Published:Updated:

கனவாகிப் போகுமோ... கனவு இல்லத் திட்டம்?

கனவாகிப் போகுமோ... கனவு இல்லத் திட்டம்?
பிரீமியம் ஸ்டோரி
கனவாகிப் போகுமோ... கனவு இல்லத் திட்டம்?

எழுத்தாளர்களுக்கான ‘கனவு இல்லத் திட்டம்’ அறிவிப்பு வெளியாகி ஓராண்டு முடியப்போகிறது, அரசாணை வெளிவந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.

கனவாகிப் போகுமோ... கனவு இல்லத் திட்டம்?

எழுத்தாளர்களுக்கான ‘கனவு இல்லத் திட்டம்’ அறிவிப்பு வெளியாகி ஓராண்டு முடியப்போகிறது, அரசாணை வெளிவந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.

Published:Updated:
கனவாகிப் போகுமோ... கனவு இல்லத் திட்டம்?
பிரீமியம் ஸ்டோரி
கனவாகிப் போகுமோ... கனவு இல்லத் திட்டம்?

``தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் தேசிய, மாநில மற்றும் உலகளாவிய அமைப்புகளின் முக்கிய விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் வீடு வழங்கப்படும்’’ என்று கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

இதற்காக பிப்ரவரி 28-ம் தேதி தமிழ் வளர்ச்சி இயக்குநர் வெளியிட்ட அரசாணையில், `தேசிய அளவிலான சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது மற்றும் நோபல் பரிசு (தமிழ் இலக்கியத்துக்கு) ஆகிய விருதுகளைப் பெற்றவர்களுக்கும், எதிர்காலத்தில் இவ்விருதுகளைப் பெறும் தமிழ்நாட்டைப் சேர்ந்தவர்களுக்கும் மற்றும் பிற மாநிலத்தவராயினும் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் எல்லைக்குள் அமையும் வகையில் வீடு வழங்கப்படும். ஏற்கெனவே வீடு வைத்திருக்கும் விருதாளர்கள், மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றுபவர்கள், ஓய்வூதியம்பெறும் விருதாளர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். ‘கனவு இல்லம்‘ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நேர்வில் ஒவ்வோர் நிதியாண்டுக்கும் அதிகபட்சமாகப் பத்து விருதாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.tn.gov என்ற வலைதளத்தில் விருது விண்ணப்பத்தை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை, `தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலதிக விவரங்களுக்கு 044-28190412, 044-28190413 ஆகிய தொலைபேசி எண்களிலோ, tamilvalarchithurai@gmail.com, mailto:tamilvalarchithurai@gmail.com ஆகிய மின்னஞ்சலிலோ தொடர்புகொள்ளலாம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எழுத்தாளர்களுக்கான ‘கனவு இல்லத் திட்டம்’ அறிவிப்பு வெளியாகி ஓராண்டு முடியப்போகிறது, அரசாணை வெளிவந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. என்ன நடக்கிறது என்று அறிவதற்காக மேலே குறிப்பிட்ட எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசினோம்... “இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் மத்திய, மாநில அரசுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற எவரது விண்ணப்பமும் இல்லை. விண்ணப்பித்தவர்கள் அனைவரும் ஏதோ தனியார் அமைப்பு கொடுத்த விருதுகளை வைத்தே விண்ணப்பித்திருக்கிறார்கள். மேலும், எழுத்தாளர்கள் கேட்கும் இடத்தில் வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதால், வீட்டு வசதி வாரியத்திடமும் இணைந்து செயல்படவேண்டியிருக்கிறது. இதனாலேயே தாமதம் ஆகிறது” என்றனர்.

கனவாகிப் போகுமோ... கனவு இல்லத் திட்டம்?

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், தமிழ்நாடு அரசின் உ.வே.சா விருது பெற்ற இதழாளருமான மருது அழகுராஜிடம் இது குறித்துக் கேட்டோம். “சங்க காலம் தொடங்கி எழுத்தாளர்கள் சமூகம் திறமையோடு சேர்ந்து, வறுமையோடுதான் வாழ்கிறது. அப்படியானவர்களுக்கு அரசு கொடுக்கும் உயரிய விருதுகள் அவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்குமே தவிர வாழ்க்கைக்கு உதவியாக இருப்பதில்லை. எழுத்தாளர் ஒருவர் 50 வயதை அடைந்த பிறகுதான் அவருக்கு விருதுகள் கிடைக்கின்றன. அதனால் எந்தப் பயனும் இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் எழுத்தாளர்களுக்கு ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற திட்டத்தின்கீழ் வீடு வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால், இதுவரை எந்தவிதமான முன்னெடுப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. விருது பெற்றவர்கள் முதியவர்கள். அவர்களுக்கு இந்த வீட்டை விரைவில் கொடுத்தால்தான் தங்களின் இறுதிக்காலத்தை நிம்மதியாக வாழ்ந்து கழிப்பார்கள். கனவு இல்லத் திட்ட அறிவிப்பு ‘கனவாக’வே ஆகிவிடாதபடிக்கு முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வைத்தார்.

தி.மு.க மகளிரணி துணைச் செயலாளர், எழுத்தாளர் சல்மாவிடம் பேசினோம். “கேரளாவில் இருக்கும் எழுத்தாளர்கள் பொருளாதாரரீதியில் நல்ல இடத்தில் இருப்பார்கள், சமூகத்திலும் அவர்களுக்குப் பெரிய அளவில் மரியாதை இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் பெரிய எழுத்தாளர்களாக அறியப்பட்டவர்கள்கூட வறுமையில் இருப்பார்கள். வசதியற்ற வாடகை வீட்டில் வசிப்பது என்று மிகுந்த சிரமத்தில் தவிப்பார்கள். அதை உணர்ந்துதான் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்குவது, வீடு வழங்குவது போன்ற திட்டங்களை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது முக்கியமான அறிவிப்பு. இதன் மூலம் நிறைய எழுத்தாளர்கள் பயனடைவார்கள். விருது பெற்றவர்களின் விவரங்களைச் சேகரித்து, அதனடிப்படையில் மூத்தவர்கள் முதல் இளையவர்கள் வரை விரைவில் இந்தத் திட்டத்தால் பலனடையும் வகையில் திட்டத்தைச் செயல்படுத்துவார் முதல்வர்” என்றார்.

மருது அழகுராஜ், சல்மா
மருது அழகுராஜ், சல்மா

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இது குறித்துக் கேட்டோம். “விருது பெற்றுள்ள எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் வீடு / வீட்டுமனைகள் பெற விரும்புகிறார்கள் என்ற அவர்களது விருப்பங்கள் தனித்தனியே பெறப்பட்டு, வீட்டு வசதித்துறை மூலம் ஒதுக்கீடு பெறவேண்டி அந்தத் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இடங்களை ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குவார்கள். அதன் அடிப்படையில் விருதாளர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுவருகிறது” என்றார்.

‘சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்’ என்கிற சமூக யதார்த்தத்தை மாற்றும் அரசின் முக்கியமான அறிவிப்பு இது. விரைந்து செயல்படுத்தும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism