Published:Updated:

மதுரை: `தி.மு.க கூட்டணியில் குறைந்த இடங்களே கிடைக்கும்; வேறு வழியில்லை!’ - வைகோ

வைகோ
வைகோ

`சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்திருக்கிறேன். சில முக்கியமான முடிவுகள் எடுக்கவும் தீர்மானித்திருக்கிறேன். சில நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவந்து கட்சி புத்துணர்வு பெறும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுவேன்’ - வைகோ

``தி.மு.க கூட்டணியில் குறைந்த அளவே இடங்கள் கிடைக்கும். அதைப் பற்றி ம.தி.மு.கவினர் கவலைப்பட வேண்டாம். யார் எது சொன்னாலும் கண்டுகொள்ள வேண்டாம். இந்தத் தேர்தலில் வேறு வழியில்லை'' என்று வைகோ மதுரையில் நடந்த தேர்தல் நிதியளிப்பு விழாவில் பேசியிருப்பது ம.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நிதியளிப்பு விழாவில்
நிதியளிப்பு விழாவில்

தொடர்ந்து வைகோ பேசும்போது, ``நான் தற்போது பூரண நலத்துடன் இருக்கிறேன். தேர்தலுக்கு நிதி திரட்ட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எல்லோரும் சொன்னபோது நிதி கிடைக்குமா எனச் சந்தேகப்பட்டேன். தமிழகத்திலேயே தேர்தல் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி நாம்தான். மற்ற கட்சிகளில் நிதி குவிந்துகிடக்கிறது. மக்களுக்கு நம்மிடம் காசு இல்லையென்பது தெரியும். அதேநேரம், மாசற்றவர்கள், நாட்டுக்காக உழைக்கிறார்கள் என்பதால் நீங்கள் கேட்டால் கொடுக்கிறார்கள்.

திராவிடத்தைக் காக்க தி.மு.க-வுடன் இணைந்து துணையாக இருக்கிறோம். ம.தி.மு.க-வினர் யாருக்கும் எம்.பி., எம்.எல்-ஏக்கள் என்ற எதிர்பார்ப்புகள் இல்லை. அதேநேரம், தேர்தலில் தோல்விகள் ஏற்படும்போது அதிகம் வேதனைப்படுவது நான்தான். தி.மு.க கூட்டணியில் குறைந்த அளவே இடங்கள் கிடைக்கும். அதைப் பற்றி ம.தி.மு.க-வினர் கவலைப்பட வேண்டாம். யார் எது சொன்னாலும் கண்டுகொள்ள வேண்டாம். இந்தத் தேர்தலில் வேறு வழியில்லை. ம.தி.மு.க-வினர் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

வைகோ செய்தியாளர் சந்திப்பு
வைகோ செய்தியாளர் சந்திப்பு

சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்திருக்கிறேன். சில முக்கியமான முடிவுகள் எடுக்கவும் தீர்மானித்திருக்கிறேன். சில நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவந்து கட்சி புத்துணர்வு பெறும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுவேன்.

வருகின்ற தேர்தலில் தொகுதிக்கு 20 கோடி ரூபாய் வரை செலவு செய்ய மற்ற கட்சிகள் தயாராக இருக்கின்றனன. ஆனால், நம்மிடம் பணம் இல்லை. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாடுபடுகின்ற உங்களைப் போன்ற தொண்டர்கள் எந்த இயக்கத்துக்கும் வாய்க்க மாட்டார்கள்.

ஏழு பேர் விடுதலை பற்றி இன்றைக்கு எல்லோரும் பேசுகிறார்கள். அவர்களுடைய விடுதலைக்காக, 78 லட்ச ரூபாய் செலவு செய்தது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான். இப்போதுபோல அன்று நீங்கள் திரட்டிக்கொடுத்த நிதியைச் செலவிட்டுத்தான் தூக்குக்கயிற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். அதன் பிறகு, உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் நானும் வழக்கறிஞர் தேவதாஸும் பலமுறை டெல்லி சென்று விசாரணையில் பங்கேற்றோம்.

நிதியளிப்பு விழாவில்
நிதியளிப்பு விழாவில்

தாய்த் தமிழகத்தின் நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று காவிரிப் பிரச்னையில் களம் கண்டு போராடியிருக்கிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி என இன்று பல கட்சிகள் புதிய அமைப்புகளை ஏற்படுத்திவருகின்றன என்றால், இதற்கெல்லாம் முன்னோடி நாம்தான்'' என்று பேசினார்.

பின்பு செய்தியாளர்களிடம் ;பேசியவர், ``இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க-வைத் தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதற்காக தி.மு.க எங்களுக்கு எத்தனை இடங்கள் கொடுத்தலும் போட்டியிடத் தயாராக இருக்கிறோம். என் மகன் தேர்தலில் போட்டியிடவில்லை'' என்று பேசினார்.

மதுரையில் வைகோ பேசியது வழக்கமான பேச்சாக இல்லை என்றும், அவர் பேச்சிலிருந்த கம்பீரம் குறைந்து விரக்தி வெளிப்படுகிறது என்றும் ம.தி.மு.க தொண்டர்கள் வருத்தப்படுகிறார்கள்.

நெல்லை: `துரை வையாபுரி எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டார்’ - வைகோ திட்டவட்டம்
அடுத்த கட்டுரைக்கு