Published:Updated:

`மக்கள் நலனுக்காக இணைவோம்!' - ஒரே குரலில் கமல், ரஜினி

மக்கள் நலனுக்காகத் தேவைப்பட்டால் ஒன்றிணைந்து பயணிக்கத் தயார் என கமல்ஹாசன் மற்றும் ரஜினி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கமல், ரஜினி
கமல், ரஜினி

ஒடிசாவின் செஞ்சூரியன் தொழில்நுட்ப மேலாண்மைப் பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கமலுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் புவனேஸ்வரில் உள்ள புகழ்பெற்ற கலிங்கா ஹாக்கி மைதானத்துக்குச் சென்று அவர் பார்வையிட்டார். அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய ஹாக்கி வீரர்களையும் அவர் சந்தித்து உரையாடினார். அவருக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் ஜெர்ஸியையும் பரிசளித்தனர்.

``அதிசயம்.. அற்புதம்” சொன்னது ரஜினி... கொண்டாடுவது அ.தி.மு.க!
கமல்
கமல்

பின்னர் விமானம் மூலம் சென்னை வந்த கமல்ஹாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அரசியலில் ரஜினியும் கமலும் இணையும் அதிசயம் நடக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கமல், ``அதில் அதிசயம் எதுவுமில்லை. ஏற்கெனவே 44 ஆண்டுகள் திரைத்துறையில் சேர்ந்துதான் பயணித்திருக்கிறோம்'' என்றார். அதற்கு, `திரைத்துறையில் மட்டுமா?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. ``தமிழகத்தின் மேம்பாட்டுக்காக சேர்ந்து பயணிக்க வேண்டி வந்தால் நிச்சயம் பயணிப்போம். கொள்கைகள் குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம். அதற்கு இன்னும் நேரமிருக்கிறது'' என்றார்.

`அதிசய' ரஜினி; `தம்பிமார்கள்' எஸ்.ஏ.சி; `சான்ஸ் கொடுங்க' விஜய் சேதுபதி... உலக நாயகனின் `உங்கள் நான்' விழாவில் நடந்தது என்ன?!

இந்த நிலையில், கோவாவில் நாளை தொடங்கும் தேசிய திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ரஜினி கோவா செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம் கமலின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

கமல், ரஜினி
கமல், ரஜினி

அதற்குப் பதிலளித்த ரஜினி, ``தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்'' என்று கூறினார். `உங்களின் கருத்துக்கு துணைமுதல்வர் ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளாரே?' என்ற கேள்விக்கு, ``அது அவரின் தனிப்பட்ட கருத்து. அதுகுறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை'' என்று ரஜினி பதிலளித்தார்.