Published:Updated:

வீட்டில் என்ன செய்கிறார்கள் வி.ஐ.பி கள்?

ஜெயக்குமார், வைகோ
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார், வைகோ

ஒரேயொரு சின்ன ஆறுதல், குடும்ப உறுப்பினர்கள் முகங்களை அவ்வப்போது பார்த்துக்கொள்ள முடிகிறது அவ்வளவுதான்!

வீட்டில் என்ன செய்கிறார்கள் வி.ஐ.பி கள்?

ஒரேயொரு சின்ன ஆறுதல், குடும்ப உறுப்பினர்கள் முகங்களை அவ்வப்போது பார்த்துக்கொள்ள முடிகிறது அவ்வளவுதான்!

Published:Updated:
ஜெயக்குமார், வைகோ
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார், வைகோ
விரல் சொடுக்கில் உலகை அழிக்கவந்த ‘தானோஸ்’-ஆக நின்று மிரட்டுகிறது கொரோனா வைரஸ்! ஓயாமல் சுற்றிக்கொண்டிருந்த பூமிப் பந்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் ஃப்ரீஸாக்கியிருக்கும் கொரோனாவுக்கு பயந்து, வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் அரசியல் பிரபலங்களின்... ஒருநாள் பொழுது எப்படிக் கழிகிறது என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டோம்...
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ

‘’சென்னையில்தான் குடும்பத்தினரோடு இருக்கிறேன். பேத்தி மட்டும் வெளியூரில் படித்துக்கொண்டிருக்கிறாள். ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருக்கும் பேரன் எங்களோடுதான் இருக்கிறான். காலையில் எழுந்ததும் கட்சியினரோடு தொலைபேசியில் பேசுகிறேன். எல்லாப் பத்திரிகைகளையும் ஒன்றுவிடாமல் படிக்கிறேன்.

வைகோ
வைகோ

இப்போது ‘வேள்பாரி’ புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். தொலைக்காட்சியில், பழைய படங்கள் அல்லது பாடல்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளை எப்போதாவது பார்க்கிறேன். கோடிக்கணக்கான ஏழை மக்கள் இந்தக் கொரோனா பாதிப்பை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள், உணவுத் தேவையை எப்படிப் பூர்த்தி செய்யப்போகிறார்கள் என்பதையெல்லாம் நினைத்தால், இந்தப் பிரச்னை எங்கே போய் முடியுமோ என்று பயமாக இருக்கிறது.’’

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி

‘’கடலூர் மாவட்டம் கீரப்பாளையம்தான் என் சொந்த ஊர். வயல்காட்டின் நடுவே எங்கள் வீடு. இங்கேதான் பேரக் குழந்தைகள் சகிதம் குடும்பத்தோடு தங்கியிருக்கிறேன். வீட்டைச் சுற்றி நிறைய மரங்கள் உண்டு. உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த இடம் இது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

காலையில் எழுந்து செய்தித்தாள் படித்துமுடித்த பிறகு, வயல்வெளியிலேயே நடைப்பயிற்சி. தினமும் இரண்டு திருக்குறள்களை மனப்பாடம் செய்கிறேன். பவன் கே.வர்மா எழுதிய, ‘ஆதி சங்கராச்சாரியார்’ என்ற புத்தகத்தை இரண்டாவது முறையாக வாசித்துவருகிறேன். அடுத்து, எப்போதும்போல், அன்றாட நிகழ்வுகளை ஒரு பெரிய நோட்புக்கில் தொடர்ந்து எழுதிவருகிறேன். சாதாரண நாள்களில் ஓய்வின்போது படங்கள் பார்ப்பதுண்டு. ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘முதல் மரியாதை’ படங்கள் எனக்கு எப்போதுமே சலிக்காதவை.”

தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

‘’சென்னையிலுள்ள என் அக்காள் மகன் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன். காலையிலிருந்தே கட்சிக்காரர்கள் போனில் பேச ஆரம்பித்துவிடுவார்கள். காலையில் எழுந்து அறையை சுத்தம் செய்தேன். பின்னர் துணிமணிகளைத் துவைத்தேன். சாதாரண நாள்களில் கட்சிக்காரர்களோடு சாப்பிடுவேன். இப்போது பெரும்பாலும் ஹோட்டல் உணவுதான். ஆனால், ஊரடங்கினால், ஹோட்டலும் திறக்கவில்லை என்பதால், பாசிப்பருப்புக் கஞ்சி-துவையல், கோதுமை உப்புமா எனக் கொஞ்சம் கொஞ்சமாக நானே சமைத்து உண்ணப் பழகிவருகிறேன். அவசரத்துக்கு ஃப்ரிட்ஜில் தயிர், பிரெட் பாக்கெட்டுகள் வாங்கி வைத்திருக்கிறேன்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

‘அக்னிச் சிறகுகள்’ புத்தகத்தை இரண்டாவது முறையாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். நேரம் கிடைத்தால், காமெடி சேனல்கள் பார்ப்பதோடு முரசு டி.வி-யில் பழைய பாடல்கள் கேட்கிறேன்.’’

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு

‘’வீட்டுக்கு வெளியில்தான் நான் ஓர் அரசியல்வாதி. மற்றபடி வீட்டுக்குள் சாதாரணமாக ஒரு குடும்பத் தலைவி, தாய், மனைவி என எல்லோரையும்போல இருக்கவே விரும்புவேன். சாதாரணமாகவே வீட்டில் சமையல் வேலை அனைத்தையும் நானேதான் பார்த்துக்கொள்வேன். இப்போது, கொரோனா ஊரடங்கு உத்தரவினால், பணியாட்களையும் வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். எனவே, காலையில் எழுந்து பாத்திரங்கள் கழுவுவது, துணி துவைப்பது, சமைப்பது எனத் தொடர்ந்து எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறேன்.

குஷ்பு
குஷ்பு

லண்டனில் படித்துக்கொண்டிருந்த மூத்த மகளும் இப்போது வீட்டில் இருப்பதால், அப்பா, மகள்கள் என மூவரும் ஒன்றுசேர்ந்து என்னைக் கலாய்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். சமையலைப் பொறுத்தவரை ரசம், கூட்டு, அப்பளம் இருந்தாலே ‘பிரமாதம்’ என சந்தோஷப்படுவார் என் வீட்டுக்காரர். ஆனால், மகள்களோ விதவிதமாக சமைத்துத் தரச்சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள்.’’

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

‘`ஊரடங்கு உத்தரவுக்கு முந்தைய நாள்வரை, மக்கள் பிரச்னைகளை நேரடியாகக் கேட்டறிந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுக்கொண்டிருந்தேன். இப்போது வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடந்தாலும் நாள் முழுக்க அதே பணியைத்தான் தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் உதவியோடு செய்துவருகிறேன். இதற்காகவே வீட்டில் என் அறையை சின்னதொரு அலுவலகமாக மாற்றிவிட்டேன்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

சாப்பாடு, பால், தங்குமிடம், மருத்துவ உதவி என்று மக்களிடமிருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வந்துகொண் டேயிருக்கி ன்றன. அவற்றை உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்று தீர்த்துவைப்பதிலேயே நாள் கழிகிறது. மற்றபடி வீட்டில், என் மகன், மருமகள் இருவருமே டாக்டர்கள் என்பதால், குடும்ப ஆரோக்கியத்தை அவர்களே பார்த்துக்கொள்கின்றனர்.

ஒரேயொரு சின்ன ஆறுதல், குடும்ப உறுப்பினர்கள் முகங்களை அவ்வப்போது பார்த்துக்கொள்ள முடிகிறது அவ்வளவுதான்!’’

முன்னாள் தி.மு.க அமைச்சர் பொன்முடி

‘`என் மகன்கள் அவரவர் குடும்பத்தினரோடு சென்னையில் இருக்கிறார்கள். நான் என் துணையரோடு விழுப்புரத்தில் இருக்கிறேன். இப்போதுகூட என் தொகுதியிலுள்ள மணம்பூண்டியிலிருந்து ஒரு புகார் வந்தது. துபாயிலிருந்து ஊர் திரும்பிய இருவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது சம்பந்தமானது அது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இவ்விஷயத்தில் கவனம் எடுக்குமாறு சொல்லியிருக்கிறேன்.

பொன்முடி
பொன்முடி

எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையையே பயன்படுத்தி வந்ததால், டி ஷர்ட் மற்றும் கலர் சட்டை மற்றும் கைலிகள் வீட்டில் தேங்கிக் கிடக்கின்றன. இப்போது வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்க வேண்டியதிருப்பதால், அதையெல்லாம் அணிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வரலாற்றுப் பேராசிரியர் என்றவகையில் நிறைய புத்தகங்களை நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன். ஆனாலும் இப்போது மீண்டும் கலைஞரின் எழுத்துகள் மற்றும் தமிழ்நாட்டு வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டிவி சீரியல்கள் பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு. தலைவர் கலைஞரிடமிருந்து இந்தப் பழக்கம் எனக்கு வந்துவிட்டது. ஒருநாள் பார்க்கத் தவறிவிட்டாலும்கூட, மறுநாள் யூடியுபில் பார்த்துவிடுவேன்.’’

நாஞ்சில் சம்பத், (இலக்கிய - அரசியல் மேடைப் பேச்சாளர்)

‘`வெளியூர்ப் பயணங்கள், மேடைகள் என ஓடிக்கொண்டேயிருந்தவனுக்குக் குடும்பத்தோடு நேரம் செலவழிப்பதற்காகக் காலம் தந்த வாய்ப்பு இது. வீட்டில், மனைவி, மகன், மகள், பேரக் குழந்தைகள் என எல்லோரும் ஒன்றாக இருந்தாலும் என்னுடைய எழுத்துப் பணி, புத்தக வாசிப்பு போன்ற பழக்கங்களால் கூடுமானவரையில், தனிமைப்படுத்திக்கொள்கிறேன்.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கொள்வது நல்லது என்பதால், தினமும் காலையில் எழுந்ததும் நல்லெண்ணெயில் வாய் கொப்பளிக்கிறேன். பின்னர் முருங்கைக்கீரை சூப் குடிக்கிறேன். நாள் முழுக்க அவ்வப்போது எலுமிச்சம்பழ ஜூஸ் குடிப்பதோடு மறக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிக்கிறேன்.

விடுதலை, தீக்கதிர் எனப் பழைய பேப்பர்களை எல்லாம் எடுத்துவைத்து முக்கியமான குறிப்புகளை எடுத்துவைத்துக் கொள்கிறேன். ‘நான் பேச நினைத்ததெல்லாம்...’ என்ற தலைப்பில் நான் எழுதிவரும் புத்தகப் பணியை இன்னும் விரைவில் எழுதி முடித்துவிடுவேன்.

என் மகனுடைய வகுப்புத் தோழனுக்கு இன்று கல்யாணம். ஊரடங்கு உத்தரவு இருப்பதால், அங்கே போகமுடியவில்லை. இதேபோல், உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள முடியவில்லை என்பதெல்லாம் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.’’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

‘’வீட்டில் இருந்தும் இல்லாத மாதிரியாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. கட்சித் தலைமை, தோழர்கள், அதிகாரிகள் என ஏற்கெனவே இருந்த பரபரப்பை விடவும் இப்போதுதான் ரொம்பவும் பிஸி. நிறைய இடங்களில் உணவுத் தட்டுப்பாடு, போலீஸ் பிரச்னைகள் என்று மக்கள் புகார் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். அவற்றைக் கேட்டு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேச வேண்டியிருக்கிறது.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

வீட்டில், சாப்பிடும் வேளையில் மட்டும்தான் நானும் என் மனைவியுமே பேசிக்கொள்கிறோம். எங்களுக்கு 2 மகன்கள். இதில் ஒருவர் அமெரிக்காவிலும் இன்னொருவர் ஹிமாச்சலிலும் குடும்பத்தோடு இருக்கிறார்கள். அதனால் அவர்களோடும் போனில் மட்டுமே தொடர்பு.

செய்தித்தாள் படிப்பது, செய்தி சேனல் பார்ப்பதையும் தாண்டி நேரம் கிடைக்கிறபோது, புத்தகம் வாசிக்கிறேன். எழுத்தாளர் திரேந்திர கே.ஜா எழுதியுள்ள ‘நிழல் ராணுவங்கள்’ புத்தகம்தான் இப்போது படித்துக்கொண்டி ருக்கிறேன்.’’