Published:Updated:

`பற்றவைத்த ட்வீட்; திடீர் சலசலப்பு!'- சசிகலா ரிலீஸ் விவகாரத்தில் நடப்பது என்ன?

சசிகலா
சசிகலா

``ஆசீர்வாதம் ஆச்சாரி அரசியல் செய்வதற்காகவும் ஆளுங்கட்சியினருக்குள் சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற ஒரு ட்வீட் போட்டிருக்கிறார்”

சசிகலா ஆகஸ்ட் 14-ம் தேதி விடுதலை ஆகப்போகிறார் என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி போட்ட ஒரு ட்வீட்டால் அரசியல் களம் அனல் பறந்துகொண்டிருக்கிறது. ஆனால், நன்னடத்தை அடிப்படையில் வெளிவரும் பட்டியலில் சசிகலா பெயர் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்கள் பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகள். அரசியலுக்காகவும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்துவதற்காகவும் ஆச்சாரி இது போன்ற வேலைகளைச் செய்திருப்பதாகக் கொந்தளிக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். என்னதான் நடக்கிறது சசிகலா விவகாரத்தில் என்று விசாரிக்கத் தொடங்கினோம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கத்தைக் குறித்து விவாதம் நடத்தியவர்கள் இன்று சசிகலா எப்போது வெளிவரப்போகிறார் என்பது குறித்து விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் மீதும் அவரது உறவுகளான இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்கள் மீதும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சசிகலா `விடுதலை' ரகசியம்; முதல்வருக்கு ஆபத்தா? உளவுத்துறை பதில் என்ன? - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

அதற்குப் பிறகு சிறை சென்ற சசிகலா குடும்பத்தினர் பெங்களூர் சிறையில் இன்றும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா நாளை வெளியாகப் போகிறார், இன்று வெளியாகப் போகிறார் என்று பரபரப்பு நிலவி வந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்விவகாரம்தான் பெரும் சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது. சசிகலா விடுதலை என்ற தகவல் அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் வட்டமடிக்கத் தொடங்கியுள்ளது.

ஆசீர்வாதம் ஆச்சாரி
ஆசீர்வாதம் ஆச்சாரி

சசிகலா விடுதலை பற்றி சிறைத்துறை நிர்வாகம் இதுவரை எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதனால் சசிகலா வெளியே வருவது வெறும் வதந்திதான் என்று பலராலும் சொல்லப்பட்டாலும் எப்படி இருந்தாலும் இன்னும் சில மாதங்களில் சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கு ஆன அனைத்து ஏற்பாடுகளையும் அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதேபோல ஆகஸ்ட் 14 ஆம் தேதி நன்னடத்தையில் வெளிவரும் பட்டியலில் சசிகலா பெயர் இல்லை என்று பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

சசிகலா விவகாரத்தில் என்ன நடக்கிறது அ.தி.மு.க உள்விவகாரம் அறிந்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம். ”சசிகலா ஆகஸ்ட் மாதம் வெளிவருவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. கர்நாடக சிறையிலிருந்து சுதந்திர தினத்துக்கு முன்பு விடுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ள 65 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்திருக்கிறார்கள். இதில் சசிகலாவின் பெயர் இல்லை. அவருக்கு இன்னும் 6 மாதக் கால தண்டனை உள்ளது. முன்கூட்டியே விடுவிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை எனக் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் சசிகலா எப்படி வெளியில் வர முடியும்" என்றனர்.

அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம்
அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம்

மேலும், ``ஆசீர்வாதம் ஆச்சாரி அரசியல் செய்வதற்காகவும், ஆளுங்கட்சியினருக்குள் சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். ஆகஸ்ட் மாதம் சசிகலா வெளியில் வருகிறார் என்றால் அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. இப்போது அதனை வெளியில் சொல்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது. அவர் நினைத்தது போல் சர்ச்சைகள் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளன. ஆளும்கட்சியில் உள்ளவர்கள் சிலர் மன்னார்குடி வகையறாக்களைத் தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது குறித்த தகவல் அ.தி.மு.க தலைமைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. இவ்விவகாரத்தை முதல்வர் எளிதாகக் கையாள்வார்” என்று முடித்துக்கொண்டனர்

ஆகஸ்ட் 14 ; நன்னடத்தை; சசிகலா விடுதலை! - டெல்லிக்கு உறுதி கொடுத்தாரா எடியூரப்பா?

இதுகுறித்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜசெந்தூர் பாண்டியனிடம் பேசினோம். ``நான் யூகத்திற்கெல்லாம் பதில் சொல்வதில்லை. முதலில் சட்டம் என்ன சொல்கிறது என்றால், எந்த ஒரு தண்டனைக் கைதி தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தாண்டுகிறாரோ அப்போதே ரெமிசனுக்காக (தண்டனை குறைப்புச் சலுகை) தயார் ஆகிறார் அல்லது உரிமையாகிறார். இதன் அடிப்படையில் சசிகலாவிற்கு வழங்கப்பட்ட 4 வருடச் சிறைத் தண்டனையில் அதாவது 48 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது 32 மாதக் கால தண்டனையை அனுபவித்தாலே தண்டனைக் குறைப்பு சலுகைக்கு வந்துவிடுகிறார். அதன் அடிப்படையில் கடந்த வருடம் 2019 செப்டம்பரில் சிறைவாசிகளுக்குக் கிடைக்கக் கூடிய சலுகைகளைப் பெறக்கூடியவராகத் தகுதியாகிறார்.

சசிகலா
சசிகலா

இந்நிலையில் சசிகலா அவர்கள் சிறையில் நடந்துகொள்ளும் விதத்தின் அடிப்படையில் எஸ்.பி 30 நாள்கள், ஐ.ஜி 60 நாள்கள் வரை தண்டனை நாள் குறைப்பு வழங்கலாம். (இது ஸ்பெஷல் ரெமிசன்) இதனை அதிகாரிகள் வழங்கியிருந்தால் கடந்த டிசம்பர் மாதத்திலேயே சசிகலா அவர்கள் வெளியில் வந்திருப்பார். இச்சட்ட நுணுக்கத்தை வைத்துக்கொண்டுதான் அடுத்தடுத்த நகர்வுகளைச் செய்துகொண்டிருந்தேன். கொரோனா விவகாரத்திற்குப் பிறகு சசிகலாவைச் சந்திக்கமுடியவில்லை.

நாங்கள் நடத்திவரும் சட்டப்பணியைப் பார்த்துக்கூட ஆசீர்வாதம் ஆச்சார்ய அந்த ட்வீட் போட்டிருக்கலாம். அப்படி இல்லையென்றால் யூகத்தின் அடிப்படையில் கூட போட்டிருக்கலாம். அவர் ஏன் போட்டார் எதற்காகப் போட்டார் என்ற விவகாரத்திற்குச் செல்ல நான் விரும்பவில்லை. எல்லோரும் ஒன்றைச் சொல்கிறார்கள் இன்றுவரையிலும் அபராதத் தொகை கட்டவில்லை. அதனால் சசிகலா வெளியில் வருவது சிரமம் என்கிறார்கள். நான் கேட்கிறேன் அபராதத் தொகை கட்டுவதற்கு ஒரு நாள் ஆகுமா? இதையெல்லாம் ஒரு காரணமாகச் சொல்லாதீர்கள். சசிகலா கூடிய விரைவில் வெளியில் வருவார். அதில் எந்த மாற்றமுமில்லை” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு