Published:Updated:

மேற்கு வங்கம்: "என்னைத் துப்பாக்கியால் சுட்டாலும்..." - முதல்வர் மம்தா Vs ஆளுநர் ஜகதீப் தன்கர்

மம்தா பானர்ஜி - ஜகதீப் தன்கர்
மம்தா பானர்ஜி - ஜகதீப் தன்கர் ( Jagdeep Dhankar / Twitter )

"மக்களை காவல்துறையினரே மிரட்டுகின்றனர். என்னைத் துப்பாக்கியால் சுட்டாலும் நெஞ்சில் குண்டைத் தாங்குவேன்" - ஜகதீப் தன்கர்

"மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. வீடுகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. மக்களை, காவல்துறையினரே மிரட்டுகின்றனர். என்னைத் துப்பாக்கியால் சுட்டாலும் நெஞ்சில் குண்டைத் தாங்குவேன். ஒட்டுமொத்த மாநிலமும் பற்றி எரிகிறது. முதல்வர் மம்தாவின் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை" என கள ஆய்வில் ஈடுபட்டுவரும் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் அந்த மாநில அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகவிருக்கிறார். தேர்தல் முடிவுகள் வெளியான மே 2-ம் தேதிக்கு பின்னர், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பாஜக தொண்டர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இவற்றில் 16 பேர் உயிரிழந்தனர். ஏராளமான பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்தநிலையில், கடந்த சில நாள்களாக வன்முறை கலவரங்கள் நடைபெற்ற இடங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கள ஆய்வு நடத்திவருகிறார் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர். தொடக்கம் முதலே ஆளுநரின் இந்தச் செயலுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். கடந்த புதன்கிழமை ஆளுநர் ஜகதீப் தன்கர், தேர்தல் முடிவுகளுக்குப் பின் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற கூச் பிஹார், சீத்தல்குச்சி, மாத்த பங்கா, தின்ஹாட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தப்போவதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும், கலவரங்களால் பாதிக்கப்பட்டு, அஸ்ஸாம் மாநிலத்தின் ஶ்ரீராம்பூர், ரன்பக்ளி ஆகிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மேற்குவங்க மக்களையும் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் இத்தகைய முடிவால் கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் மம்தா, “நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளுக்குப் புறம்பாக, ஆளுநர் கள ஆய்வு செய்யும் முடிவைத் தவிர்க்க வேண்டும். மேலும், மாநில அரசின் அதிகாரிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு உத்தரவிடும் போக்கையும் கைவிட வேண்டும்” என ஆளுநருக்குக் கடிதம் மூலம் கருத்து பகிர்ந்தார். மம்தாவின் கருத்தை மாநில பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து பேசினர்.

முதல்வர் மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த ஆளுநர் ஜகதீப், குறிப்பிட்டபடி மறுநாள் வியாழக்கிழமையிலிருந்து தனது ஆய்வுப் பயணத்தை தொடர்ந்தார். நேற்று கூச் பிஹார், தின்ஹட்டா பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மக்களை சந்தித்தார். அப்போது, ஆளுநரின் வருகையை எதிர்த்து அந்தப் பகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர். எனவே, காவல்துறையினரும் ஆளுநர் மேற்கொண்டு பகுதிகளுக்குச் செல்வதைத் தடுத்தனர். இந்த நிகழ்வால் பொறுமையிழந்த ஜகதீப் தன்கர், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. வீடுகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. மக்களை, காவல்துறையினரே மிரட்டுகின்றனர். என்னைத் துப்பாக்கியால் சுட்டாலும் நெஞ்சில் குண்டைத் தாங்குவேன்” என உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.

மேலும் தொடர்ந்து, இன்றைய தினம் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டு தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட, நந்திகிராம் பகுதியில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார். அதன் பின்னர், எல்லை பாதுக்காப்பு படையினரின் ஹெலிகாப்டரில் அஸ்ஸாம் சென்று மக்களைச் சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், வானிலை காலமாற்றத்தால், சாலை வழியாக காரில் பயணம் மேற்கொண்டு அஸ்ஸாம் மாநில முகாம்களில் தஞ்சமடைந்திருக்கும் மேற்கு வங்க மக்களைச் சந்தித்தார்.

மம்தா பானர்ஜி-  ஜகதீப் தன்கர்
மம்தா பானர்ஜி- ஜகதீப் தன்கர்
Jagdeep Dhankar / Twitter

அதன் பின்னர் அஸ்ஸாமிலிருந்து புறப்பட்டு சிலிகுரி வந்தவர், “இந்த மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். நான் அவர்களை சந்தித்ததால் மீண்டும் அவர்கள் தாக்கப்படலாம் என அம்மக்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் அப்படியொரு பயத்தில் வாழ்கிறார்கள் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அவர்கள் ஆளும் திரிணாமுல் கட்சியை எதிர்த்ததால் இத்தகைய அரசியல் பகையுணர்வை எதிர்கொள்கின்றனர்.” என்றார். மேலும், "நான் ஊடகங்கள் மூலம் இந்த அரசாங்கத்தை எச்சரிக்கிறேன். மேற்கு வங்கம் சட்ட விரோதமாகச் செயல்படுகிறது. இது குறித்து முதல்வருடன் பேசுவேன்” எனக் காட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, கடந்த மே 7-ம் தேதி மம்தா பானர்ஜி முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டபோது, பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநர் ஜகதீப் தன்கர், மரபுக்கு மாறாக, மாநிலத்தில் நடந்துவரும் சட்ட ஒழுங்குப் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கையை முன்வைத்தார். இந்த நிகழ்வு அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Jagdeep Dhankar / Twitter
Jagdeep Dhankar / Twitter

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாகப் பேசிய மம்தா, "நிச்சயம் மாநிலத்தின் சட்ட ஒழுங்கைச் சரிசெய்வதே என்னுடைய முதன்மைப் பணியாக இருக்கும்" எனத் தெரிவித்தார். தொடக்கம் முதலே முதல்வர் மம்தாவுக்கும், ஆளுநர் ஜகதீபுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்துவந்த நிலையில் தற்போது வெளிப்படையாகவே மோதல் அதிகரித்துவருகிறது. பாஜக., தான் அதிகாரத்தில் இல்லாத மாநிலங்களில், தனக்கு ஆதரவான ஆளுநர்களை பணியமர்த்தி அந்தந்த மாநில அரசுகளுக்குக் குடைச்சல் கொடுத்துவருவது, ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்களை தன்பக்கம் இழுப்பது, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முயற்சிப்பது போன்ற போக்குகள் ஒன்றும் புதுமையானவை அல்ல என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு