Published:Updated:

குடியுரிமை திருத்தச் சட்டம்... என்னென்ன தீர்வுகள் சாத்தியம்?

குடியுரிமை  திருத்தச் சட்டம் எதிர்ப்புப் போராட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்புப் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் இரு வகையான போராட்டங்களைக் கையில் எடுத்திருக்கிறார்கள. அதில் ஒன்று, வீதிப் போராட்டம் மற்றொன்று நீதிப் போராட்டம்.

பல்லாயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தொடர் முழக்கங்களும் தியாகங்களும் நிகழ்த்திய தேசம் இந்தியா. போராட்டங்கள் இந்தியாவின் இருப்போடு மிக நெருக்கமாகப் பின்னப்பட்ட ஒன்று. 72 ஆண்டுகால இந்திய வரலாற்றில், இந்தத் தேசம் எண்ணிலடங்கா போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது. பெரும்பாலும் அவை மாநிலப் போராட்டங்களாக, தம்மை நேரடியாகப் பாதிக்கும் அரசு முடிவுகளுக்கு எதிரான போராட்டங்களாகத்தான் இருந்திருக்கின்றன. உதாரணத்திற்கு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி, ஜல்லிக்கட்டு வரை சில வலிமையான வெற்றிகரமான போராட்டங்களைத் தமிழகம் சந்தித்திருக்கிறது. நிர்பயா சம்பவம், #Metoo இயக்கம் எனப் பெண்களின் பாதுகாப்பிற்கு ஆதரவாக தேசம் முழுவதும் மக்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

இப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், அமைப்பினர் என மட்டுமல்லாது ஒட்டுமொத்த தேசமும் ஒருசேரப் பொங்கியெழுந்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, இயற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு எதிராக அணிதிரளுவது அரிதானது. இதற்குமுன், 1990-ம் ஆண்டு மண்டல் கமிஷன் அறிக்கையின்படி இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு எதிராகத் தொடரப்பட்ட மக்கள் போராட்டம் விஸ்வரூபமெடுத்தது போல ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகள் தான் இருக்கின்றன. அதன் பிறகு, அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான இந்த எதிர்ப்புகள்தாம் அணையாத தீயாக இந்தியா முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நொடி கூட, பரந்த இந்திய தேசத்தின் ஏதோவொரு மூலையில், ஏதோவொரு போராளி Ban CAA என்ற பதாகையை ஏந்தியபடி போராடிக்கொண்டிருப்பார். வெறும் அரசியல் கட்சிகளின், சமூக ஆர்வலர்களின், குறிப்பிட்ட பிரிவினரின், அமைப்பினரின் போராட்டமாக இல்லாமல், திருமணங்களில்கூட மணமக்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் பதாகை ஏந்தும் மக்கள் போராட்டமாக இது வலுத்துள்ளது.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் கட்சியாக விளங்கும் பா.ஜ.க, தான் கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்திருத்தம், அரசுக்கு இவ்வளவு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று நினைத்துப்பார்க்கவில்லை. இந்தச் சட்டத்திற்கு இந்துக்களின் ஆதரவும், இஸ்லாமியர்களின் எதிர்ப்பும் இருக்கும் என்பதுதான் அவர்களின் கணக்கு. ஆனால், மாணவர்கள் இந்தப் போராட்டத்தைக் கையிலெடுப்பார்கள் என்பதை அவர்கள் கணிக்கவில்லை. அதனால்தான் இதுவரை தான் எடுத்த எந்த முடிவிலும் பின்வாங்காத அமித் ஷா, என்.ஆர்.சி இப்போது வராது என்று அவராகவே சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கமளிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Protest Against CAB
Protest Against CAB
AP Photo/Anupam Nath

சரி, நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இச்சட்டத்தினால் இந்தியக் குடிமக்களுக்கு பாதிப்பில்லை என்ற விளக்கங்களைத் தந்துவிட்டு, 144 தடை உத்தரவு, இணைய முடக்கம் எனப் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்களைப் பலப்படுத்திவிட்டு அரசும் அமைதிகாக்கிறது. இந்நிலையில், இந்தப் போராட்டத்திற்கான தீர்வுதான் என்ன... இதற்கான முடிவு எது? என்ற கேள்விகளுக்கு விடை தேடவேண்டியது அவசியமாகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் இரு வகையான போராட்டங்களைக் கையில் எடுத்திருக்கிறார்கள். அதில் ஒன்று வீதிப் போராட்டம் மற்றொன்று நீதிப் போராட்டம்.

வீதிப் போராட்டங்கள் ஓர் அரசியல் தீர்வைத் தரும் என்பதே மக்களின் நம்பிக்கை. மக்களின் உணர்வுகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மரியாதைகொடுத்து, அரசு இந்த சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெரும் என்பதே எதிர்பார்ப்பு. அதற்கு அரசு செய்யவேண்டியதெல்லாம், எந்த பெரும்பான்மையைக் கொண்டு இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்களோ, அதே பெரும்பான்மையைக் கொண்டு, அதே நடைமுறையைப் பின்பற்றி இந்த சட்டத்தைத் திரும்பப்பெறும், இந்த சட்டத்தைநீக்கும் (Repeal) மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதே.

Parliament of India
Parliament of India

ஆனால், நீதிப் போராட்டம் ஒரு சுற்று வட்டப் பாதை. வலுவான ஜனநாயக நாடாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தியாவில், சட்டத்தை இயற்றும் உரிமை நாடாளுமன்றத்திற்கும் அதைச் செயல்படுத்தும் உரிமை அரசு நிர்வாகத்திற்கும், அதைக் கேள்விகேட்டு ஆய்வுக்கு உட்படுத்தும் உரிமையும் சட்டத்தை நிலைநாட்டும் உரிமையும் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் கிடைக்கப்பெற்றால், அந்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி மக்கள் நீதிமன்றத்தை நாடலாம்.

ஆனால், அந்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், அதன் அடிப்படை அம்சத்திற்கும் எதிரானது என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும். கோலக்நாத் Vs ஸ்டேட் ஆஃப் பஞ்சாப், கேஷவ்னந்த பாரதி Vs ஸ்டேட் ஆஃப் கேரளா, மினர்வா மில்ஸ் Vs யூனியன் ஆஃப் இந்தியா போன்ற சில முக்கியமான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாட்டை நிலைநிறுத்துவது அவசியம் என்பதை உறுதிசெய்கின்றன.

இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், கீழ்க்காணும் சட்ட வரையறைகளை முன்வைக்கின்றன.

*அரசியலமைப்பின் பிரிவு 368-ன்படி, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்திருத்தமானது, அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாட்டைக் (Basic Structure) கெடுக்கும் விதமாகவோ, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளைக் குலைக்கும் விதமாகவோ இருந்தால் மட்டுமே அதை நீதி விசாரணைக்கு உட்படுத்த முடியும்.

* அரசியலமைப்புப் பிரிவு 31-C ன்படி, அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை (Directive Principles) செயல்படுத்துவதற்குக் கொண்டுவரப்படும் சட்டங்கள், அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாட்டைக் கெடுக்கும் விதமாக இருந்தால் மட்டுமே அதை நீதி விசாரணைக்கு உட்படுத்த முடியும்.

constitution
constitution
Vikatan

தற்போது, குடியுரிமைச் சட்டம் 1955ல் கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தமானது, அடிப்படை உரிமைகள் மற்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அம்சமான மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதிப்பதாகவே பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரின் இந்த மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்ததும், ஜனவரி மாதம் இந்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதேசமயம், சில மனுதாரர்களின் மனுக்களில், இந்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

`ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் யார்?!' - சசிகலா விளக்கத்தால் கொந்தளித்த ஜெ.தீபா

இந்த சட்டப்போராட்டம் குறித்து முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறுகையில்,

'' அரசியலமைப்புச் சட்டத்தில் சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை என்பது இன்றியமையாத அடிப்படைக் கோட்பாடு. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 5 - 11, குடியுரிமை பற்றிப் பேசுகிறது. அதிலும் 1955 குடியுரிமைச் சட்டத்திலும், அதற்குப் பிறகும் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் எதிலுமே மதம் அளவுகோலாக வைக்கப்படவில்லை. அடிப்படை உரிமைகளில் கல்வி வேலைவாய்ப்பு, பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ள இடத்தில் மட்டுமே குடிமக்கள் என்பது உள்ளது. ஆனால், சட்டத்தின் முன் அனைவரும் வாழ்வதற்கான சுதந்திரம், மதச் சுதந்திரம் என எங்குமே குடிமக்கள் எனக் குறிப்பிடவில்லை. இது, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுவானது'' என்றார்.

அரிபரந்தாமன்
அரிபரந்தாமன்

இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டாலும், பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, கடந்த வாரம் பெங்களூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், "இந்த சட்டத்திருத்தம், மூன்று நாடுகளில் 'ஒடுக்கப்பட்ட பிரிவு' மக்களுக்கு குடியுரிமை வழங்குவது பற்றிப் பேசுகிறதே தவிர , மத அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என இந்தச் சட்டம் கூறவில்லை. எனவே, இந்தச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல என்ற வாதங்கள் அரசு தரப்பில் முன்வைக்கப்படும். அரசு இந்த சட்டப் போராட்டத்தை வெல்லும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முக்கியமான சட்ட ஆளுமைகள்கூட, இந்தப் பிரச்னைக்கான தீர்வு... மக்கள் மன்றத்தில் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் இறையாண்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டும் என்ற முழக்கங்களோடு மக்கள் இந்தப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம் வெற்றிகண்டால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனப் போற்றப்படும் இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

அடுத்த கட்டுரைக்கு