Election bannerElection banner
Published:Updated:

`குடும்பத் தலைவிக்கு ரூ.1,000; எழில்மிகு மாநகரங்கள்!’ - திருச்சி தி.மு.க கூட்டத்தின் ஹைலைட்ஸ்

திருச்சி தி.மு.க கூட்டம்
திருச்சி தி.மு.க கூட்டம்

``நாம் கொள்கைக்குச் சொந்தக்காரர்கள். அந்தக் கொள்கையைச் செயல்படுத்தும் கடமை நமக்குத்தான் இருக்கிறது. அந்தக் கடமையை நாம்தான் செய்தாக வேண்டும். நம்மைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது” - ஸ்டாலின்.

`மனிதக்கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, பட்டியலினத்தவர்களுக்கு இருமடங்கு கல்வி உதவித்தொகை, குடிநீர், விவசாயம்’ எனப் பத்து ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை திருச்சி கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

தி.மு.க
தி.மு.க

`விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திருச்சி சிறுகனூரில் தி.மு.க சார்பில் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம், மாநாடுபோல் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், `தமிழகத்துக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை ஸ்டாலின் அறிவிக்கவிருக்கிறார்’ என முன்னரே தெரிவிக்கப்பட்டது. இதில் பெருமளவில் தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அப்படி என்னதான் அறிவிக்கப்போகிறார் என்று எல்லோரது பார்வையும் இம்மாநாட்டை நோக்கியே இருந்தது.

இந்தநிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தி.மு.க தலைவர் ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை 11:30 மணியளவில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில், அவருக்கு கே.என்.நேரு தலைமையில் தொண்டர்களின் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது
தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மதியம் 1 மணியளவில் ஸ்டாலின், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தார். மாநாட்டுத் திடலின் நுழைவாயிலில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் தி.மு.க கொடியை ஏற்றிவைத்தார். பின்பு ஆறே முக்கால் மணியளவில் மேடை ஏறினார் ஸ்டாலின். இக்கூட்டத்தில் லட்சகணக்கான தி.மு.க தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மைக்கைப்பிடித்துப் பேசினார். ``1996-ம் ஆண்டு தொண்டர் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார் ஸ்டாலின். பின்பு இரு சக்கர வாகனத்தில் ஸ்டாலின் வந்து சேர்ந்தார். அதேபோல இன்றும் காவல்துறை செய்த தவறுகளால், போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டிருக்கிறது. வேனிலிருந்து இறங்கி, காரில் ஏறி வந்திருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பாடாலூர் வரையிலும் வாகனங்கள் நின்றுகொண்டிருக்கின்றன. அவர்களும் வந்து சேர்ந்திருந்தால் இந்தத் திடல் பத்தாது. தமிழகத்தின் விடியலுக்கான முழக்கத்தை ஸ்டாலின் எழுப்பிவருகிறார். ஸ்டாலின் என்றால் உழைப்பு, தி.மு.க தொண்டர்கள் அத்தனை பேரும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்போம். நமது ஆட்சிதான் மலரப்போகிறது. அதற்காக உழைக்க வேண்டும்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ``மனிதக்கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, பட்டியலினத்தவர்களுக்கு இரு மடங்கு கல்வி உதவித்தொகை குடிநீர், விவசாயம், வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கம், குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத்தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம். இந்த இலக்குகளை எட்டியாக வேண்டும்” என்றார்.

தி.மு.க தலைவர்
தி.மு.க தலைவர்

தொடர்ந்து, ``அறிஞர் அண்ணா முதன்முதலில் முதல்வரானபோது சொன்ன வரிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. எல்லா எண்ணங்களும் ஓர் அடிப்படையான லட்சியத்தை நோக்கியே வட்டமிடுகின்றன. மக்களுக்கு நல்வாழ்வு தர வேண்டும் என்ற லட்சியம். லட்சியம் மிகப்பெரியது. நான் சாமானியன். ஆனால் உங்கள் தோழன். ஆகவே என்னுடைய திறமையை நம்பி அல்ல, உங்கள் எல்லோருடைய திறமையையும் நம்பி இந்தப் பணியில் ஈடுபடுகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ``அதேபோல் உங்கள் மீது நம்பிக்கைவைத்து இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறேன். கோடிக்கணக்கான மக்களின் ஆதரவோடு நாம் அமைக்கும் ஆட்சி, இவற்றை நிறைவேற்றித் தரும் ஆட்சியாக அமையும். ஏழு கோடி மக்களின் இதயங்களை வெல்வதன் மூலமாக, இந்த ஏழு தொலைநோக்குத் திட்டங்களையும் நம்மால் செயல்படுத்திக் காட்ட முடியும். கழக ஆட்சி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் ஆட்சி இல்லை.

தி.மு.க கூட்டம்
தி.மு.க கூட்டம்

ஓர் இனத்தின் ஆட்சியாக அமையும். தனிப்பட்ட ஓர் அரசியல் இயக்கத்தின் கொள்கையை மட்டுமல்லாமல். இந்த மனித சமுதாயத்தின் உயர்ந்த லட்சியங்களை அடையக்கூடிய ஆட்சியாக அமையும். நாம் கொள்கைக்குச் சொந்தக்காரர்கள். அந்தக் கொள்கையைச் செயல்படுத்தும் கடமை நமக்குத்தான் இருக்கிறது. அந்தக் கடமையை நாம்தான் செய்தாக வேண்டும். நம்மைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. இன்னும் இரண்டே மாதங்கள்தான் இருக்கின்றன, தி.மு.க ஆட்சிக்கட்டிலில் அமர. அப்படி அமையும் அரசு, தனிப்பட்ட ஸ்டாலினின் அரசாங்கம் அல்ல. நம் அனைவரின் அரசாங்கமாக இருக்கும். அதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு