Published:Updated:

என்ன செய்கிறார்கள் சசிகலா சொந்தங்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
என்ன செய்கிறார்கள் சசிகலா சொந்தங்கள்?
என்ன செய்கிறார்கள் சசிகலா சொந்தங்கள்?

- ரஸ்ஸல்

பிரீமியம் ஸ்டோரி
சசிகலா சிறையிலிருந்து எந்த நேரத்திலும் வெளியே வந்துவிடக்கூடும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது நிழலாகவும், ஜெ மறைவுக்குப் பிறகு நேரடியாகவும் அரசியல் அதிரடிகளை நிகழ்த்திய சசிகலாவின் சொந்தங்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?

‘நம்பிக்கை’ தினகரன்!

அ.ம.மு.க கட்சியை நடத்திவரும் தினகரன், சசிகலாவுடன் மோதல் போக்கைத் தொடங்கிவிட்டதாகச் செய்திகள் கிளம்பின.

ஆனால், தன் ரத்த உறவான `சின்னம்மா’வின் நம்பிக்கையைக் கட்டிக் காப்பாற்றிவைத்திருக்கிறார் தினகரன். அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதா, அ.ம.மு.க-வைத் தொடர்வதா என்ற குழப்பத்திலிருக்கும் தினகரன், பா.ஜ.க-வின் அன்பைப் பெற்று, காரியம் சாதிக்கக் காத்திருக்கிறார் என்பதே லேட்டஸ்ட் தகவல். சிறையிலிருந்து வந்ததும் சசிகலா, தான் சொல்வதைத்தான் கேட்பார் என்பது தினகரனின் அசைக்க முடியாத நம்பிக்கை.

தினகரன் - வெங்கடேஷ் - திவாகரன்
தினகரன் - வெங்கடேஷ் - திவாகரன்

‘கம்பெனி’ கிடைக்காத டாக்டர்!

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகனான வெங்கடேஷை, சொந்த மைத்துனரான தினகரனே கட்டம்கட்டிவைத்திருக்கிறார். கட்சிப் பொறுப்பு வழங்காவிட்டாலும், `கம்பெனி’ பொறுப்புகளையாவது வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தார் வெங்கடேஷ். கடைசி வரை கிடைக்கவில்லை சசியின் கருணை. பெங்களூரு பயணத்தை நிறுத்திவிட்டு அமைதிகாக்கிறார் வெங்கடேஷ்.

‘பசை’ திவாகரன்!

தினகரனுடன் மோதியதால் கட்டம்கட்டப்பட்டவர் சசிகலாவின் தம்பி திவாகரன். ‘அக்கா வெளியே வந்ததும், நிச்சயம் என்னை அழைத்துப் பேசுவார். தினகரனை முன்னிறுத்தியது தவறு என்பதை அக்கா உணர்ந்துவிட்டார். அடுத்து என்னைத்தான் முன்னிறுத்துவார்’ என்று சொல்லிவருகிறார் திவாகரன். ஆனால், இடைப்பட்ட காலத்தில் முதல்வர் பழனிசாமியுடன் `பசை’யாக ஒட்டிக்கொண்ட விவகாரங்களையெல்லாம் சசியிடம் ஆதாரபூர்வமாகப் போட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறது தினகரன் டீம்! இதனால், திவாகரனின் பப்பு எந்த அளவுக்கு வேகும் என்று தெரியவில்லை!

சசிகலா
சசிகலா

‘டார்கெட்’ விவேக்!

சசிகலாவின் அண்ணன் மறைந்த ஜெயராமனின் மகன் விவேக். ஜாஸ் சினிமாஸ், ஜெயா டி.வி ஆகிய நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் விவேக் ஜெயராமன் மீது பெரிய புகார் பட்டியலையே வாசிக்கிறார்கள் மன்னார்குடி உறவினர்கள். `இப்போதும் அதிகாரவர்க்கத்தை ஆட்டிப்படைக்கும் சக்தியாக விவேக் விளங்குகிறார்’ என்கிறது கோட்டைத் தரப்பு. `ஆட்சியாளர்களுடன் தொடர்பிலிருக்கிறார்’ என்கிறது தினகரன் தரப்பு. தினகரன், திவாகரன், வெங்கடேஷ் என மன்னார்குடியின் மும்முனைச் சொந்தங்களுக்கும் விவேக்கை வீழ்த்துவதுதான் ஒரே டார்கெட். ‘சசிகலா வெளியே வந்ததும், விவேக் நிச்சயம் வீட்டுக்கு அனுப்பப்படுவார்’ என்கிறார்கள் உறுதியாக. இதையெல்லாம் பொருட்படுத்தாமல், சசிகலாவை வெளியே கொண்டுவரும் சட்ட நடவடிக்கைகளில் தீவிரமாகியிருக்கிறார் விவேக்.

‘ஆஃப்லைன்’ சிவகுமார்!

தினகரனின் சகலையான டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அப்படியே அமைதியாகிவிட்டார். ஜெ-யின் மரணம் இவரை ரொம்பவே பாதித்திருப்பதாகச் சொல்கிறார்கள் உறவினர்கள். அதனாலேயே இவர் பெங்களூரு சென்று சசிகலாவைச் சந்திக்கவில்லையாம். அரசியல், சொந்தம் என எந்தப் பரபரப்பு வளையத்திலும் இல்லாமல் ஒதுங்கியிருக்கிறார் சிவக்குமார்.

டாக்டர் சிவக்குமார் - விவேக் - கிருஷ்ணப்ரியா - பழனிவேல்
டாக்டர் சிவக்குமார் - விவேக் - கிருஷ்ணப்ரியா - பழனிவேல்

‘ஆக்‌ரோஷ’ ப்ரியா!

இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்ரியா. சசிகலா சொந்தங்களிலேயே அரசியல் நெளிவுசுளிவு தெரிந்த ஆளுமை. ஜெயலலிதா மறைவின்போது சசிகலாவின் நிழலாக நின்று இறுதி மரியாதையை கவனித்தவர். ஆர்.கே.நகர் தேர்தலுக்காக, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் வெளியிட அவருடன் ஆக்ரோஷமாக மோதினார் கிருஷ்ணப்ரியா. கடுப்பான தினகரன் நிறைய விஷயங்களைப் போட்டுக்கொடுத்து, சசிகலாவிடம் கிருஷ்ணப்ரியா நெருங்க முடியாதபடி செய்துவிட்டார். சசிகலா வெளியே வரும்போது கிருஷ்ணப்ரியாவுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார் தினகரன்.

‘சட்டம்’ பழனிவேல்

எம்.நடராஜனின் அண்ணன் பழனிவேல்தான் சசிகலாவின் கம்பெனி நிலவரங்களை கவனித்துக்கொள்கிறார். சசிகலாவை வெளியே கொண்டு வரும் நடவடிக்கையிலும் தன் சகோதரர் ராமச்சந்திரனுடன் கைகோத்து சட்ட நடவடிக்கை களை மேற்கொண்டுவருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு