Published:Updated:

``முடிந்தது டீல்..? - அ.தி.மு.க செயற்குழுவில் நடந்தது என்ன?"

அ.தி.மு.க செயற்குழு
News
அ.தி.மு.க செயற்குழு

`யார் முதல்வர் வேட்பாளர்?’ என்ற சர்ச்சை, ஒற்றைத் தலைமை விவகாரம், சசிகலா விடுதலை எனப் பல இடியாப்பச் சிக்கல்களுக்கு இடையே, இன்று செப்டம்பர் 28-ம் தேதி கூடிய அ.தி.மு.க செயற்குழு காரசார விவாதங்களுடன் முடிந்திருக்கிறது.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு இன்று காலை 9 மணியிலிருந்தே செயற்குழு உறுப்பினர்கள் வரத் தொடங்கினர். ஜெயலலிதா வருகையின்போது ஏற்பாடு செய்யப்படும் செண்டை மேளங்கள், புலியாட்டம், தப்பாட்டம்போல இந்தக் கூட்டத்துக்கும் விழா ஏற்பாடுகள் களைகட்டின. செயற்குழு உறுப்பினர்கள் 298 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அழைப்பிதழுடன் வந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. வந்தவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என்பதை ஒருவர் செக் செய்துகொண்டிருந்தார். வெளிமாநில, மகளிர் செயற்குழு உறுப்பினர்கல் தரைத்தளத்திலும், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் முதல்தளத்திலும் அமரவைக்கப்பட்டனர். இதர உறுப்பினர்களுக்கு அருகிலிருந்த திருமண மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. செயற்குழுக் காட்சிகள் பெரிய எல்.இ.டி திரையில் உறுப்பினர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.

அ.தி.மு.க செயற்குழு
அ.தி.மு.க செயற்குழு

சரியாக 9:15 மணியளவில் வடசென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷுடன் கழக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமைக் கழகத்துக்கு வந்தார். சிறிது நேரத்தில் அமைச்சர்களும் வருகை தர ஆரம்பித்தனர். அமைச்சர் ஜெயக்குமார் அனைவருக்கும் கட்டைவிரலை உயர்த்தி ‘தம்ப்ஸ்அப்’ காட்டிவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் ஓ.பி.எஸ்-ஸின் கார் உள்ளே நுழைந்தது. `வருங்கால முதல்வர் அண்ணன் ஓ.பி.எஸ்’ என்ற வாழ்த்து கோஷம் விண்ணதிர, புன்னகையுடன் காரைவிட்டு இறங்கிய ஓ.பி.எஸ்., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு கட்சி அலுவலகத்துக்குள் சென்றார். அதற்குள் ஏழெட்டு பேர் அவர் காலில் விழுந்து எழுந்தனர். கடைசியாக 9:45 மணிக்கு முதல்வர் எடப்பாடியின் கார் கட்சி அலுவலகத்துக்கு வந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
``அண்ணன் எப்ப சாவான்... திண்ணை எப்ப காலியாகும்னு சில பேர் நாம எப்ப அடிச்சுக்கிட்டு சாவோம்னு காத்துக்கிட்டு கிடக்குறாங்க. அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கட்சியை ஒற்றுமையாகக் கொண்டு போனாத்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும்.''
பன்னீர்செல்வம்

``நிரந்தர முதல்வர் அண்ணன் எடப்பாடி” என அவர் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். தி.நகர் எம்.எல்.ஏ சத்யா முதல்வரை வரவேற்று அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றார். மேடையில் ஐந்து இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அவைத்தலைவர் மதுசூதனன், கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் மேடையில் அமர்ந்துகொண்டனர். சரியாக 10 மணிக்கு செயற்குழுவை மதுசூதனன் தொடங்கிவைத்தார். முதலாவதாக பதினைந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. `ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்’, `இருமொழிக் கொள்கையில் சமரசமில்லை’, `கொரோனா இடர்பாட்டைச் சரியாகக் கையாண்டதற்கு பாராட்டு...’ எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிட்டு மட்டுமே ஏழு பாராட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

அ.தி.மு.க செயற்குழு
அ.தி.மு.க செயற்குழு

`செயற்குழுவில் நடந்தது என்ன?’ என்று சில உறுப்பினர்களிடம் கேட்டோம். பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் நம்மிடம் பேசினர். ``தீர்மானங்கள் மீதான விவாதம் முடிந்தவுடன், கலகத்தை திண்டுக்கல் சீனிவாசன் ஆரம்பித்துவைத்தார். `அப்படியே, முதல்வர் வேட்பாளர் யாருங்கறதையும் இன்னைக்கே பேசி முடிச்சுடுங்க’ என அவர் கொளுத்திப்போட்டதும் செயற்குழு பற்றிக்கொண்டது. அமைச்சர்கள் செங்கோட்டையனும் தங்கமணியும் இந்தக் கருத்துக்கு வழிமொழியவே, அதுவரை அமைதியாக இருந்த கே.பி.முனுசாமி, `முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்தை அப்புறம் பேசிக்கலாம். முதல்ல 11 பேர் கொண்ட வழிகாட்டுதல்குழுவை நியமிங்க. தேர்தல் நேரத்துல வழிகாட்டுதல்குழு இல்லாம கட்சியை நடத்த முடியாது’ என்று சொல்லி இறுக்கமானார். இருதரப்பும் மாறி மாறிப் பேசிக்கொள்ளவும் செயற்குழு சூடானது. கூட்டம் முடியும் வரை வைத்திலிங்கம் பெரிதாக எதையும் பேசாமல் இருதரப்பையும் சமாதானப்படுத்தும் வேலையை மட்டும் பார்த்தார்.

செயற்குழு டிட் பிட்ஸ்!
செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு, தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை அடங்கிய பை அளிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்களின் மொபைல்போன்கள் கூட்டத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல, ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு, மொபைல் சிக்னல்களும் செயலிழக்க வைக்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமைச்சர் சி.வி.சண்முகம் எழுந்து, `வழிகாட்டுதல்குழு போட வேண்டிய அவசியம் இப்போ என்ன வந்தது... முதல்வர் வேட்பாளர் யாருங்கறதுதான் இப்ப மக்கள்கிட்டயும் கட்சிக்காரங்ககிட்டயும் எழுந்திருக்கிற கேள்வி. அதுக்கு முதல்ல பதில் சொல்லியாகனும்’ என்று ஆவேசமானதை பன்னீர்செல்வமே எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், சண்முகத்துக்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தன்னுடைய ஆதரவாளரான முன்னாள் எம்.பி லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்க பன்னீர் முயன்றார். இதற்கு சண்முகம் உடன்பட மறுக்கவே, மாவட்டம் பிரிக்கப்படவில்லை. அதிருப்தியடைந்த லட்சுமணனும் தி.மு.க-வுக்கு தாவிவிட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சண்முகத்தைத் தொடர்புகொண்ட பன்னீர், சமாதானம் பேசியதாகக் கூறப்பட்டது. தனக்கு ஆதரவாக சண்முகம் இருப்பார் என பன்னீர் கருதியிருந்த நிலையில், எடப்பாடிக்கு ஆதரவாக அவர் முஷ்டி முறுக்கியதை பன்னீர் எதிர்பார்க்கவில்லை.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

மைக் பிடித்த கே.பி. முனுசாமி, `இரண்டு அணிகளும் ஒன்றிணைந்தபோதே, வழிகாட்டுதல்குழு போடணும்னு முடிவு செஞ்சிருந்தோம். மூணு வருஷம் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் குழு அமைக்கலை. இதுக்கு ஏன் பயப்படணும்... இரட்டைத் தலைமையில கட்சி ஒற்றுமையாகத்தானே போகுது. வெளியில மீடியாக்காரங்களுக்கு நாமே தீனி கொடுக்கக் கூடாது. வழிகாட்டுதல்குழு அமைச்சாதான் கட்சி உயிர்ப்போட இருக்குறதா தொண்டன் நம்புவான்’ என்றார். இதை, சில அமைச்சர்களும் செயற்குழு உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. முதல்வர் வேட்பாளரை இந்த செயற்குழு கூட்டத்திலேயே தீர்மானிக்க வேண்டும் என்று முடிவாக இருந்தனர். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா எழுந்து, `இப்படி நமக்குள்ளேயே வேற்றுமை இருந்தா வெளியில இருக்குற சிலருக்கு இது லாபமா போயிடும். ஒற்றுமையா தேர்தலை சந்திச்சாதான் வெற்றி கிடைக்கும்’ என்று மறைமுகமாக சசிகலாவைக் குறிப்பிட்டுப் பேசினார். ஆனாலும் சலசலப்பு அடங்கவில்லை.

அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறிய பன்னீர் பேச ஆரம்பித்தார். `அம்மாவால நான் மூன்று முறை முதல்வராக அடையாளப்படுத்தப்பட்டவன். என் மேல அம்மா எவ்வளவு அன்புவெச்சிருந்தாங்கனு எல்லாருக்கும் தெரியும். அந்த நம்பிக்கையை நான் கடைசிவரை காப்பாத்தினேன். அண்ணன் எப்ப சாவான்... திண்ணை எப்ப காலியாகும்னு சில பேர் நாம எப்ப அடிச்சுக்கிட்டு சாவோம்னு காத்துக்கிட்டு கிடக்குறாங்க. அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கட்சியை ஒற்றுமையாகக் கொண்டு போனாத்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும். வெளியில இருக்குற சூழல், நமக்கு அவ்வளவு சாதகமா இல்லை. அதை புரிஞ்சுக்கிட்டு பேசுங்க’ என்று அமர்ந்தார். முதல்வர் பதவிக்கு தன்னைவிடத் தகுதியான ஆள் கட்சிக்குள் கிடையாது என்பதை மறைமுகமாக பன்னீர் குத்திக்காட்டினார். அதுவரை அமைதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி பேச எழுந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் சீட் நுனிக்கு வந்தனர்.

அ.தி.மு.க செயற்குழு
அ.தி.மு.க செயற்குழு

`அம்மாவால நானும் அடையாளப்படுத்தப்பட்டவன்தான். 1989 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்’ என்று பன்னீருக்கு, தான் சீனியர் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்த எடப்பாடி, `நாம ஒற்றுமையா தேர்தலைச் சந்திக்கணும்கிறதுதான் என்னுடைய விருப்பம். இங்கே வந்திருக்குற எல்லாருக்குமே எம்.எல்.ஏ ஆகணும், அமைச்சர் ஆகணும்கிற கனவு இருக்கும். அம்மா இருந்தவரைக்கும் அந்தக் கனவு எல்லாருக்கும் பலிச்சுது. வெல்லம் வியாபாரம் செஞ்சுக்கிட்டிருந்த நான், இன்னிக்கு முதலைச்சர் ஆகியிருக்கேன்னா அதுக்கு அம்மாதான் காரணம். அம்மாவோட வழியில நடக்குற நான், அதே வழியிலதான் தேர்தலையும் சந்திப்பேன். அதுக்கு நீங்க எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்’ என்று பேசிவிட்டு அமர்ந்தார். அதாவது, செயற்குழு உறுப்பினர்களுக்கு எம்.எல்.ஏ சீட் ஆசைகாட்டி தன் பக்கம் இழுத்தார் எடப்பாடி. இதை பன்னீர் தரப்பு எதிர்பார்க்கவில்லை.

செயற்குழு டிட் பிட்ஸ்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக உளவுத்துறை நோட் போட்டிருப்பதால், பெல்ஜிய தயாரிப்பான எஃப்.என்.எஃப் 2000 ரக துப்பாக்கிகளோடு பாதுகாப்புப் படையினர் அ.தி.மு.க அலுவலகத்தைச் சுற்றிவந்தனர்.

கடைசியாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, பன்னீர், எடப்பாடி ஆகியோர் பேசிக்கொண்டனர். இதன்படி, செப்டம்பர் 30-ம் தேதி கழக ஒருங்கிணைப்பாளர்கள், இணை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் ஒன்றுகூடி விவாதிப்பது என்றும், அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவெடுத்து அறிவிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இருவரில் ஒருவர்தான் முதல்வர் வேட்பாளராக முடியும். விட்டுக் கொடுக்கும் மற்றவருக்கு கட்சி என்பது டீல். ஆனால், இரட்டை இலைக்கு கையெழுத்திடும் உரிமையை யார் விட்டுக் கொடுப்பார்கள்... தேர்தலில் கட்சி ஜெயிக்கவில்லையென்றால் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குபவரின் அரசியல் எதிர்காலம் என்னாகும் என்பதெல்லாம் கேள்விக்குறி. தற்போதைக்கு முதல்வர் பதவிக்கான ரேஸிலிருந்து விலகும் முடிவில் பன்னீர் முழுமனதாக இல்லை. இருதரப்பும் அமர்ந்து பேசும்போது டீலில் மாற்றம் வரலாம். அக்டோபர் 7-ம் தேதி இறுதி முடிவு தெரியவரும்” என்றனர்.

கையில் நவீன துப்பாக்கி
கையில் நவீன துப்பாக்கி

ஐந்து மணிநேரம் மாரத்தான் ஓட்டப்பந்தயமாக ஓடிய செயற்குழுவில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதற்குத் தீர்வு காண திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால், வழிகாட்டுதல்குழுவுக்கு தீர்வு காண தேதி குறிக்கவில்லை. வழக்கமாக கட்சியின் எந்தக் கூட்டமாக இருந்தாலும் அமைச்சர் ஜெயக்குமார்தான் வெளியே வந்து மீடியாக்களுக்கு விளக்கமளிப்பார். ஆனால், இந்தமுறை கே.பி.முனுசாமி விளக்கமளித்தார். அவருடன் அமைச்சர்கள் வேலுமணி, செல்லூர் ராஜூ, செங்கோட்டையன், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் நின்றிருந்தனர். அக்டோபர் 7-ம் தேதி கணக்கை முனுசாமி விளக்குவதை தலையாட்டியபடி வேலுமணியும் வைத்திலிங்கமும் ஆமோதித்தனர்.

``சசிகலா குறித்து ஏதும் பேசப்பட்டதா?” என செயற்குழு உறுப்பினர்களிடம் கேட்டோம். ``அப்படி எதுவும் பேசவில்லை. பன்னீரும் எடப்பாடியும் சசிகலா குறித்துப் பேசியிருந்தால், அவர்கள் தலைமையைக் குறைத்து மதிப்பிடுவதுபோல ஆகியிருக்கும். சிலர் கூறிவருவதுபோல சசிகலாவால்தான் முதல்வர் பதவி கிடைத்தது என்று எடப்பாடி எந்த இடத்திலும் பேசவில்லை” என்றனர்.

அ.தி.மு.க செயற்குழு
அ.தி.மு.க செயற்குழு
இருதரப்புக்கும் `டீல்’ ஏறக்குறைய முடிந்துவிட்டாலும், அதற்கான `கண்டிஷன்கள்’ பற்றி இனிமேல்தான் பேசப்படும் என்று தெரிகிறது. `கண்டிஷன்’களை காற்றில் பறக்கவிடுவதில் எடப்பாடி தரப்பு பெயர்பெற்றது என்பதால், அவர்களை நம்ப பன்னீர் தரப்பு தயாரில்லையாம். ஆகவே, அக்டோபர் 7-ம் தேதி வரை இந்த ஆடுபுலி ஆட்டம் முடியாது என்கிறார்கள்.