Published:Updated:

`அண்ணன் - தங்கை - விஜயாம்மா’ ஒய்.எஸ்.ஆர் குடும்பத்தில் என்ன நடக்கிறது?! -அரசியல் சண்டையா, நாடகமா?

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நினைவுதினத்தை ஒட்டி ஹைதராபாத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் ஒன்றை விஜயாம்மா ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவுக்கு முக்கியப் பிரமுகர்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்த நிலையில், ஜெகன் மிஸ்ஸிங்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் தெலங்கானா, ஆந்திரா என்று இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த மாநிலங்கள் இரண்டாகப் பிரிவதற்கு முன்பு இருந்த ஒருங்கிணைந்த ஆந்திராவை ஒன்றிணைத்து வைத்திருக்கும் சக்தி படைத்த கடைசி மனிதராக அறியப்பட்டவர் ராஜசேகர ரெட்டி. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகவும், ஆந்திராவின் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி கடந்த 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் கடப்பா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் இருந்த ஜெகன், ஆந்திரா முழுவதும் 3,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் நடைப்பயணம் மேற்கொண்டு ஆந்திர மக்களைச் சந்தித்தார்.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி
Photo: Twitter / YSRCParty

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, காங்கிரஸிலிருந்து விலகி 2012-ம் ஆண்டில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்று தனது தந்தையின் பெயரில் கட்சி தொடங்கினர். அவரின் தாயார் விஜயலட்சுமி, `விஜயாம்மா’ என்று எல்லோராலும் அறியப்பட்டவர். இந்தக் கட்சியின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான ஜெகன், ஒரு வருடத்துக்கும் மேல் சிறையில் இருந்தார். இந்த காலகட்டத்தில், ஜெகனின் தாயாரும், தங்கை ஷர்மிளாவும் மாநிலம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். தெலங்கானா என்ற புதிய மாநிலம் பிரிவதை எதிர்த்து சிறையில் ஜெகனும், வெளியில் விஜயம்மாவும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

தெலங்கானாவில் ஜெகன் தங்கை ஷர்மிளாவின் புதிய கட்சி... ஸ்கெட்ச் கே.சி.ஆருக்கா பா.ஜ.க-வுக்கா?

கடந்த 2014-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனது முதல் பொதுத்தேர்தலைச் சந்தித்தது. இந்தத் தேர்தலில் 67 இடங்களில் வெற்றிபெற்றது. ஆந்திராவில் சந்திரபாபு தலைமையிலான அரசு அமைந்தது. ஜெகன் எதிர்க்கட்சித் தலைவரானார். 2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குக் கடுமையாக உழைத்த ஜெகன், மாநிலம் முழுவதும் 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக நடைப்பயணம் மேற்கொண்டார். செல்லுமிடமெல்லாம், ``ஜெகன் வர வேண்டும். எங்களுக்கு ஜெகன் வேண்டும்" என்ற முழக்கங்கள் மேலோங்கின. தேர்தல் முடிவில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்து ஜெகன் முதல்வரானார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி
Twitter

ஆந்திராவின் முதல்வராக ஜெகன் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவருகிறார்கள். இது ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் அவர்களின் குடும்பத்துக்குள் புகைந்துகொண்டிருந்த அரசியல் சண்டை இப்போது பற்றி எரிவதாகக் கூறப்படுகிறது. ஜெகன் முதல்வரானதும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் தலையிடுவதை விரும்பவில்லை. விஜயாம்மா கௌரவத் தலைவராக இருந்தபோதிலும் பெரும்பாலும் எந்த அரசியல் செயல்பாட்டிலும் ஈடுபடுவதில்லை. இதற்கும் ஜெகனின் உத்தரவுதான் காரணம் என்கிறார்கள். ஷர்மிளா மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டபோதும் அது மறுக்கப்பட்டதாம். ஜெகன் இல்லாத நேரத்தில் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கப் பாடுபட்ட இருவருமே கட்சியில் ஓரங்கட்டப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா' - புதுக்  கட்சி தொடங்கினார் ஜெகன்மோகன் தங்கை ஷர்மிளா!

இதனால், அதிருப்தியில் இருந்த ஷர்மிளா தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். சொன்னபடி தனது தந்தையில் பெயரிலேயே `ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி’ என்ற புதிய கட்சியையும் தொடங்கினார். கட்சி ஆரம்பவிழாவில் விஜயாம்மாவும் பங்கேற்றார். தங்கையின் இந்தச் செயல்பாடு ஜெகனுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையின்போது ஷர்மிளா, ஜெகனை நேரில் சந்தித்து ராக்கி கட்டுவது வழக்கம். இந்த ஆண்டு ட்விட்டரில் மட்டுமே வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஜெகன்மோகன் ரெட்டி, ஷர்மிளா
ஜெகன்மோகன் ரெட்டி, ஷர்மிளா
Twitter

அதுமட்டுமின்றி, கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஒய்.எஸ்.ஆர்-ருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் ஒன்றை விஜயாம்மா ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவுக்கு முக்கியப் பிரமுகர்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்த நிலையில்,

தந்தையின் நினைவிடத்தில் ஜெகன்மோகன் ரெட்டி
தந்தையின் நினைவிடத்தில் ஜெகன்மோகன் ரெட்டி
Twitter

ஆந்திரா முதல்வரும், அவருடைய மகனுமான ஜெகன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக, கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் உள்ள ஒய்.எஸ்.ஆரின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். இதனால் அவர்களுக்குள் இருக்கும் விரிசல் வெளிச்சமானது.

இது குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரவிச்சந்திர ரெட்டியிடம் பேசினோம். ``ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவருக்குத் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். ஒரே போன்ற கருத்துகள் இருக்க வேண்டும் என்பது இல்லையே... ஷர்மிளா தெலங்கானாவில் கட்சி ஆரம்பிப்பது குறித்து ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேசும்போது `நான் ஆந்திராவிலேயே இருக்க விரும்புகிறேன். ஆந்திராவின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். இங்குள்ள சவால்களையெல்லாம் கடந்து ஆந்திர மக்களுக்குப் பல்வேறு நன்மைகள் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்று கூறிவிட்டார். ஜெகன்மோகன் தெலங்கானாவில் ஒரு புதிய கட்சியைத் தொடங்குவதை விரும்பவில்லை. குடும்பமாக அவர்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. குடும்பம் வேறு கட்சி வேறு" என்றார்.

ரவிச்சந்திர ரெட்டி
ரவிச்சந்திர ரெட்டி

மேலும், ``தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் மிகவும் பிரபலமானவர். அங்குள்ள மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று ஷர்மிளா எண்ணுகிறார். அங்குள்ள மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஷர்மிளாவும் தனது தந்தையைப் பின்பற்றி தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்கியிருக்கிறார். இந்தியாவில் விருப்பப்படும் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அது அவர்களின் சொந்த விருப்பம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு கட்சியில் இருப்பது புதிதொன்றும் இல்லையே... அம்மா என்றைக்குமே அம்மாதான். அந்தக் கட்சியில் அவருக்கு எந்தப் பொறுப்பும் இதுவரை கிடையாது. விஜயாம்மா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் பதவி வகிக்கிறார். அம்மா என்ற முறையில் அந்தக் கட்சியின் தொடக்கவிழாவில் அவர் பங்கேற்றிருக்கிறார். அதைத் தவிர வேறொன்றும் இல்லை" என்று கூறினார்.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி... ஒரு ரூபாய் மருத்துவர் டு ஆந்திராவின் ராஜாவானது வரை! பிறந்த தினப் பகிர்வு

ஆந்திராவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆந்திராவிலுள்ள அரசியல் விமர்சகர் ரவியிடம் பேசினோம். ``ஜெகன்மோகன் குடும்பத்தில் பெரிய பிரச்னை எதுவும் இல்லை. அதேசமயத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைத் தெலங்கானாவில் விரிவாக்கம் செய்யவும் அவருக்கு விருப்பம் இல்லை. ஜெகன் தெலங்கானாவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஷர்மிளாவை வைத்து ஒரு முன்னோட்டம் பார்க்கிறார் என்றுதான் தோன்றுகிறது. தெலங்கானாவில் நடைபெறும் சூழலைத் தொடர்ந்து கவனித்துவருகிறார். தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இங்கு 2023-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் அரசின் மீது சிறிய அதிருப்தி நிலவுகிறது. பல்வேறு கட்சிகளும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்" என்றார்.

அரசியல் விமர்சகர் ரவி
அரசியல் விமர்சகர் ரவி

மேலும், ``ஒய். எஸ்.ஆருக்கு தெலங்கானா மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. இந்த முறை தெலங்கானாவில் பா.ஜ.க-வுக்கு பெருமளவு வாய்ப்பு கிடையாது. இங்கு காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எண்ணிக்கையிலான வாக்குவாங்கி உள்ளது. இந்தமுறை ஷர்மிளா தேர்தலைச் சந்தித்தால், காங்கிரஸ் ஓட்டு ஷர்மிளா பக்கம் சாய வாய்ப்புகள் அதிகம். இங்குள்ள கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் ஓட்டுகள் ஷர்மிளாவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ஒவைசி-யும் குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தைக் கொண்டிருக்கிறார். அவர்களின் செயல்பாடுகளும் கவனிக்கத்தக்கவை. ஷர்மிளா, விஜயாம்மா இருவருமே ஏற்கனவே செல்வாக்கு பெற்றவர்கள்தான். இவர்களோடு பவன் கல்யாண், சிரஞ்சீவி போன்ற யாரேனும் இணைந்தால் வரும் தேர்தலில் அவர்களுக்கு வெற்றிவாய்ப்பு மிக அதிகம்" என்றார்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் ஆந்திர அரசியலில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார் ஜெகன். இந்நிலையில் தெலங்கானாவில் தன்னுடைய கட்சியை விரிவாக்கம் செய்வதில் ஜெகனுக்கு உடன்பாடு கிடையாது. அதேநேரத்தில், சமீபகாலமாக தொடர்ச்சியாகத் தெலங்கானாவிலுள்ள ரெட்டி சமூகத்தினர் பாஜக-வில் சேர்ந்துவருகிறார்கள். நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சியும் பலவீனமாகிவருகிறது. தெலங்கானாவில் பெரும்பான்மையைப் பெற பாஜக பல்வேறு முயற்சிகளைத் தொடர்ச்சியாகச் செய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தமிழக பாஜக தலைவர் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட விஷயமும் பேசப்பட்டது.

ஷர்மிளா, விஜயாம்மா
ஷர்மிளா, விஜயாம்மா
Twitter

தெலங்கானா பாஜக-வின் கைகளில் சென்றுவிடுவதை விரும்பாத ஜெகன், தன் தங்கையைக் களமிறக்கியிருக்கிறார். ஷர்மிளா தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்கியதற்குப் பின்னால் ஜெகனுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கும் என்றே ஆந்திரா, தெலங்கானா அரசியலை நன்கு கவனித்துவரும் தமிழக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஷர்மிளா பாஜக-வின் பி-டீமாக தான் தெலுங்கானாவில் கட்சி ஆரம்பித்துள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், வேறு எந்தக் கட்சிக்காகவும் நான் வரவில்லை. மேலும், இந்தக் கட்சி வேறு எந்தக் கட்சியின் கீழும் ஒன்று சேராது என்று அழுத்தமாகக் கூறி அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஷர்மிளா.

கைது செய்யப்பட்ட ஷர்மிளா
கைது செய்யப்பட்ட ஷர்மிளா
Twitter
ஷர்மிளா
ஷர்மிளா
Twitter

இவை அனைத்தும் நாடகமா என்ற சர்ச்சைகள் ஒருபுறமிருக்க, ஷர்மிளா தெலங்கானாவில் தீவிர அரசியலில் ஈடுபட்டுவருவதோடு அங்கு நடக்கும் பிரச்னைகளுக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்திவருகிறார். சமீபத்தில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட ஆறு வயது சிறுமிக்கு நீதி கேட்டு சிங்கரேணி காலனி பகுதியில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டார். காவல்துறையினர் போராட்டத்தைக் கைவிடக் கோரிய நிலையிலும் போராட்டம் தொடரப்பட்டதால், காவல்துறையினர் ஷர்மிளாவைக் கைதுசெய்தனர். கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்ற கண்டனப் போராட்டத்திலும் கைதுசெய்யப்பட்டார். நாளுக்கு நாள் தெலங்கானாவில் ஷர்மிளாவின் அரசியல் இமேஜ் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு