Published:Updated:

``ஆய்வறிக்கை கொடுத்தாச்சு” - என்ன செய்யப்போகிறார் தி.மு.க தலைவர்?

அ.சையது அபுதாஹிர்

ஒவ்வொரு முறை குழு அமைக்கும்போதும், அந்தக் குழுவின் அறிக்கையை வாங்கி வைத்துக்கொண்டு அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் கட்சியின் கட்டமைப்பு எப்படி மேம்படும்?

தி.மு.க தலைமை அறிவிப்பு
தி.மு.க தலைமை அறிவிப்பு

தேர்தலில் தோல்வியடைந்தால், அந்தத் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய ஆய்வுக்குழு அமைப்பது தி.மு.க-வில் வழக்கம். ஒவ்வொரு முறையும் இதுகுறித்து அந்தக் குழுக்கள் ஆய்வுசெய்து கட்சித் தலைமைக்கு அறிக்கை அளிக்கும். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க அடைந்த படுதோல்விக்குப் பிறகு, குழு ஒன்று அமைக்கப்பட்டது. பின், அந்தக் குழு தோல்வி குறித்த அறிக்கையைத் தி.மு.க தலைமையிடம் கொடுத்தது. அதனடிப்படையில், சில மாற்றங்களை மட்டும் தி.மு.க தலைமை செய்தது. அக்குழு சொன்ன பெரும்பாலான கருத்துகளைப் புறம்தள்ளியது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்நிலையில், நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் தி.மு.க தோல்வியைத் தழுவியது. தமிழகம் முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிரான அலையும் அ.தி.மு.க-வுக்கு எதிரான மக்களின் மனநிலையும் பிரதிபலித்த இந்தத் தேர்தலில், ஒன்பது தொகுதிகளில் தி.மு.க-வின் தோல்வியால் அ.தி.மு.க ஆட்சி காப்பாற்றப்பட்டது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் தி.மு.க அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றபோதும், அந்த நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வியைத் தழுவியது. இது, தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க தரப்புடன், தி.மு.க லோக்கல் நிர்வாகிகள் சமரசம் செய்துகொண்டதே இந்தத் தோல்விக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.

இதனால் இந்த ஒன்பது தொகுதிகளின் தோல்வி குறித்து ஆராய எட்டுப் பேர் கொண்ட குழுவை, கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி தலைமைக் கழகம் அறிவித்தது. இந்தக் குழுவில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் நான்கு வழக்கறிஞர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழு, சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்தது. அதன்படி, அக்குழு ஆய்வுசெய்த அறிக்கையை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தலைமைக் கழகத்தில் ஒப்படைத்தது.

ஸ்டாலின் - எ.வ.வேலு
ஸ்டாலின் - எ.வ.வேலு

ஆனால், அந்த அறிக்கைமீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற புகைச்சல் ஒருபுறம் எழுந்துள்ளது. மறுபுறம், இந்த அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று குழுவில் இடம்பெற்றவர்களிடம் விசாரித்தபோது, “ஒன்பது தொகுதிகளிலும் தி.மு.க-வினர் செய்த சில குளறுபடிகளே தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது. அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி தொகுதிகளின் தோல்விக்கு, அங்கு தேர்தல் பொறுப்பாளராக இருந்த வேலுவின்மீது சில விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். கடைசிநேரத்தில் முல்லைவேந்தனை வெளியேறச் செய்ததும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல், விளாத்திகுளம் தொகுதியில் அடைந்த படுதோல்விக்கு அந்த மாவட்டச் செயலாளர் கீதாஜீவன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாத்தூர் தொகுதியைக் கோட்டைவிட்டதற்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர் சரியாகக் கவனம் செலுத்தாமல் போனதும் காரணம் என்று தெரியவந்துள்ளது. இதைத் தாண்டி வேறுசில விவகாரங்களையும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தோம்” என்றனர்.

இந்த அறிக்கைமீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க தலைமை ஏற்கெனவே சொல்லியிருந்தது. ஆனால், அறிக்கையில் தி.மு.க தலைவருக்கு நெருக்கமானவர்கள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளதால், இந்த அறிக்கைமீது என்ன நடவடிக்கை இருக்கும் என தி.மு.க நிர்வாகிகள் எதிர்பார்த்தனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆனால் தி.மு.க தலைமையோ, 'வேலூர் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, தேர்தல் முடிந்த பிறகு இந்த அறிக்கை குறித்து விவாதிக்கலாம்' என்று அறிக்கையை அலுவலகத்தில் கட்டிவைத்துவிட்டார்கள் என்கிறார்கள். "ஒவ்வொரு முறையும் குழு அமைப்பதும், அந்தக் குழுவின் அறிக்கையை வாங்கி வைத்துக்கொண்டு அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் கட்சியின் கட்டமைப்பு எப்படி மேம்படும்? வாய்ப்புகளைத் தொடர்ந்து தவறவிட இதுவும் ஒரு காரணமாகிவிடும் என்பது தலைவருக்குத் தெரியாதா" என்று புலம்புகிறார்கள் சில நிர்வாகிகள்.