Published:Updated:

நாலா பக்கமும் கத்தி.. உடைக்கப் பார்க்கும் கூட்டணி! - என்ன செய்யப் போகிறார் அண்ணாமலை?

அண்ணாமலை
அண்ணாமலை ( நா.ராஜமுருகன் )

பா.ஜ.க மாநில தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அண்ணாமலைக்கு எதிராக, தலைவர் பதவி கிடைக்காதவர்கள், அமைச்சரவை மாற்றத்தில் இடம் எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் என ஒரு படையே கமலாலயத்தில் காத்திருக்கிறதாம்.

கர்நாடகா கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆகஸ்ட் 2020-ல் பா.ஜ.க-வில் இணைந்தார். இணைந்த சில தினங்களிலேயே மாநில துணைத் தலைவர் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. அப்போதே, ‘புதிதாக வந்தவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்? வந்தவுடன் மாநில பொறுப்பு அளிப்பதா?’ என கட்சியின் சீனியர்கள் டெல்லியிடம் விசும்பினர். ஆனால், அவர்களின் கருத்தை டெல்லி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அமைதி காத்தது. பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச் செயலாளரான பி.எல்.சந்தோஷ், தமிழக அரசியலுக்கு என அண்ணாமலையை ஏற்கெனவே தேர்ந்தெடுத்துவிட்டதே டெல்லியின் அமைதிக்கு காரணம் என்கிறார்கள். பல்வேறு போராட்டங்களுக்கு இடையேதான் அண்ணாமலைக்கு இந்த மாநில தலைவர் பதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

 அண்ணாமலை
அண்ணாமலை
நா.ராஜமுருகன்

நம்மிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர், “எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு கிடைத்துவிடக் கூடாது என்பதில், தி.நகரைச் சேர்ந்த சில முக்கியத் தலைவர்கள் எவ்வளவு தீவிரம் காட்டினார்களோ, அதே தீவிரத்தை அண்ணாமலைக்கு மாநில தலைவர் பொறுப்பு கிடைக்காமல் தடுக்கவும் காட்டினார்கள். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிராக ஒரு இளம் தலைவரை முன்னிறுத்தவும், சீமானுக்கு மடைமாறிவரும் இளைஞர்களின் வாக்குகளை பா.ஜ.க பக்கம் திருப்பவும் அண்ணாமலையை களமிறக்கியது டெல்லி. பொறுப்பு கிடைக்கவிடாமல் தடுக்கப் பார்த்த அந்த தி.நகர் புள்ளிகள், இப்போது அண்ணாமலைக்கு அரசியல்ரீதியாக நெருக்கடியை உருவாக்கவும் தயாராகிவிட்டனர்.

ஹெச்.ராஜா, மூத்த தலைவர்... ஆனாலும் விசாரணை செய்வோம்! - எல். முருகன் அதிரடி

விரைவில், ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. அதனோடு சேர்த்து நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தல்களும் நடத்தப்படலாம். இச்சூழலில், பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க., பா.ம.க கட்சிகள் கூட்டணியிலிருந்தால்தான் லாபம். ஆனால், இந்தக் கூட்டணி உடைய வேண்டுமென தி.நகர் பார்ட்டிகள் எதிர்பார்க்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் ஓசூர், நாகர்கோயில், ஆவடி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு மாநகராட்சிகளை கூட்டணியில் பெற்றுக் கொள்ளலாம் என்று பா.ஜ.க மேலிட தலைவர்கள் விரும்புகிறார்கள். அதற்குள் எதையாவது கலகத்தை ஏற்படுத்தி, அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க-வுக்கு மோதலை உருவாக்கிவிட்டால், கூட்டணி உடையுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால், உள்ளாட்சித் தேர்தலில் டெல்லி எதிர்பார்க்கும் ரிசல்ட்டை அண்ணாமலையால் கொடுக்க முடியாமல் போகும். இதைவைத்தே அவருக்கு எதிராக காய் நகர்த்தவும் தி.நகர் பார்ட்டிகள் திட்டமிடுகிறார்கள்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

கட்சிக்குள் இருக்கும் ஒரு சில லாபிகளை முன்னாள் தலைவரான எல்.முருகனால் கூட உடைக்க முடியவில்லை. பண மோசடி செய்துவிட்டதாக ஹெச்.ராஜா மீது சிவகங்கை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியபோது, புகார் சுமத்தியவர்கள் மீதேதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் எழுப்பிய புகாரின் உண்மைத்தன்மை என்ன? கேசவ விநாயகத்தின் விசாரணை அறிக்கை என்ன சொல்கிறது? என்பதே யாருக்கும் தெரியப்படுத்தப்படவில்லை. இந்த லாபியை உடைப்பது அண்ணாமலைக்கு இலகுவான வேலையல்ல. தமிழகம் முழுவதும் 12,526 கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கிராமங்களெல்லாம் கிளை அமைப்புகள் தொடங்கும்படி எல்.முருகனுக்கு டெல்லி அசைன்மெண்ட் கொடுத்திருந்தது. மூன்று கிராமங்களுக்கு ஒரு கொடிக்கம்பம் நடவும் அறிவுறுத்தியது. ஆனால், பெயருக்கு சில கொடிக்கம்பங்களை நட்டுவிட்டு, மொபைலில் போட்டோ எடுத்து டெல்லிக்கு அனுப்பிவிட்டனர் நிர்வாகிகள். கட்சியை கிராமப்புறங்களில் எல்.முருகனால் வளர்க்க முடியவில்லை. தற்போது அந்தப் பணியை அண்ணாமலை செய்தாக வேண்டும்.

அண்ணாமலை தமிழக பா.ஜ.க-வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள்ளாக பா.ஜ.க-வை அமைப்புரீதியாக பலப்படுத்தும் வேலையை சரியாகச் செய்யும்படி அண்ணாமலை அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். தி.மு.க-வுக்கு எதிர்ப்பு அரசியலை தீவிரமாக கையில் எடுக்கும்படியும் டெல்லி உத்தரவிட்டிருக்கிறது. ‘தி.மு.க-வுக்கு மாற்று சக்தி இனி பா.ஜ.க தான்’ என்பதே அண்ணாமலைக்கு அளிக்கப்பட்டிருக்கும் அஜெண்டா. அந்த அஜெண்டாவை அவர் முடித்துவிடாதபடி தடுக்க கட்சிக்குள்ளேயே ஆட்கள் இருக்கிறார்கள். மத்திய அமைச்சர் கனவில் மிதந்த கொங்கு மண்டல வி.ஐ.பி ஒருவர், மாநிலத் தலைவர் பதவிக்கு காய் நகர்த்திய இரண்டு எம்.எல்.ஏ-க்கள், கட்சிக்குள் தன்னுடையை இருப்பை விட்டுக் கொடுக்க விரும்பாத ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவர், தமிழக அரசியலுக்குள் நேரடியாக அதிகாரம் செலுத்த முடியாவிட்டாலும், தங்களுக்கென ஒரு லாபியை வைத்திருக்கும் மத்திய அரசின் பிரமுகர்கள் இருவர் என ஒரு பட்டாளமே அண்ணாமலைக்கு எதிராக கத்தியுடன் காத்திருக்கிறது. இவர்கள் எல்லோரையும் மீறித்தான், பா.ஜ.க-வின் அரசியலை அண்ணாமலை கையில் எடுத்தாக வேண்டும்” என்றார்.

அண்ணாமலை
அண்ணாமலை
நா.ராஜமுருகன்

பதவி கிடைத்துவிட்டாலும், அதை தக்கவைத்துக் கொள்ள அண்ணாமலை போராடத்தான் வேண்டியதிருக்கும் என்கிறது கமலாலய வட்டாரம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லி எதிர்பார்க்கும் கட்டமைப்பு வலுவாக்கும் ரிசல்ட்டை அண்ணாமலை கொடுத்துவிட்டால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவும் டெல்லி தயாராகிறதாம். ஒருவேளை சொதப்பிவிட்டால், மற்றொரு எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன் போல கவுரவமாக ஓரங்கட்டப்படலாம் என்கிறது பா.ஜ.க வட்டாரம்.

அடுத்த கட்டுரைக்கு