அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதைத் தொடர்ந்து மாவட்டவாரியாகத் தொண்டர்களைச் சந்தித்துவருகிறார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நடந்த வரவேற்பு விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது, ``தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக-வை வீழ்த்திவிடலாம் எனக் கனவு காணுகிறார். அதிமுக-வை வீழ்த்த ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும், அத்தனையுயையும் மக்கள் துணைகொண்டு வீழ்த்துவோம். அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குக் குடும்பம் கிடையாது, அவர்கள் மக்கள்தான் குடும்பம் என வாழ்ந்து மறைந்தனர்.

ஆனால் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதிமுக-வில் சாதாரண தொண்டன்கூட முதலமைச்சராக வர முடியும். சந்தர்ப்ப சூழ்நிலையால் இன்று ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். மக்களின் குறைகளைத் தீர்க்கவே ஸ்டாலினை முதல்வராக அமரவைத்திருக்கிறார்களே ஒழிய, மக்களை பலிவாங்க அல்ல.
நீங்கள் மக்களை மறந்தால், மக்கள் உங்களை மறப்பார்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். குடும்ப ஆட்சி நடைபெற்ற இலங்கையின் இன்றைய நிலையை மனதில் வைத்துக்கொண்டு ஸ்டாலின் ஆட்சி நடத்த வேண்டும். தனது குடும்பத்தின் அதிகார மையங்களை ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதேநிலை நீடித்தால் இலங்கையில் நடந்ததைப்போல தமிழ்நாட்டில் ஸ்டாலின் குடும்பத்துக்கும் நடக்கும்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாமல், கவலைப்படாமல் ஸ்டாலின் போட்டோ சூட் நடத்திக்கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆகியும் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஸ்டாலின் இதுவரை என்ன செய்திருக்கிறார்... அனைத்துத் துறைகளிலும் லஞ்சம். திமுக அமைச்சர்கள் காலை முதல் மாலை வரை லஞ்சம் வாங்கி, கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து, பதவியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
உலகின் பெரிய பணக்காரராக வருவதற்காக ஸ்டாலின் இந்த ஆட்சியைப் பயன்படுத்திவருகிறார்.
மேட்டூர் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, மக்கள் வெள்ளத்தில் சிக்கியபோதும் யாருமே சென்று மக்களைப் பார்க்கவில்லை. அதிமுக-வில் பிளவை ஏற்படுத்தி, தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்க ஸ்டாலின் திட்டமிட்டார். அவருடன் இணைந்து அதிமுக-வின் இரு பெரும் தலைவர்களுக்கும், அதிமுக-வுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் ஓபிஎஸ் துரோகம் செய்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் திருட்டுத்தனமாக ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச் சென்ற ஆவணங்களையும், பொருள்களையும் மீட்டுத் தர முடியாத அரசு திமுக. பலம் பொருந்திய அதிமுக-வுக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன... மக்கள் விரோத அரசு எப்போது போகும் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் வரும்” என்றார்.

நேற்று இரவு நடந்த கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதுமிருந்து முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கானோர் திரட்டப்பட்டிருந்தனர். இன்று காலை முன்னாள் அமைச்சர்களுடன் சேர்ந்து பழநி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி இரண்டு முறை சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.