Published:Updated:

``இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்துவோம்!”- அமைச்சர் கடம்பூர் ராஜு

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

``குடியுரிமை திருத்தச் சட்டத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையை வழங்கிட மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்” என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்த அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜுவைச் சந்தித்தனர்.

கடம்பூர் ராஜுவுடன் வேட்பாளர்கள்
கடம்பூர் ராஜுவுடன் வேட்பாளர்கள்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ``அ.தி.மு.கவைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் இருந்த கூட்டணி அப்படியே தொடர்கிறது. கூட்டணிக் கட்சிகளுடன் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, வார்டுகள் பிரிக்கப்பட்டு அனைத்து வார்டுகளுக்கான வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். எங்களைப் பொறுத்தவரை வாக்களிக்கும் மக்கள்தான் எஜமானர்கள். தி.மு.க கார்ப்பரேட்டை நோக்கிச் செல்வதாகக் கூறி, பழம்பெரும் அரசியல்வாதி, முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார்.

2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் மறுவரையறை செய்ய வேண்டும் என தி.மு.க நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்ற உத்தரவுப்படி மாநிலத் தேர்தல் ஆணையம் வார்டுகளை முறையாக மறுவரையறை செய்து வெளிப்படையாக அறிவித்துள்ளது. நீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டு, தேர்தலுக்குத் தடை இல்லை என்று சொன்ன பின்புதான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

அமைச்சர்  கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

இதன் பின்பும் தி.மு.க குறைகூறுவது அவர்கள் மக்களைச் சந்திக்கப் பயப்படுகின்றனர் என்பதைக் காட்டுகிறது. விக்ரவாண்டி, நாங்குநேரி இரு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க பெற்ற தோல்வி மூலமாக அவர்களுக்கு இன்றும் ஜுரம் தணிந்தபடி இல்லை. தி.மு.கவினருக்குத் தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. ஆகையால் மக்கள் மன்றத்தைச் சந்திப்பதற்கு பதில் நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலில், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமல், ஏலத்தின் மூலம் பதவி விடப்பட்டால் அது செல்லாது. குடியுரிமைச் சட்டத்தினை அ.தி.மு.க ஆதரித்தாலும், இச்சட்டத்தினால் ஈழத்தமிழர்களுக்குப் பாதிப்பு வரும் என்ற நிலை வந்தாலும் கூட, அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்தினை முன் வைத்துள்ளோம். வரும் 19 –ம் தேதி பிரதமரை, தமிழக முதல்வர் சந்திக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து வலியுறுத்த வாய்ப்பு உள்ளது.

திரண்ட தொண்டர்கள்
திரண்ட தொண்டர்கள்

எந்த ஒரு சட்டமும் இயற்றப்படும்போது, சில மாறுபட்ட கருத்துகள் வருவதும், பின்னர், அச்சட்டத்தில் சில ஷரத்துகள் சேர்க்கப்படுவதும் இயல்பானதுதான். ஜி.எஸ்.டி வரிச் சட்டம் அறிவிக்கப்பட்ட பிறகும், அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அது போன்று குடியுரிமைச் சட்டத்திலும் மாற்றம் வரும் போது, ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு வலியுறுத்தும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு