Published:Updated:

பரமக்குடி: `முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தியே தேர்தலைச் சந்திப்போம்!' - அன்வர் ராஜா அதிரடி

அன்வர் ராஜா
அன்வர் ராஜா ( உ.பாண்டி )

அன்வர் ராஜா , ``முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் அ.தி.மு.க-வில் மட்டும் நிகழ்வதுபோல் நினைக்க வேண்டாம். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளில்கூட கடந்த காலங்களில் இந்தப் பிரச்னை நிலவியிருக்கிறது’’ என்றார்.

``அடுத்த முதல்வர் யார் என்பதை முன்னிறுத்தித்தான் வரும் சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க எதிர்கொள்ளும்’’ என முன்னாள் எம்.பி அன்வர் ராஜா பேசியிருப்பது கட்சித் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பரமக்குடி ஆலோசனைக் கூட்டத்தில் அன்வர் ராஜா
பரமக்குடி ஆலோசனைக் கூட்டத்தில் அன்வர் ராஜா
உ.பாண்டி

முன்னதாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ``சட்டமன்றத் தேர்தலுக்கு பின் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஒன்றுகூடி முதல்வரைத் தேர்வு செய்வார்கள்’’ என்று தெரிவித்தார். இதற்கு எதிராகப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ``எப்போதும் முதல்வர் பழனிசாமிதான். அவரை முன்னிறுத்தியே சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்போம்’’ என பதிலடியில் இறங்கினார். இந்நிலையில் தேனி மாவட்டம், போடி மற்றும் பெரியகுளம் பகுதிகளில் `2021 முதல்வர் ஓ.பி.எஸ்ப் என்ற ஹேஷ்டேக்குடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனால் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே மோதல் உருவாகும் சூழல் எழுந்தது.

ஓ.பி.எஸ் ஆதரவு போஸ்டர்
ஓ.பி.எஸ் ஆதரவு போஸ்டர்
விகடன்

இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து மூத்த அமைச்சர்கள் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் வீடுகளுக்குச் சென்று பல முறை ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பிறகு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், ``கடந்த சில நாள்களாகக் கட்சி நிர்வாகிகள் சிலர் எந்தப் பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துகள் மாற்றாருக்குப் பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டன. கட்சிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்சித் தலைமை ஒப்புதல் இன்றி ஊடகங்கள், பத்திரிகைகளில் தங்கள் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பரமக்குடியில் அ.தி.மு.க இளைஞர் - இளம்பெண் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.பி-யும், சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளருமான அன்வர் ராஜா, ``முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் அ.தி.மு.க-வில் மட்டும் நிகழ்வதுபோல் நினைக்க வேண்டாம். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளில்கூட கடந்த காலங்களில் இந்தப் பிரச்னை நிலவியிருக்கிறது. இதை இப்போதுதான் எழுந்த பிரச்னையாகக் கருத வேண்டாம். முதல்வர் வேட்பாளர் பற்றிப் பேசுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் வெற்றி பெற்று, அம்மா முதல்வர் ஆனார்.

ஆலோசனைக் கூட்டத்தில் அன்வர் ராஜா
ஆலோசனைக் கூட்டத்தில் அன்வர் ராஜா
உ.பாண்டி

தற்போது அதே நிலை நீடிக்காது. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தித்தான் அ.தி.மு.க தேர்தலைச் சந்திக்கும்'' என்றார். `முதல்வர் வேட்பாளர் முன்னிலை குறித்து பொறுப்பிலுள்ளவர்கள் தனிப்பட்ட கருத்தைத் தெரிவிக்க கூடாது’ என அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ள நிலையில் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா இவ்வாறு பேசியிருப்பது அக்கட்சியினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`6 மணிக்குள் கடும் நடவடிக்கை வேண்டும்!’ - ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக எடப்பாடியிடம் கொதித்த ஓ.பி.எஸ்?
அடுத்த கட்டுரைக்கு