Published:Updated:

`திருமாவளவன் தவறாக எதுவும் கூறவில்லை; அவரை ஆதரிக்கிறோம்!’ - கே.எஸ்.அழகிரி

 கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

`திருமாவளவன் தவறாக எதுவும் கூறவில்லை. நாங்கள் திருமாவளவனை ஆதரிக்கிறோம். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். இது எங்கள் தொகுதி’ என்று கே.எஸ்.அழகிரி பேசினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், அகஸ்தீஸ்வரத்திலுள்ள முன்னாள் எம்.பி வசந்தகுமார்  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``தமிழ்நாடு அரசு 7.5 சதவிகிதம் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த விஷயத்தில் ஆளுநர் சுணக்கம் காட்டுவதை ஏற்க முடியாது. அவர் காலச்சக்கரத்தை மாற்றிச் சுழற்றுகிறாரோ எனத் தோன்றுகிறது. கவர்னர் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம். மாநிலப் பாடத்திட்டத்தில் படிப்பவர்களும் எழுதும் வகையில் நீட் தேர்வு அமைய வேண்டும். படிப்பது ஒரு பாடத்திட்டம், தேர்வு எழுதுவது மற்றொறு பாடத்திட்டமாக இருப்பதை எதிர்க்கிறோம்.

கே.எஸ் அழகிரி
கே.எஸ் அழகிரி

12,000 ஆண்டுக்கால இந்திய வரலாற்றை மாற்றுவதற்கு பா.ஜ.க முயல்கிறது. இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுவில் இந்தி பேசும், இந்தியைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. இந்த குழுவைக் கலைக்க வேண்டும். ஓர் அரசாங்கம் மக்களுக்குத் தேவையான மணலைச் சமச்சீராகப் பிரித்துக் கொடுக்க இயலாமல் இருக்கிறது. இது அரசாங்கம் மணல் கொள்ளைக்கு உடந்தையாக, பணம் கொள்ளையடிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

`40 நிமிட உரை; முழுமையாகக் கேட்க வேண்டும்’ - `மனு தர்ம’ நூல் விவகாரத்தில் திருமாவளவன் பதில்

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று மிக மோசமாக பாதித்திருக்கிறது. தமிழக அரசு அதைத் தடுக்க முயல்கிறது. ஆனால், முயற்சி போதுமானதாக இல்லை. தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கின்றன. அதைத் தடுக்க அரசு தவறிவிட்டது. திருமாவளவன் மீது வழக்கு போட எந்தவித முகாந்திரமும் இல்லை. புராணங்களில் உள்ளதை மறுபதிவு செய்திருக்கிறார். புராணங்களில் பெண்களை இழிவாகக் கூறியிருக்கிறார்கள். திருமாவளவன் இந்து மதத்துக்கு எதிராகப் பேசவில்லை.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

மதத்திலுள்ள தவறுகளை நாமே சுட்டிக்காட்டினால் தவறில்லை. திருமாவளவன் தவறாக எதுவும் கூறவில்லை. நாங்கள் திருமாவளவனை ஆதரிக்கிறோம். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். இது எங்கள் தொகுதி. குஷ்பு, காங்கிரஸ் கட்சியிலிருந்து சென்றதால் காங்கிரஸுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. குஷ்புவுக்குத்தான் பின்னடைவு" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு