Published:Updated:

சூடுபிடிக்கும் அணுக்கழிவு விவகாரம்; என்ன செய்ய வேண்டும் அரசு?

அணுக்கழிவுகளை கூடங்குளம் அணு உலைக்கு அருகிலேயே சேமித்து வைக்க அமைப்பு உருவாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரான சபாநாயகர் அப்பாவு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரஷ்யாவின் உதவியுடன் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகள் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி கட்டப்பட்டு, திறக்கப்பட்டு, மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேவேளையில், மூன்று மற்றும் நான்காவது அணு உலைகள் தற்போது கட்டப்பட்டுவருகிறது. இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் 3 மற்றும் 4 அணுவுலைகள் செயல்படத் தொடங்கியதும் அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே சேமித்து வைப்பதற்கான இடத்தேர்வு அனுமதியை (Siting Clearance) வழங்கியுள்ளது. இதற்கு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதால், விவகாரம் சூடுபிடித்துவிட்டது.

அனுமதி சுற்றறிக்கை
அனுமதி சுற்றறிக்கை

இதுபற்றி கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடி வருபவரும், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவருமான சுப.உதயகுமாரினடம் பேசினோம். ``அணுக்கழிவுகளை அணு மின்சாரம் தயாரிக்கப்படும் ரியாக்டருக்குள்ளேயே சேமித்து வைக்க ’எரிகோள் சேமிப்பு தேக்கம்’ என்ற அமைப்பு இருக்கிறது. அதில் அணுக்கழிவுகள் 7 ஆண்டுகள் வரை இருக்கும். அதன்பிறகு இடமாற்றியாக வேண்டும். அதையும் ரியாக்டரில் இருந்து தள்ளி இருக்கும்படி அமைத்திட வேண்டும். அதற்காகத்தான் ‘அவே ஃப்ரம் ரியாக்டர்’ என்கிற பெயரில் 538 கோடி மதிப்பீட்டில் 4328 டன் அளவுக்கு எரிகோள்களை சேமிக்கும் அமைப்பினை கட்டவிருக்கிறார்கள். 2022 மே மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் இதற்கானப் பணிகளை மேற்கொள்ள கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி ‘சைட்டிங் கிளியரன்ஸ்’ கொடுத்தது.

சுப. உதயகுமாரன்
சுப. உதயகுமாரன்

ஆனால், என்ன வேடிக்கை என்றால் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைக்கே இன்னும் ‘அவே ஃப்ரம் ரியாக்டர்’ அமைப்பு கட்டமைக்கப்படவில்லை. அதற்குள்ளாக அடுத்தடுத்த அணு உலைக்கு சென்றுவிட்டனர். கூடங்குளம் மொத்தமே 13.5 கிலோமீட்டர் சுற்றளவுதான் கொண்டது. இதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய 6 அணு உலைகள் அமைகிறது. இதிலிருந்து வெளிவரும் அணுக்கழிவுகளுக்கு டீசாலினேஷன் பிளான்ட், மறுசுழறிசி பிளான்ட் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அணுக்கழிவுகளை பொதுமக்கள் பாதிக்காத வகையில் அப்புறப்படுத்த டி.ஜி.ஆர் எனப்படும் ஆள்நில கருவூலத்தைக் கண்டுபிடித்து அங்கு கொண்டு சென்றுவிடவேண்டும். இல்லையெனில், செர்னோபில், ஹிரோஷிமா போன்றவற்றின் வரிசையில் தமிழகத்தின் கூடங்குளமும் இணைந்துவிடும்” என்றார்.

பொறியாளர் சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்
பொறியாளர் சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனிடம் பேசியபோது, “கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் ஏற்கனெவே 100க்கும் மேற்பட்ட முறை உற்பத்தி நிறுத்தப்பட்டு மோசமான முறையில் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணுவுலைகள் இயங்கி வருகின்றன. அதே வளாகத்திற்குள் தற்போது மேலும் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நான்கு அணுவுலைகள் அமைக்கும் பணியை தேசிய அணுமின் சக்திக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 3 மற்றும் 4 அணுவுலைகள் செயல்படத் தொடங்கியதும் அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே சேமித்து வைப்பதற்கான இடத்தேர்வு அனுமதியை (Siting Clearance) வழங்கியுள்ளது.

நிரந்தரமாக கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகள் அனைத்தையும் அதே வளாகத்திற்குள் சேமித்து வைத்து விடுவார்களோ என்கிற நெடுநாள் அச்சத்தை உறுதிபடுத்தும் விதமாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 15 நிபந்தனைகளைக் கூறி உலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான (away from reactor) வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் மற்றும் நிரந்தரமாக அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான ஆழ் நில கழிவு மையம் (Deep Geological Repository) உருவாக்க வேண்டும் என்பதாகும்.

கூடங்குளம் அணுமின் நிலையம்
கூடங்குளம் அணுமின் நிலையம்
கூடங்குளம் அணு உலை வளாகம் அருகே கல் குவாரி; அனுமதியை ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை!

5 ஆண்டு கால அவகாசம் 2018 மார்ச் மாதமே முடிந்த நிலையில் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதம் இந்திய அணுமின் சக்தி கழகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த AFR கட்டமைப்பதில் உள்ள தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில் அதை அமைப்பதில் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். அதனால்தான் மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் வேண்டும் எனக் கூறியிருந்தது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் 2022வரைக்கும் கால அவகாசம் அளித்திருந்தது.

முதல் இரண்டு உலைகளின் கழிவுகளை சேமித்து வைப்பதற்கான AFR மையத்தை அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 2019ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், இத்திட்டத்திற்கு கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாள் குறிப்பிடாமல் பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.

இதற்கிடையே திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்திருந்த அணுசக்தித் துறை இந்தியாவில் அணுக் கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்கும் ஆழ்நில கழிவு மையம் அமைப்பதற்கான அவசியம் தற்போது எழவில்லை எனத் தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு முற்றிலும் எதிரான இந்த நிலைப்பாடு கூடங்குளத்தில் உருவாக்கப்படும் கழிவுகள் அனைத்தும் நிரந்தரமாக அந்த வளாகத்திற்குள்ளாகவே வைக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சத்தை உண்டாக்குகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நிரந்தரமாக அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைக்கும் இடத்தை கண்டறியும் வரை கூடங்குளம் அணுவுலையிலிருந்து மேற்கொண்டு மின்னுற்பத்தி செய்யக் கூடாது மற்றும் தற்போது நடந்து வரும் நான்கு உலைகள் அமைக்கும் பணிகளையும் நிறுத்த வேண்டி ஒன்றிய அரசை தமிழ் நாடு அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் வலியுறுத்த வேண்டும்” என்றார்.

தமிழக அரசின் கருத்தறிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனைத் தொடர்புகொண்டபோதும் பிடிக்க முடியவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு