Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `நான் பேசியவை யதார்த்தமானவை; ஆதாரம் இல்லை!’ -ஆணையத்தில் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி பத்திரிகையாளர்களிடம் நான் பேசியது யதார்த்தமானதுதான். எந்த ஆதாரத்தையும் வைத்துக்கொண்டு அப்படிப் பேசவில்லை” என ரஜினிகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பதில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018, மே 22-ம் தேதி நடந்த மக்களின் முற்றுகைப் போரட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமிக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் 27-வது கட்ட விசாரணை கடந்த 19-ம் தேதி தொடங்கி இன்று 23-ந்தேதியுடன் நிறைவுபெற்றது. 27-வது கட்ட விசாரணையில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதற்காக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளவர்களுக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இந்நிலையில், ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஒருநபர் விசாரணை ஆணையத்தின் 27-வது கட்ட விசாரணையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 48 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். முதற்கட்டமாக சிபிஐ 27 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து கூடுதலாக அதில் 44 பேர் பெயர்களை சேர்த்தது. பொதுமக்கள் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதில் காவலர்களைத் தவிர சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. காவலர்களிடம் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் குடியிருப்பில் தங்கியிருந்தவர்கள், ஸ்டெர்லைட் ஆலையின் பணியாளர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தன்று பணியில் இருந்தவர்கள், அப்போதைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அடுத்தடுத்த கட்டங்களின் விசாரணயில் விசாரணை நடத்தப்படவிருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து இதுவரை 1,052 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 719 பேர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். 1,126 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு நபர் ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணை வரும் மே மாதம் 17-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் கேட்டு ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வழக்கறிஞர் மூலமாகக் கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கும் ஆணையத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,

ஆறுதல் கூறிய ரஜினி
ஆறுதல் கூறிய ரஜினி

``துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தூத்துக்குடியில் நேரில் சென்று கள நிலவரத்தை அறிந்துகொண்டும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டும் வந்தபோது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. அன்று எதிர்பாராதவிதமாக நடந்த அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில், பத்திரிகையாளர்களிடம் நான் பேசியது யதார்த்தமாகச் சொன்னதுதான். எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டும் நான் பேசவில்லை. ஆகவே, நான் பேசியதற்கு எவ்வித ஆதாரமும், நாளிதழ் செய்திகளோ, எழுத்துபூர்வமான ஆதாரங்களோ என்னிடம் கிடையாது” என தெரிவித்துள்ளார். இருப்பினும் ரஜினிகாந்திடம் கேள்விகள் மூலம் சில சந்தேகங்களைத் தீர்க்க வேண்டியிருப்பதால், கொரோனா பரவல் நிலைமை சீரானதும் பின்னாள்களில் விசாரணை நடத்துவோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு