத்திருக்கிறது. தங்களுக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறி தங்களுக்கு வில் அம்பு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் ஆரம்பத்தில் தடை விதித்திருந்தது. ஆனால் அந்தத் தடை சமீபத்தில் நீக்கிக்கொள்ளப்பட்டது. அதோடு மும்பையில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, அடுத்த மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இப்போதே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே வில் அம்பு சின்னத்தைப் பயன்படுத்துவார் என்றும், எனவே அதற்கு முன்பு தங்களது மனுமீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு வில் அம்பு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் கடந்த சில நாள்களுக்கு முன்பு புதிதாக ஒரு கடிதம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டது.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

இதையடுத்து உத்தவ் தாக்கரே தன்னிடமிருக்கும் ஆதாரங்களை இன்று பிற்பகல் 2 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. எனவே ,உத்தவ் தாக்கரே தரப்பில் தகுந்த ஆதாரங்களுடன் தேர்தல் கமிஷனில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், `என்னிடம் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஷிண்டேவிடம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராகக் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதவிப் பறிப்பு மனு நிலுவையில் இருக்கிறது. எனவே, அவர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. எங்களிடம் 14 எம்.எல்.ஏ-க்கள், 12 சட்டமேலவை உறுப்பினர்கள், 7 மக்களவை உறுப்பினர்கள், 3 ராஜ்ய சபா உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

2018-ம் ஆண்டு அமைக்கப்பட்ட கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 234 பேரில் எங்களிடம் 160 பேர் இருக்கின்றனர். ஆனால் ஷிண்டே அணியில் ஒருவர்கூட இல்லை. அதோடு எங்களது அணியில் கட்சி உறுப்பினர்கள் 10 லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்களில் 5 லட்சம் பேர் தங்களது கைப்பட எழுதிக்கொடுத்த கடிதத்தையும் சேகரித்துவருகிறோம். அவை விரைவில் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்படும். ஆனால் ஷிண்டே அணியில் 1.6 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். கட்சியின் உள்கட்டமைப்பு பதவிகளில் 2,62,542 பேர் இருக்கின்றனர். கட்சியிலிருந்து சென்ற எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் தாங்களாகத்தான் விருப்பப்பட்டுச் சென்றிருக்கின்றனர். அதனால் அவர்கள் கட்சிக்கோ, சின்னத்துக்கோ உரிமை கொண்டாட முடியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

ஏக்நாத் ஷிண்டே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ``மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் தனியாகப் பிரிந்து வந்திருக்கிறோம். அதனால் எங்கள்மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு ஷிண்டே தரப்பினர் தாங்கள்தான் பால்தாக்கரேவின் இந்துத்துவா கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் உண்மையான வாரிசு என்று தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இரு தரப்பினரும் தங்களது தரப்பு ஆதாரங்களை தாக்கல் செய்திருப்பதால் தேர்தல் கமிஷன் ஓரிரு நாள்களில் சிவசேனாவின் தேர்தல் சின்னம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் சிவசேனா தனது வில் அம்பு சின்னத்தில் போட்டியிடுமா என்பது இன்னும் ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும் என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.