Published:Updated:

வேலூர்: `செய்ததை பட்டியலிடும் நிலையில் நான் இல்லை!’ - எம்.பி ஆன ஓராண்டு குறித்து கதிர் ஆனந்த்

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

``இந்த ஓராண்டில் என்ன செய்தேன் என்பது குறித்து பட்டியலிடும் நிலையில் நான் இல்லை. அனைத்து நலத்திட்டப் பணிகளும் தடைபடுகிற அளவுக்கு இரும்புத்திரையை அமைத்திருக்கிறது கொரோனா’’ என்கிறார் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த்.

வேலூர் எம்.பி-யாக ஓராண்டை நிறைவுசெய்திருக்கிறார் தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். ``வேலூர் மக்களுக்காகத் தாயுள்ளத்தோடு பணியாற்றுவேன்’’ என்று உறுதியளித்துவிட்டு நாடாளுமன்றம் சென்ற கதிர் ஆனந்த் இந்த ஓராண்டில் என்னவெல்லாம் செய்திருக்கிறார்?

தந்தை துரைமுருகனுடன் கதிர் ஆனந்த்
தந்தை துரைமுருகனுடன் கதிர் ஆனந்த்

‘‘குடியாத்தம் நகருக்குள் அவுட்டர் ரிங்ரோடு அமைக்கப்படும். அதே குடியாத்தத்தில் கைத்தறி பூங்காவும் கொண்டுவரப்படும். வேலூர் மாவட்டத்தில் இரண்டாவது சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் வேலூரின் அனைத்து கிராமங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். பொதுமக்கள் அடமானம் வைத்திருக்கும் நகைகள் வட்டியில்லாமல் மீட்டுத்தரப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் கட்சிப்பாகுபாடின்றி முதியோர் உதவித்தொகை பெற்றுத்தரப்படும். அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வாணியம்பாடி நியூடவுன் பிரிட்ஜ் கட்டுமானப் பணித் தொடங்கப்படும். அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்கப்படும்.

மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மின்சார வசதிகள், சாலை வசதிகள், கழிவுநீர் கால்வாய் சீரமைப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படும். அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் விவசாயிகளின் விளைபொருள்களைப் பாதுகாக்க பெரிய அளவிலான குளிர்ப்பதனக் கிடங்கு ஏற்படுத்தப்படும். அணைக்கட்டு மேல் அரசம்பட்டில் அணை கட்டப்படும். குடியாத்தம் நகரின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். மோர்தானா அணையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதியை மேம்படுத்தும் வகையில் செல்போன் கோபுரங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

பிரசாரத்தின்போது ஸ்டாலினுடன்...
பிரசாரத்தின்போது ஸ்டாலினுடன்...

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் பீடி, தீப்பெட்டி மற்றும் நெசவுத் தொழிலாளர்களுக்காகப் படுக்கை வசதியுடன்கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்கப்படும். குடியாத்தம் மலைக் கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேலிகள் பொருத்தப்படும்’’ என்று தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதிகளை அள்ளிவீசினார் கதிர் ஆனந்த்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், மேற்கண்ட வாக்குறுதிகள் தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்து எம்.பி கதிர் ஆனந்திடமே கேள்வி எழுப்பினோம். ‘‘நான் என்ன சொன்னேன், இப்போது என்ன நடக்கிறது என்று நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடுமையான சூழலை கொரோனா உருவாக்கியிருக்கிறது. நான் பார்லிமென்ட்டுக்குப் போய் பொறுப்பேற்ற முதல் சீஸனில்தான் கொரோனா வந்து எல்லாப் பணிகளையும் முடக்கிடுச்சி. ஆனாலும், வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வலியுறுத்தியிருக்கிறேன். அந்தப் பள்ளிக்கான நிலத்தையும் மாநில அரசு ஒதுக்கியிருக்கிறது.

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

குடியாத்தத்தில் அவுட்டர் ரிங்ரோடு பணிகளுக்கான டெண்டரும் விடப்பட்டு பணிகளும் தொடங்கியிருக்கின்றன. இந்த ஓராண்டில் என்ன செய்தேன் என்பதுகுறித்து பட்டியலிடும் நிலையில் நான் இல்லை. அனைத்து நலத்திட்டப் பணிகளும் தடைபடுகிற அளவுக்கு இரும்புத்திரையை அமைத்திருக்கிறது கொரோனா. முதலில் இந்த நோயில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதே எங்களுடைய தலையாய கடமை. மத்திய சர்க்காரும் மாநில சர்க்காரும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில்தான் தீவிரம் காட்டுகின்றன. நிச்சயமாக நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் வேலூர் மக்களுக்காகத் தாயுள்ளதோடு பணியாற்றுவேன். கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளேன்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு