Published:Updated:

`காந்தி தியாகி.. கோட்சே தேசபக்தர்!’- காந்தியின் மரணம் உணர்த்தும் செய்தி என்ன? #Bapuji

மகாத்மா காந்தி
News
மகாத்மா காந்தி

காந்தி, ராம பக்தர்; எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என விரும்பியவர். காந்தி தேசத்தில் ராமரின் பெயரால் ரத யாத்திரைகள் நடத்தப்பட்டு, மக்களின் ரத்தத்தால் அரியணைகள் கழுவப்பட்டன; 'ஜெய் ஸ்ரீராம்' கூற வற்புறுத்தப்பட்டு, சிறுபான்மையினர் கொடூரமாகத் தாக்கப்படுகின்றனர்.

ஜனவரி 30, 1948. டெல்லி பிர்லா ஹவுஸ். மாலை 5 மணிக்கு கூட்டு வழிபாடு நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கூடியிருந்தவர்கள் அனைவரும் தங்கள் நேசத்திற்குரிய மகாத்மா காந்திக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். 10 நாள்களுக்கு முன்புதான், மகாத்மா காந்தி இருந்த பிர்லா ஹவுஸில் குண்டு வெடிப்பு தடுக்கப்பட்டிருந்தது. எனினும், போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்தது பிர்லா ஹவுஸ். வழக்கமான கூட்டம் இல்லை என்றபோதும், பலரும் காந்தியைப் பார்க்க வந்திருந்தார்கள். பள்ளிக் குழந்தைகள், துப்புரவுப் பணியாளர்கள், ராணுவ வீரர்கள், தொழிலதிபர்கள், சாமியார்கள், காந்தியின் படங்களை விற்பவர்கள் முதலானோரால் நிரம்பியிருந்த அந்தக் கூட்டத்திற்குள், சற்று தாமதமாக நுழைகிறார் காந்தி.

"காந்திஜி, நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள்!" என்று கூட்டத்தில் இருந்து காந்தியை நோக்கிக் கூறுகிறார் ஒருவர். அவரைத் திரும்பிப்பார்க்கும் காந்தி, தனது நடையை இன்னும் வேகமாகத் தொடர்கிறார். பிர்லா ஹவுஸின் புல்தரையைத் தாண்டிய பிறகு, படிகளில் ஏறும் காந்தியை ஒருவன் மறிக்கிறான். சுமார் 30 வயது மதிக்கத்தக்கவன், காக்கி உடை அணிந்திருக்கிறான். காந்தி வரும் பாதையில் நிற்கும் அவன், காந்தியை நோக்கி தனது கைத்துப்பாக்கியால் சுடுகிறான். காந்தி கீழே விழுகிறார்.

காந்தியின் இறுதி நாள்கள்
காந்தியின் இறுதி நாள்கள்
Henri Cartier-Bresson/Magnum Photos

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த ஒரு நொடியில் என்ன நிகழ்ந்தது என்பதை யாராலும் உணர முடியவில்லை. அமெரிக்க இளைஞன் ஒருவன் கூட்டத்தில் இருந்து ஓடிவந்து, காந்தியைச் சுட்டவனை மடக்கிப் பிடிக்கிறான். நான்கைந்து பேர் ஓடிச்சென்று, கீழே விழுந்துகிடக்கும் காந்தியைத் தூக்குகின்றனர். காந்தியை நோக்கி சுட்டவனை மற்றவர்கள் தாக்க முற்பட, அவனைக் காப்பாற்றி அழைத்துச் செல்கின்றனர் சிலர். சுடப்பட்ட காந்தி மரணமடைகிறார்.

காந்தியைக் கொன்ற அந்த காக்கி உடை அணிந்தவனின் பெயர், நாதுராம் கோட்சே. ஒன்றரை ஆண்டுகள் கழித்து, நாதுராம் கோட்சேவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

72 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2020-ம் ஆண்டின் ஜனவரி 5, காந்தி பிறந்த குஜராத்தில், காந்தியின் சிலை உடைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. காந்தி பிறந்த அதே குஜராத்தில் பிறந்து, அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்து, தற்போது இந்தியாவுக்கு இரண்டு முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், நரேந்திர மோடி. பிரதமர் மோடி சார்ந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக, போபால் தொகுதியில் நிறுத்தப்பட்டார் சாத்வி பிரக்யா தாகூர்.

காந்தி கொலை வழக்கு விசாரணை
காந்தி கொலை வழக்கு விசாரணை

தேர்தல் பிரசாரத்திலேயே, காந்தியைக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று கூறினார் பிரக்யா. கடும் எதிர்ப்புகளைச் சந்தித்த பிறகும், அவர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை. பிரக்யா தாகூர், நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மீண்டும் ஒருமுறை கோட்சேவை தேசபக்தர் என்று வாதாடினார். குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா தாகூருக்கு, தேசத் தந்தையைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தவன் தேசபக்தராக இருப்பது ஆச்சர்யமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரக்யா தாகூர், கோட்சேவுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், பிரதமர் மோடி தான் செல்லும் இடமெல்லாம் காந்தியின் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கிறார். தற்போது, நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராக அந்த சட்டத்திருத்தம் இருப்பதாக, போராடும் மக்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதை விரும்பியவர் காந்தி. இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கையை ஆதரித்த ஒரே காரணத்திற்காக, பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முக்கியத் தலைவரும் அவரே.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேசும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதலானோர், காந்தியின் கனவை நிறைவேற்றுவதாகக் கூறிவருகின்றனர். கடந்த மாதம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவுக்கு அண்டைநாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான தாக்குதல்களுக்கு உள்ளான மக்களுக்குக் குடியுரிமை வழங்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. இது, எனது சிந்தனையில் தோன்றிய சட்டம் அல்ல. திடீரென ஒரு நாள், எனது சிந்தனையில் இப்படியொன்று தோன்றி, அதை மறுநாள் நான் சட்டமாக நிறைவேற்றிவிடவில்லை. இது, மகாத்மா காந்தியின் சிந்தனையில் தோன்றிய ஒன்று. காந்தியின் பெயரால் நாட்டின் நிலைமையை விமர்சிப்பவர்களும், காந்தியின் பெயரைத் தங்கள் பெயருக்குப் பின் போட்டுக்கொண்டிருப்பவர்களும் இதை உணர வேண்டும். பாகிஸ்தானில் வாழும் இந்துக்களும், சீக்கியர்களும் எப்போது வேண்டுமானாலும் இந்தியா வரலாம் என்பதை காந்தி வலியுறுத்தியிருக்கிறார். ஆக, இதை நான் மட்டும் கூறவில்லை; காந்தியே கூறியிருக்கிறார்" என்றார்.

உண்மையில், இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவுக்கு வரலாம் என்று காந்தி கூறியபோது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருபக்கமும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்தபடி இருந்தன. இந்தியாவின் முஸ்லிம்களுக்காகவும், பாகிஸ்தானின் இந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோருக்காகவும் தொடர்ந்து தன் குரலை உயர்த்தியபடி இருந்தார் காந்தி.

இந்த நாட்டில் பெரும்பான்மையை மட்டும் மதிக்க வேண்டும் எனவும், சிறுபான்மையினரை நசுக்க வேண்டும் எனவும் இங்கிருக்கும் யாரும் கூற முடியாது. முஸ்லிம்களை வெளியேறச் சொல்பவர்கள் டெல்லியின் முதல் எதிரிகள்; இந்தியாவின் முதல் எதிரிகள்!"
மகாத்மா காந்தி
காந்தியின் இறுதி நாள்கள்
காந்தியின் இறுதி நாள்கள்
H.CARTIER BRESSON/MAGNUM PHOTOS

தான் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக, 1948-ம் ஆண்டு, ஜனவரி 13 அன்று டெல்லியில் பேசிய காந்தி, "டெல்லி இந்தியாவின் தலைநகர். டெல்லியை, இந்தியாவை, வெறும் இந்துக்களின், சீக்கியர்களின் நாடு என்று கூறுவோர் முட்டாள்களே தவிர வேறொன்றும் இல்லை. இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகிய அனைவரும், இந்த நாட்டின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, கராச்சி முதல் அஸ்ஸாமின் திப்ருகர் வரை வாழ்பவர்கள், இந்த நாட்டைத் தங்கள் தாய்நாடாக ஏற்றுக் கொண்டவர்கள். அனைவருக்கும் இந்த நாட்டின்மீது உரிமை உண்டு. இந்த நாட்டில் பெரும்பான்மையை மட்டும் மதிக்க வேண்டும் எனவும், சிறுபான்மையினரை நசுக்க வேண்டும் எனவும் இங்கிருக்கும் யாரும் கூற முடியாது. முஸ்லிம்களை வெளியேறச் சொல்பவர்கள், டெல்லியின் முதல் எதிரிகள்; இந்தியாவின் முதல் எதிரிகள்!" என்றார். இதுதான் காந்தி வெளிப்படுத்திய மதச் சார்பின்மை. இதற்காகத்தான் அவருக்கு மூன்று தோட்டாக்கள் பரிசாக அளிக்கப்பட்டன.

காந்தியின் அகிம்சை, மதச் சார்பின்மை ஆகிய தத்துவங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தற்போது 'தூய்மை இந்தியாவின் தூதுவராக' சுருக்கப்பட்டுள்ளார் காந்தி. அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, இந்தியாவுக்கு 'காந்தி தேசம்' எனப் பெயரிட வேண்டும் என வலியுறுத்தினார் தந்தை பெரியார். காந்தியின் சனாதன ஆதரவைத் தன் அரசியல் வாழ்க்கை முழுவதும் கடுமையாக எதிர்த்த பெரியார், அவரது மரணத்தின் போது துக்கம் கடைபிடித்தார்; காந்தியைக் கொன்ற மதவெறியைக் கண்டித்துப் பிரசாரம் செய்தார்.

காந்தி இறுதிச்சடங்கு
காந்தி இறுதிச்சடங்கு
HENRI CARTIER BRESSON /MAGNUM PHOTOS

பெரியார் பெயர் சூட்ட விரும்பிய 'காந்தி தேசம்', தற்போது வேறொரு பரிமாணத்திற்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. டாடா, பிர்லா முதலான இந்திய முதலாளிகளை ஆதரித்தார் காந்தி; காந்தியின் அரசியல் வாரிசுகள், இந்தியாவின் கதவைத் தாராளமயத்திற்காகத் திறந்துவிட்டனர். கல்வி, மருத்துவம் முதலானவை வசதியில்லாத ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிக்கொண்டேவருகின்றன. காந்தி, உயிர்களின் மீதான நேசத்தால் புலால் உண்ணாமையைக் கடைபிடித்தார்; காந்தி தேசத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக, அவர் பிறந்த குஜராத்திலேயே தலித்துகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்; காந்தி தேசத்தில் மாட்டுக்கறி வைத்திருக்கிறார்கள் என்று கூறி, சிறுபான்மையினர் பசு குண்டர்களால் கும்பல் படுகொலை செய்யப்பட்டுவருகின்றனர்.

காந்தி, ராம பக்தர்; எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என விரும்பியவர். காந்தி தேசத்தில் ராமரின் பெயரால் ரத யாத்திரைகள் நடத்தப்பட்டு, மக்களின் ரத்தத்தால் அரியணைகள் கழுவப்பட்டன; 'ஜெய் ஸ்ரீராம்' கூற வற்புறுத்தப்பட்டு, சிறுபான்மையினர் கொடூரமாகத் தாக்கப்படுகின்றனர். சாதி ஒழிப்பு விவகாரங்களில் அம்பேத்கரோடு முரண்பட்ட காந்தி, தான் ஆதரவாக இருந்த மதத்தின் வெறிக்குப் பலியானார். காந்தி தேசத்தில் அம்பேத்கர் முன்வைத்த சாதி குறித்த கேள்விகளுக்கு, எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை. காந்தி தேசத்தில் நாள்தோறும் தலித்துகள் சாதி ஆதிக்கத்தால் வன்முறைக்குள்ளாகிவருகின்றனர். சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிவருகிறது. பெண்கள் அச்சத்தோடு வாழும் சூழல் பெருகிவருகிறது.

காந்தியின் அஸ்தி
காந்தியின் அஸ்தி
H.CARTIER BRESSON/MAGNUM PHOTOS

காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தின் போதாமைகள், அவர் வாழ்ந்த காலத்திலேயே இருந்தன. இரண்டாம் உலகப் போரில், ஹிட்லரின் நாஜிப் படைகளால் கொல்லப்பட்ட யூதர்கள், காந்தியின் காலத்திலேயே அவரைத் தொடர்புகொண்டனர். நாஜிகளிடமிருந்து தப்பித்த யூத அறிஞர் மார்ட்டின் பூபெர், நாஜிகளின் இனப் படுகொலையை அகிம்சையைக்கொண்டு எதிர்ப்பது எப்படி எனக் கேட்டு, 1938-ம் ஆண்டு காந்திக்குக் கடிதம் எழுதினார். இறுதிவரை காந்தியிடமிருந்து அந்தக் கடிதத்திற்கு எந்தப் பதிலும் வரவில்லை. யூதர்கள் காந்தியை நாடிய அதே வேளையில், காந்தியைக் கொன்றவர்கள் நாஜித்தலைவர் ஹிட்லரையும், பாசிஸ்ட்டுகளின் தலைவர் முசோலினியையும் தங்கள் ஆதர்சமாக ஏற்றுப் பின்தொடரத் தொடங்கியிருந்தனர். காந்தியின் படுகொலையும், தற்போதைய அரசியல் சூழலும் அன்று நடந்த சம்பவங்களின் நீட்சிதாம்.

காந்தியின் மரண நாள், 'தியாகிகளின் தினம்' என அனுசரிக்கப்பட்டுவருகிறது. காந்தியின் அகிம்சை, புலால் உண்ணாமை, அமைதி வழிப் போராட்டங்கள், பொய் கூறாமை முதலானவை ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்த தினத்திலும், அவர் கொல்லப்பட்ட தினத்திலும் பரப்பப்பட்டு வருகின்றன. 'சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதியாக கோட்சே அறிவிக்கப்பட வேண்டும்' என்ற குரல்களும் தற்காலத்தில் எழுந்து வருகின்றன. காந்தியின் மரணம் குறித்தும், அவர் ஏன் கொல்லப்பட்டார் என்றும், அவரைக் கொன்றவர் யார், அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவர், அந்த அமைப்பின் நீண்டகால செயல்திட்டம் என்ன என்பதையும் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.

காந்தி மரணம்
காந்தி மரணம்
H.CARTIER BRESSON/MAGNUM PHOTOS

காந்தியோடு கடுமையாக முரண்பட்ட அம்பேத்கர், பகத் சிங் முதலானோர், அவரைக் கொல்ல விரும்பவில்லை. தன் வாழ்நாளெல்லாம் அமைதியையும் அகிம்சையையும் போதித்த காந்தி, இறுதியாக துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்; மதவெறியின் வன்முறைக்கு இலக்கானார். காந்தியைக் கொன்றவனை தேசபக்தர் எனக் கூறுவோர் ஆட்சியில் இருக்கும்போது, காந்தியின் மதச் சார்பின்மைக் கொள்கையின் ஆதரவாளர்கள் தேச விரோதிகளாகவே கருதப்படுவர்.

'இந்தியா மதச் சார்பற்ற நாடு; இந்தியாவின் சிறுபான்மையினரை விரட்ட நினைப்பவர்கள் இந்தியாவின் எதிரிகள்!' - காந்தியின் மரணம் உணர்த்தும் செய்தி இதுவே.